Friday, April 6, 2012

ஏப்ரல் 5, 2012

மனித உறவுகள் கிடைக்காத நிலையில் விண்ணகத்
தந்தையின் உதவியை இயேசு நாடினார் - திருத்தந்தை

   புனித வியாழனன்று மாலையில் உரோம் நகரின் புனித ஜான் லாத்தரன் பசிலிக்காப் பேராலயத்தில் இறைவனின் இரவு உணவு திருப்பலியை நிறை வேற்றிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், பின்வரு மாறு மறையுரை வழங்கினார்.
   இயேசு திருநற்கருணையை நிறுவினார் என்ற நிகழ்வு புனித வியாழக்கிழமை இரவின் மையமாக, மகுடமாக உள்ள மறைபொருள் என்றாலும், இந்த இரவை இருளின், போராட்டத்தின் இரவாகவும் நாம் சிந்திக்க வேண்டும். இருள், இரவு ஆகியவை உறவுகள் அற்ற, தொடர்புகள் அற்ற ஒரு நிலையை வெளிப்படுத்தும் அடையாளங்கள். ஒளியில் வாழமுடியாத தீய சக்திகள் இருளில் மட்டுமே வாழமுடியும். ஒளியான இறைமகன் கிறிஸ்து இருளை வெல்வ தற்காக அந்த இரவுக்குள் நுழைந்தார்.
   கிறிஸ்து கெத்சமனி தோட்டத்தில் மேற்கொண்ட போராட்டங்களில் நண்பர்களின் துணை அவருக்குக் கிடைக்காமல் போயிற்று. மனித உறவுகள் எதுவும் தனக்குக் கிடைக்காத நிலையில் இறைமகன் இயேசு விண்ணகத் தந்தையின் துணையை நாடினார். தன் போராட்டத்தின்போது இயேசு பயன்படுத்திய 'அப்பா' என்ற வார்த்தை 'தந்தை' என்ற பொதுப்படையான வார்த்தை அல்ல. மாறாக, ஒரு சிறு குழந்தை உரிமையோடு, பாசத்தோடு அழைக்கும் 'அப்பா' என்ற சொல். இந்தச் சொல்லால் கடவுளை அழைக்க இஸ்ரயேல் மக்கள் பயந்தனர்.
   "அப்பா, தந்தையே எல்லாம் உம்மால் இயலும். இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல; உம் விருப்பப்படியே நிகழட்டும்" (மாற்கு 14:36) என்ற இறைவார்த்தை, ஒரு மனிதன் என்ற முறையில் இயேசு தன் துன்பத்தைக் கண்டு பயந்தாலும், இறைவனின் திருவுளத்தை நிறை வேற்றுவதிலேயே கருத்தாய் இருந்தார் என்பதை வலியுறுத்திக் கூறுகிறது. இறைவ னின் விருப்பத்திற்கு எதிராக, இறைவனுக்கே எதிராக மனிதர்கள் தங்களை முன் னிறுத்தும்போது, உண்மைக்கு எதிராகவும் செயல்படுகின்றனர்.
   மனித வரலாற்றில் இந்த எதிர்ப்பு அடிக்கடி நிகழ்ந்துள்ளதால், கடவுள், உண்மை, வாழ்வு ஆகிய உயரிய விழுமியங்களுக்கு எதிராக மனித குலத்தின் போராட்டம் இன்றும் தொடர்கிறது. சொந்த விருப்பம், இறைவனின் விருப்பம் என்ற போராட் டத்தில் இயேசு காட்டிய பணிவும், கீழ்ப்படிதலுமே உண்மையான விடுதலைக்கு மனிதர்களை அழைத்துச் செல்லும். அந்த பணிவை நாம் ஒவ்வொருவரும் பெறுவ தற்கு இறைவரம் வேண்டுவோம்.
   இவ்வாறு மறையுரை வழங்கிய திருத்தந்தை, இத்திருப்பலியில் உரோம் மறை மாவாட்டத்தைச் சேர்ந்த பன்னிரு குருக்களின் பாதங்களை
க் கழுவினார். இந்த திருப்பலியின்போது திரட்டப்பட்ட காணிக்கைத் தொகை அனைத்தும் சிரியாவில் துன்புறும் மக்களுக்கு அனுப்பப்படும் என்று வத்திக்கான் ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.