Monday, October 31, 2011

அக்டோபர் 30, 2011

இயேசுவின் எடுத்துக்காட்டான வாழ்வு 
நமக்கு வழிகாட்டுதலாய் இருக்கட்டும் - திருத்தந்தை

   இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், மறைநூல் அறிஞரும் பரிசேயரும் என்னென்ன செய்யும்படி உங்களிடம் கூறுகின்றார்களோ அவற்றைக் கடை பிடித்து நடந்து வாருங்கள், ஆனால் அவர்கள் செய்வது போல் செய்யாதீர்கள் என்று இயேசு கூறும் ஞாயிறு திருப்பலி வாசகம் குறித்து எடுத்துக் கூறினார்.
   சொல்வதைச் செயலில் காட்டாத மறைநூல் அறிஞர் மற்றும் பரிசேயர்கள் போலல்லாமல் அன்பெனும் முதற்கட்டளையைத் தன் வாழ்வில் கடைப்பிடித்த பின்னரே இயேசு மற்றவர்களுக்கு போதித்தார். தந்தையின் விருப்பத்திற்கு விசுவாசமாக நடந்த இயேசுவின் பாதையைப் பின்பற்றி செல்ல வேண்டியவர்களாக நாம் ஒவ்வொருவரும் இருக்கிறோம் என்றார் பாப்பிறை.
   தாங்கள் செய்வதெல்லாம் மக்கள் பார்த்துப் புகழவேண்டும் என்பதற்காகவே செய்யும் தலைவர்கள் குறித்து தன் கண்டனத்தை வெளியிடும் இயேசு, 'உங்களுள் பெரியவர் உங்களுக்குத் தொண்டனாக இருக்கட்டும்' எனக் கூறியதையும் எடுத் துரைத்து, இயேசுவின் எடுத்துக்காட்டு நமக்கு வழிகாட்டுதலாய் இருக்கட்டும் என மேலும் உரைத்தார்.
   தன் மூவேளை செப உரையின் இறுதியில், தாய்லாந்து மற்றும் இத்தாலியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை நினைவு கூர்ந்து அவர்களுக்கு தன் செப உறுதிகளை வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். இத்தாலி நாட்டின் லிகூரியா மற்றும் தொஸ்கானா பகுதிகளில் இடம்பெற்ற மழையால் பாதிக்கப்பட்ட மக்களையும், தாய்லாந்தின் பெருமழையால் இடம்பெற்றுள்ள உயிரிழப்புகள் மற்றும் பெரும் சேதங்களையும் நினைவு கூர்ந்து அவர்களுக்கு தன் ஆழ்ந்த செபங்களை வழங்குவதாகத் தெரிவித்தார் பாப்பிறை.

Monday, October 24, 2011

அக்டோபர் 23, 2011

அன்பின் அடையாளங்களாக திகழ்ந்தவர்கள்
புதிய புனிதர்கள் - திருத்தந்தை

   “சவேரியன் மறைபோதகர்கள்” என அழைக்கப் படும் வெளிநாட்டு மறைபோதக சவேரியார் சபை யினை ஆரம்பித்த இத்தாலிய ஆயர் அருளாளர் குய்தோ மரிய கொன்ஃபோர்த்தி, பிறரன்புப் பணி யாளர் ஆண்கள் சபையையும் புனித மரியின் இறை பராமரிப்பு பெண்கள் சபையையும் தொடங்கியவரும் “ஏழைகளின் தந்தை” என அழைக்கப்படுபவருமான இத்தாலியரான அருட்பணி லூயிஜி குவனெல்லா, இஸ்பெயினின் சாலமங்காவில் பிறந்து, புனித வளன் பணியாளர் பெண்கள் சபையைத் தொடங்கிய அருளாளர் போனிஃபாசியா ரொட்ரிக்கெஸ் தெ காஸ்த்ரோ ஆகிய மூவரையும் இஞ்ஞாயிறு திருப்பலியில் திருச்சபையின் புதிய புனிதர்களாக திருத்தந்தை அறிவித்தார்.
   மறைபரப்புப் பணிகளுக்கான ஆர்வத்தையும் அர்ப்பணத்தையும் தூண்டுவதை நோக்கமாகக் கொண்ட மறைபரப்பு ஞாயிறன்று, இறைவனுக்கும் அடுத்து வாழ்பவருக் குமான உயரிய அன்பின் அடையாளமாக இருந்த மூவரை புனிதர்களாக அறிவிப்பதில் தான் மகிழ்வதாக உரைத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
   முழு இதயத்தோடு இறைவனை அன்பு செய்வது, மற்றும் நம் அடுத்திருப் போரையும் நம்மைப் போல் அன்புசெய்வது என்பதை வலியுறுத்திக் கூறும் இந்த ஞாயிறு நற்செய்தியை மையமாக வைத்து இந்தப் புதிய புனிதர்கள் எவ்வாறு இறை அன்பின் சாட்சிகளாக விளங்கினார்கள் என்பதையும் தன் மறையுரையில் எடுத் துரைத்தார் பாப்பிறை.
   இத்திருப்பலிக்குப் பின் உரோம் நகரின் தூய பேதுரு பேராலய வளாகத்தில் கூடியிருந்த விசுவாசிகளோடு இணைந்து மூவேளை செபத்தை செபித்த திருத்தந்தை, அவர்களுக்கு வழங்கிய உரையில், இந்த மூன்று புனிதர்களும் ஆரம்பித்த துறவு சபைகளின் அங்கத்தினர்களுக்கு வாழ்த்தையும் ஊக்கத்தையும் வழங்கியதோடு, இத்தாலியின் அசிசியில் இவ்வியாழனன்று இடம்பெற உள்ள உலக அமைதிக்கான பல்மதங்களின் கூட்டம் வெற்றியடைய அன்னைமரியின் பரிந்துரையை வேண்டி செபிக்குமாறும் அனைவரிடமும் விண்ணப்பித்தார்.

Wednesday, October 19, 2011

அக்டோபர் 19, 2011

புதன் மறைபோதகம்: இறைவனின் அன்பு அவரது ஒரே மகனில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது - திருத்தந்தை

   கடந்த சில வாரங்களாகத் தன் புதன் பொது மறைபோதகத்தில் திருப்பாடல்கள் குறித்து தன் கருத்துக்களை மக்களோடு பகிர்ந்து வருகின்ற திருத்தந்தை, உரோம் நகரில் நிறைந்திருக்கும் திருப்பயணிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டத்துக்கு இவ்வாரம் திருப்பாடல் 136 குறித்து எடுத்துரைத்தார்.
   கிறிஸ்தவ ஜெபம் குறித்த நம் மறைக்கல்விப் போதனையின் தொடர்ச்சியாக இன்று திருப்பாடல் 136ஐ நோக்கி நம் பார்வையை திருப்புவோம். 'பெரும்புகழுரை' என அறியப்படும் இந்தத் திருப்பாடல், பாரம்பரியமாகப் பாஸ்காத் திருநாள் உணவின் இறுதியில் பாடப்படும் உன்னத புகழ்ப் பாடலாகும். அதன்படி பார்த்தால், இயேசுவும் அவரின் சீடர்களும் கூட இப்பாடலை இறுதி இரவு உணவின்போது பாடியிருக்க வேண்டும். இந்தத் திருப்பாடலானது 'பிரார்த்தனை' எனும் வடிவத்தைத் தாங்கி, இவ்வுலகப் படைப்பின்போதும் இஸ்ரயேலர்களின் வரலாற்றிலும் இறைவன் ஆற்றிய வல்ல செயல்களைப் புகழ்வதாக உள்ளது. அவரது மீட்புச் செயல்கள் குறித்துக் கூறும் இத்திருப்பாடலின் வரிகள் ஒவ்வொன்றும் 'என்றும் உள்ளது அவரது பேரன்பு' என முடிகிறது. அகிலத்தின் ஒழுங்கமைவுச் சார்ந்த அழகிலும், அடிமைத்தளையி லிருந்து இஸ்ரயேலர்களின் விடுதலை மற்றும் வாக்களிக்கப்பட்ட இடம் நோக்கிய தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் திருப்பயணம் ஆகியவைகளிலும் வெளிப்படுத்தப் பட்டது இறைவனின் மாறாத அன்பே. இறைவனின் வல்ல செயல்கள் குறித்த இந்த உயரிய பிரார்த்தனையை நாம் பாடும்போது, அவரின் கருணைநிறை மற்றும் என்றும் நிலைத்திருக்கும் அன்பின் ஆழமானது, வரவிருக்கும் அவரின் ஒரே மகனில் முழுவதுமாக வெளிப்படுத்தப்பட்டிருப்பதற்கு நன்றி கூறுகிறோம். நம் தந்தையாம் இறைவன் நம்மிடம் எத்துணை அன்பு கொண்டுள்ளார் என்பதையும், நாம் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவதையும், கடவுளின் மக்களாகவே இருப்பதையும் நாம் கிறிஸ்துவில் தெளிவாகக் காண்கிறோம்.
   இவ்வாறு தன் புதன் பொதுமறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

Monday, October 17, 2011

அக்டோபர் 16, 2011

விசுவாசத்தின் ஆண்டை அறிவித்திருக்கிறார் திருத்தந்தை

   இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் தொடங்கி யதன் 50ஆம் ஆண்டை முன்னிட்டு விசுவாசத்தின் ஆண்டை அறிவித்திருக்கிறார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
   புதிய நற்செய்தி அறிவிப்பாளர்களுக்கென்று வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் இஞ்ஞாயிறு காலை திருப்பலி நிகழ்த்தி ஆற்றிய மறையுரையில் திருத்தந்தை விசுவாச ஆண்டை அறிவித்தார். இந்த ஆண்டானது, 2012 அக்டோபர் 11ந்தேதி தொடங்கி கிறிஸ்து அரசர் பெருவிழா வாகிய 2013 நவம்பர் 24 அன்று நிறைவடையும்.
   முழுமையாக மனம் மாறிக் கடவுளிடம் தன்னை அர்ப்பணிக்கும் திருஅருளின் மற்றும் அர்ப்பணத்தின் காலமாகவும், அவரில் நம் விசுவாசத்தை உறுதிப்படுத்தி மகிழ்ச்சியோடு அவரை அறிவிக்கும் காலமாகவும் மனிதரைப் பாலைவன வாழ்வி லிருந்து வெளியே கொணருவதற்கு அகில உலகத் திருச்சபையின் பணிக்கு புதிய உந்துதலைக் கொடுப்பதாகவும் இவ்வாண்டு இருக்கும் எனக் கூறினார் திருத்தந்தை.
   மேலும், ஞாயிறு நண்பகலில் வத்திக்கான் பேதுரு சதுக்கத்தில் கூடியிருந்த சுமார் நாற்பதாயிரம் திருப்பயணிகளுக்கு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, இந்த விசுவாச ஆண்டு குறித்தத் திட்டங்களை விளக்கினார். திருச்சபையின் பணியானது கிறிஸ்துவைப் போன்று கடவுளின் இறையாட்சியை நினைவுகூர்ந்து கடவுள் பற்றிப் பேசுவதாகும், குறிப்பாக தங்களது தனித்துவத்தை இழந்திருக்கும் கிறிஸ்தவர்களுக்கு கடவுள் பற்றி எடுத்துரைப்பதாகும் என்றும் அவர் கூறினார்.
   தனது அப்போஸ்தலிக்கக் கடிதத்தின் மூலமும் இந்த விசுவாசத்தின் ஆண்டு பற்றி விளக்கியுள்ள திருத்தந்தை, கத்தோலிக்கத் திருச்சபையின் மறைக்கல்வி ஏடு வெளியிடப்பட்டதன் 20ம் ஆண்டு அக்டோபரில் நிறைவடைவதால் இந்த விசுவாச ஆண்டு அக்டோபரில் தொடங்குகிறது என்று குறிப்பிட்டுள்ளார். இவ்வாண்டை மதிப்பும் பயனும் நிறைந்த விதமாகக் கொண்டாட வேண்டுமென்று சகோதர ஆயர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுப்பதாகவும், விசுவாசம் பற்றிய அறிவைப் பெறுவதற்கு விசுவாசம் பற்றியத் தெளிவான அறிவைப் பெறுவதற்கு விலை மதிப்பில்லா மற்றும் இன்றியமையாத கருவி கத்தோலிக்கத் திருச்சபையின் மறைக்கல்வி ஏடு என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.

Wednesday, October 12, 2011

அக்டோபர் 12, 2011

புதன் மறைபோதகம்: ஆண்டவரின் செயல்களால் நாம் பெருமகிழ்ச்சி அடைகின்றோம் - திருத்தந்தை

   இன்று தூய பேதுரு பேராலய வளாகத்தில் கூடி யிருந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு 'கிறிஸ்தவ செபம்' குறித்த தன் புதன் பொது மறைபோதகத்தைத் தொடங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
   கிறிஸ்தவ செபம் குறித்த நம் போதனைகளின் தொடர்ச்சியாக இன்று திருப்பாடல் 126-ஐ நாம் சிந்திப்போம். பபிலோனிய நாடுகடத்தலில் இருந்து இஸ்ரயேலர்களை திருப்பி அழைத்து வருவதாக வாக்கு தந்த இறைவன் பிரமாணிக்கமுள்ளவராக இருந்ததற்கு நன்றி கூறும் மகிழ்ச்சி நிறை செபமாக இந்தத் திருப்பாடல் 126 உள்ளது. 'ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்; அதனால் நாம் பெரு
மகிழ்ச்சி யுறுகின்றோம்.'
   நம் வாழ்வு நடவடிக்கைகளிலும், சிறப்பாக, கசப்பானதாக கருமேகம் சூழ்ந்து தோன்றியதாகத் தெரிந்த காலங்களிலும் இறைவன் நம்மீது காட்டிய அக்கறையை நினைவுகூரும்போது, அதே இஸ்ராயேல் மக்கள் கொண்டிருந்த மகிழ்ச்சி மற்றும் நன்றி உணர்வை உள்ளடக்கியதாக நம் செபங்களும் இருக்க வேண்டும். இறைமீட்பு எனும் உதவியை இஸ்ரயேலர்களுக்குத் தொடர்ந்து வழங்குமாறு இறைவனை வேண்டுகிறார் திருப்பாடல் ஆசிரியர். 'கண்ணீரோடு விதைப்பவர்கள் அக்களிப்போடு அறுவடை செய்வார்கள்' என்கிறார்.
   அமைதியான முறையில் தன் முதிர்ச்சி நோக்கி வளரும் விதை என்ற இந்த உருவகம் நமக்கு சொல்ல வருவது என்னவெனில், கடவுளின் மீட்பு என்பது ஏற்கனவே நாம் பெற்றுவிட்ட கொடை, நம் நம்பிக்கையின் நோக்கம், வருங்காலத்தில் நிறைவேற்றப்படவிருக்கும் ஒரு வாக்குறுதி. இதே உருவகத்தை இயேசு கிறிஸ்து, சாவிலிருந்து வாழ்வுக்கும், இருளிலிருந்து ஒளிக்கும் கடந்து செல்வதைப்பற்றி விளக்கும்போது பயன்படுத்துகிறார். இந்த கடந்து செல்தல் என்பது, இயேசுவில் விசுவாசம் கொண்டு அவரின் பாஸ்கா மறையுண்மையில் பங்கு கொள்ளும் ஒவ்வொருவர் வாழ்விலும் இடம்பெற வேண்டியது. இந்த 126ம் திருப்பாடலை செபிக்கும் நாம், 'வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்' என்ற அன்னை மரியின் பாடல் வரிகளை எதிரொலிப்பதுடன், கடவுளின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையுடன் காத்திருப்போம்.
   தூய பேதுரு பசிலிக்கா பேராலய வளாகத்தில் குழுமியிருந்த திருப்பயணிகள் மற்றும் சுற்றுலாப்பயணிகளுக்கு கிறிஸ்தவ செபம் குறித்த இவ்வார மறையுரையை இவ்வாறு வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
   பின்னர் அவர், கடந்த ஞாயிறன்று எகிப்தின் கெய்ரோவில் இடம்பெற்ற வன்முறைகள் குறித்த தன் ஆழ்ந்த கவலையையும் வெளியிட்டார். இவ்வன்முறை யால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுடனும், அமைதியான இணக்க வாழ்வுக்கான அச்சுறுத்தலை எதிர்நோக்கும் எகிப்து குடும்பங்களுடனும் என் ஒருமைப்பாட்டை தெரிவிக்கின்றேன். நீதியையும் மனித குல விடுதலை மற்றும் மாண்பையும் அடிப்படையாகக் கொண்ட உண்மையான அமைதியை சமூகம் பெற ஒவ்வொருவரும் செபிக்குமாறு வேண்டுகிறேன். தேசிய ஐக்கிய நலனுக்காக, ஒவ்வொருவரின் குறிப்பாக சிறுபான்மையினரின் உரிமைகள் மதிக்கப்பட எகிப்து ஆட்சியாளர்களும் அரசியல் மற்றும் மதத்தலைவர்களும் தங்கள் அனைத்து ஆதாரங்களையும் பயன் படுத்த ஊக்கமளிக்கிறேன், என எகிப்து நாட்டிற்கான தன் விண்ணப்பத்தை முன் வைத்த திருத்தந்தை, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

Monday, October 10, 2011

அக்டோபர் 9, 2011

நவீன வாழ்க்கைக்கு மௌனம் தேவை - திருத்தந்தை

   தென் இத்தாலியின் லமேசியா டெர்மே விசுவாசிகள் தங்களது கடும் சமுதாயப் பிரச்சனை களை அன்னை மரியாவிடம் அர்ப்பணிக்குமாறு கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
   கடும் வேலைவாய்ப்பின்மையும் பெருமளவாகக் குற்றங்களும் இடம் பெறும் இத்தாலியின் மிக ஏழைப் பகுதியான கலாபிரியாப் பகுதிக்கு இந்ஞாயிறன்று ஒருநாள் மேய்ப்புப்பணி பயணம் மேற்கொண்ட திருத்தந்தை, அப்பகுதியிலுள்ள பல அன்னைமரியா திருத்தலங்கள் பற்றிக் குறிப்பிட்டு அம்மக்களின் பாரம்பரிய மாதா பக்தியையும் பாராட்டினார். பொதுநலனைக் கட்டி எழுப்புவதில் விசுவாசிகள், தல ஆயர்களுடன் இணைந்து செயல்படுமாறும் வலியுறுத்தினார் திருத்தந்தை.

   மேலும், ஞாயிறு மாலை கலாபிரியாவிலுள்ள கர்த்தூசியன் துறவு இல்லத்திற்கு சென்று உரை யாற்றிய திருத்தந்தை, இக்காலத்துச் சமூகத்தில் அமைதி இல்லாமல் இருப்பது, பலரை மிகவும் பதட்டநிலைக்கு உள்ளாக்குகிறது என்று கூறினார். 
   இப்பகுதியின் பல இளையோர், சமுதாயத்தில் காணப்படும் வெறுமையை எதிர்கொள்ளப் பயந்து, வெறுமையாக உணரும் நேரங்களை இசையிலும் வேறு பல பொழுதுபோக்கிலும் செலவிடுகிறார்கள் என்றார் அவர். அமைதியிலும் தனிமையிலும் நேரத்தைச் செலவிடுவது இறைப் பிரசன்னத்தை உணர உதவும் என்றும் திருத்தந்தை கூறினார்.
   இந்தத் துறவு மடம், 900த்துக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்னர், ஜெர்மானியரும் கர்த்தூசியன் துறவு சபையைத் தொடங்கியவருமான புனித புருனோவால் உருவாக்கப்ட்டது.
   இத்துறவு மடம் அமைந்திருக்கும் செர்ரா சான் ப்ரூனோ என்ற ஊருக்கு இஞ்ஞாயிறு மாலை திருத்தந்தை சென்றபோது முப்பதாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் அவரை வரவேற்றனர்.

Thursday, October 6, 2011

அக்டோபர் 5, 2011

புதன் மறைபோதகம்: நமக்காக தன் வாழ்வையே கையளித்த நல்லாயன் இயேசு - திருத்தந்தை

   உரோம் நகருக்கு வரும் சுற்றுலா மற்றும் திருப்பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகக் காணப் படுவதால், திருத்தந்தையின் இவ்வாரப் புதன் பொது மறைபோதகம் தூய பேதுரு பசிலிக்கா பேராலய வளாகத்திலேயே இடம்பெற்றது. கிறிஸ்தவ செபம் குறித்த நம் மறைபோதகத்தின் தொடர்ச்சியாக இன்று திருப்பாடல் 23 குறித்து நோக்குவோம் எனத் தன் உரையைத் துவக்கினார் பாப்பிறை.
   'ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறை யில்லை' - மிக நேர்த்தியான முறையில் ஆயர் மற்றும் மேய்ச்சல் குறித்து விவரிப்பதாகவும், மக்களால் அதிக அளவு விரும்பப் படுவதாகவும் இருக்கும் இந்த திருப்பாடல் 23, செபத்தின் முக்கிய பண்புக்கூறாக இருக்கும் இறைவனின் அன்புப் பராமரிப்பில் கொள்ளும் தீவிர நம்பிக்கை குறித்துப் பேசுகிறது. பசும்புல் நிலத்தை நோக்கி ஒருவனை வழிநடத்திச் செல்லும் நல் ஆயனாகவும், அவன் அருகேயிருந்து அவனை அனைத்து ஆபத்துகளில் இருந்தும் காப்பவராகவும் இறைவனைக் காட்டி இத்திருப்பாடலைத் துவக்குகிறார் திருப்பாடல் ஆசிரியர். 'அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார். அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்.' அடுத்தக்காட்சியோ, ஆயனின் கூடாரம் நோக்கிச் செல்கின்றது. இக்கூடாரத்தில் இறைவன், அவனை ஒரு விருந்தாளியாக வரவேற்று, உணவு, எண்ணெய், திராட்சை இரசம் எனும் கொடைகளை வழங்குகிறார். 'எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது.'
   ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்வதற்கென வழி நடக்கும் பாதையில் நன்மைத்தனம் மற்றும் இரக்கத்தின் துணை கொண்டு இறைவனின் பாதுகாப்பு, திருப்பாடல் ஆசிரியருடன் இணைந்து செல்கிறது. இறைவனை இஸ்ராயேலின் ஆயனாகக் காணும் இந்த வலிமை மிகுந்த உருவகம், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் எகிப்திலிருந்து வெளியேறியதிலிருந்து, தங்களுக்கு வாக்களிக்கப்பட்ட நிலத்தை வந்தடையும்வரையான மத வரலாற்றில் இணைந்தே வருகிறது. இவ்வுருவகம் தன் கடைமுடிவு வெளிப்பாட்டையும் நிறைவையும் இயேசுவின் வருகையில் கண்டது. நல்லாயனாம் அவர் தன் வாழ்வையே தன் ஆடுகளுக்காகக் கையளித்தார். வானுலகில் நமக்காகக் காத்திருக்கும் மெசியாவின் விருந்திற்கு முன்னோடியாகத் தன் உடலையும் இரத்தத்தையும் கொண்ட விருந்தினை நமக்கெனத் தயாரித்தவர் அவரே.
   இவ்வாறு இப்புதன் பொதுமறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, ஆப்ரிக்காவின் கொம்பு நாடுகளான திஜிபுத்தி, எத்தியோப்பியா, கென்யா, சொமாலியா, உகாண்டா ஆகியவைகளுக்கான தன் சிறப்பு விண்ணப்பத்தையும் விடுத்தார்.
   ஆப்ரிக்கக் கொம்பு நாடுகளின் பஞ்சம் குறித்தச் செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணமாகவே உள்ளன. மனித குல நெருக்கடியை சமாளிக்கும் வழிகள் குறித்து ஆராயும் நோக்கில் இங்கு கூடியிருக்கும் அந்நாட்டிற்கான குழுவுக்கு என் ஊக்கத்தை வழங்குகின்றேன். பஞ்சத்தால் துன்புறும் மக்களுக்கான உதவிகளுக்கென ஏற்கனவே விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ள கேன்டர்பரி பேராயர் அவர்களின் பிரதிநிதி ஒருவரும் இக்குழுவில் இடம்பெற்றுள்ளார். போதிய உணவு மற்றும் தண்ணீர் இன்மையாலும் நோய்களாலும் ஒவ்வொரு நாளும் உயிரிழக்கும் குழந்தை களுக்காகவும், பெருந்துன்பங்களை அனுபவித்து வரும் நம் எண்ணற்ற சகோதர சகோதரிகளுக்காகவும் செபிக்குமாறும், உதவிகளை வழங்குமாறும் சர்வதேச சமுதாயத்திடம் மீண்டும் ஒருமுறை நான் விண்ணப்பிக்கின்றேன். இவ்வாறு ஆப்ரிக்கக் கொம்பு நாடுகளுக்கான விண்ணப்பத்தை விடுத்த திருத்தந்தை, அனை வருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

Monday, October 3, 2011

அக்டோபர் 2, 2011

தங்கள் காவல்தூதர்களை உதவிக்கு அழைக்க கிறிஸ்தவர்கள் மறக்கக்கூடாது - திருத்தந்தை

   கிறிஸ்தவர்கள் தங்கள் வாழ்க்கை முழுவதற்கும் உதவி செய்வதற்குத் தங்களது காவல்தூதர்களை அழைக்குமாறு இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையில் நினைவுபடுத்தினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
   கோடை விடுமுறை முடிந்து முதல் முறையாக வத்திக்கானிலிருந்து மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, அன்பு நண்பர்களே, நம் ஆண்டவர் மனித வரலாற்றில் எப்போதும் அருகிலும் செயல் திறத்துடனும் இருக்கிறார், தமது தூதர்களின் தனித்துவமிக்க பிரசன்னத்தோடு நம்மைப் பின்தொடருகிறார் என்று உரைத்தார்.

   வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த சுமார் இருபதாயிரம் விசுவாசிகளுக்கு உரையாற்றிய அவர், அக்டோபர் 2ம் தேதி திருச்சபை காவல் தூதர்கள் விழாவைச் சிறப்பிக்கின்றது, இவர்கள், ஒவ்வொரு மனிதன் மீதும் கடவுள் கொண்டுள்ள அக்கறையைத் தெரிவிக்கும் பணிகளைச் செய்கிறார்கள் என்றார்.
   இத்தூதர்கள், மனித வாழ்வின் தொடக்கமுதல் மரணம் வரை தங்களது இடைவிடாத பாதுகாப்பால் அவ்வாழ்வைச் சூழ்ந்துள்ளார்கள் என்றும் கூறிய திருத்தந்தை, செபமாலை அன்னையின் மணிமகுடத்தை இந்தத் தூதர்களே அலங்கரித்துள்ளார்கள் என்பதையும் சுட்டிக் காட்டினார்.
   17ம் நூற்றாண்டில் திருத்தந்தை பத்தாம் கிளமெண்ட் காவல்தூதர்கள் விழாவை அகிலத் திருச்சபையில் கொண்டு வந்தார்.
   மேலும், இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தின் அடிப்படையில் சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்ட திருத்தந்தை 16ம் பெனடிக்ட், கடவுள் தமது நண்பர்களுக்காகத் திட்டம் வைத்திருக்கிறார், ஆனால் இதற்கான மனிதனின் பதில் அவனின் பிரமாணிக்கமற்ற வாழ்வால் பின்னுக்குத் தள்ளப்படுகிறது என்று கூறினார்.
   இறைவனின் விலைமதிப்பில்லாத கொடையாகிய அவரது ஒரே மகனை ஏற்பதற்குக்கூட தற்பெருமையும் தன்னலமும் தடையாய் இருக்கின்றன, எனவே இறைவனின் திராட்சைத் தோட்டத்தில் வேலை செய்ய அழைக்கப்பட்டுள்ள ஒவ்வொருவரும் கிறிஸ்துவுக்கு முழுவதும் விசுவாசமாக இருக்கும் வாழ்வைப் புதுப்பிக்கும் பொறுப்பைக் கொண்டுள்ளார்கள் என்றார் பாப்பிறை 16ம் பெனடிக்ட்.