Wednesday, April 3, 2013

ஏப்ரல் 3, 2013

இயேசு உயிரோடிருப்பதை அறிந்த அவர்கள் உள்ளம்
நம்பிக்கையால் நிரப்பப்பட்டது - திருத்தந்தை

   வத்திக்கான் தூய பேதுரு சதுக்கத்தில் இப்புதன் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு பொது மறைபோதகம் வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ், கத்தோலிக்கர்களின் விசுவாச அறிக்கை குறித்து தன் கருத்துகளை எடுத்துரைத்தார். இப்புதன் மறைபோதகத்தில் கலந்து கொள்ள இத்தாலியின் மிலான் நகரிலிருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளையோர் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 
அன்பு சகோதர சகோதரிகளே,
   இன்று நாம் விசுவாச ஆண்டின் மறைக்கல்விக்கு திரும்புகிறோம். விசுவாச அறிக்கையில் நாம் இவ்வாறு கூறுகிறோம்: "மறைநூலின் படியே, அவர் மூன்றாம் நாளில் மீண்டும் உயிர்த்தெழுந்தார்." கிறிஸ்தவ செய்தியின் மையமாக இருக்கும் இயேசுவின் இந்த உயிர்ப்பு நிகழ்வைத்தான் நாம் கொண்டாடி கொண்டிருக்கிறோம். கொரிந்து நகர கிறிஸ்தவர்களுக்கு புனித பவுல் இவ்வாறு எழுதுகிறார்: "நான் பெற்றுக்கொண்டதும் ... உங்களிடம் ஒப்படைத்ததும் இதுவே: மறைநூலில் எழுதியுள்ளவாறு கிறிஸ்து நம் பாவங்களுக்காக இறந்து, அடக்கம் செய்யப்பட்டார். மறைநூலில் எழுதியுள்ளவாறே மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்பட்டார். பின்னர் அவர் கேபாவுக்கும் அதன்பின் பன்னிருவருக்கும் தோன்றினார்" (1 கொரிந்தியர் 15:3-5). இது பாஸ்கா மறைபொருளை, உயிர்த்த இயேசுவின் முதல் காட்சிகளோடு பறைசாற்றுகிறது: இயேசுவின் இறப்பும் உயிர்ப்புமே நம் நம்பிக்கையின் மையம். திருத்தூதர் கூறுவது போன்று, "கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை பயனற்றதே. நீங்கள் இன்னமும் உங்கள் பாவங்களில் வாழ்பவர்களாவீர்கள்" (15:17).
   இயேசுவின் உயிர்ப்பின் மீதான விசுவாசத்தை மறைப்பதற்கான முயற்சிகளால், நம்பிக்கையாளர்கள் மத்தியிலேயே சந்தேகங்களும் தடங்கல்களும் எழுந்துள்ளன. விசுவாசத்தை விட மற்ற பொருட்கள் முக்கியத்துவம் பெறுவதாலோ, வாழ்வின் கிடைமட்ட நிலையாலோ, விசுவாசம் உறுதியற்றதாக, நீர்த்துப் போனதாக இருக்கிறது என்றே நாம் சொல்ல வேண்டும். ஆனால், உயிர்ப்பே நமக்கு நம்பிக்கை தருகிறது, ஏனெனில் இது நமது வாழ்வை திறப்பதுடன், உலக வாழ்வை கடவுளின் நித்திய எதிர்காலத்துக்கும், முழுமையான மகிழ்ச்சிக்கும், தீமை, பாவம், சாவு ஆகியவை மீதான வெற்றிக்கும் கொண்டு செல்கிறது. இது வாழ்வின் அன்றாட எதார்த்தங்களை நாம் அதிக நம்பிக்கையுடனும், துணிவுடனும் எதிர்கொள்ள உதவுகிறது. கிறிஸ்துவின் உயிர்ப்பு இந்த அன்றாட உண்மைகளின் மீது புதிய ஒளியை வீசுகிறது. கிறிஸ்துவின் உயிர்ப்பே நமது வலிமை!
   கிறிஸ்துவின் உயிர்ப்பின் மீதான விசுவாச உண்மை எவ்வாறு பரவியது? புதிய ஏற்பாட்டில் இரண்டு விதமான சாட்சிகள் உள்ளனர்: சிலர் விசுவாசத்தை வாயார அறிக்கையிடுகிறவர்கள். மற்றவர்கள், உயிர்ப்பு நிகழ்வு மற்றும் அது தொடர்பான உண்மைகளுடன் தொடர்புடையவர்கள். விசுவாசத்தை அறிக்கையிடுதலுக்கு சான்றாக, பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்தில் இவ்வாறு எழுதுகிறார்: "இயேசு ஆண்டவர் என வாயார அறிக்கையிட்டு, இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என நீங்கள் உள்ளூர நம்பினால் மீட்பு பெறுவீர்கள்" (10:9). திருச்சபையின் தொடக்க காலத்தில் இருந்தே, இயேசுவின் இறப்பு மற்றும் உயிர்ப்பின் மறைபொருள் இணை பிரியாததாகவும் தெளிவானதாகவும் உள்ளது.
   இரண்டாவது, நற்செய்திகளில் நாம் காண்கிற சான்றுகள். இந்த நிகழ்வுக்கு முதலில் சான்று பகர்ந்தவர்கள் பெண்களே என்பதை நாம் கவனிக்க வேண்டும்.  காலையிலேயே இயேசுவின் உடலில் நறுமணப் பொருட்களை பூசுவதற்காக சென்ற அவர்கள் முதல் அடையாளத்தை காண்கிறார்கள்: வெறுமையான கல்லறை. அதன் தொடர்ச்சியாக, "சிலுவையில் அறையப்பட்ட நாசரேத்து இயேசுவைத் தேடுகிறீர்கள்; அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்; அவர் இங்கே இல்லை" என்று அறிவித்த கடவுளின் தூதரை சந்திக்கிறார்கள். அன்பினால் உந்தப்பட்ட இந்த பெண்கள், தாங்கள் நம்பியதுடன் பிறரிடமும் அதை பரப்பினார்கள். இயேசு உயிரோடிருக்கிறார் என்பதை அறிந்த மகிழ்ச்சியை அவர்கள் தங்களுக்குள் வைத்திருக்க முடியவில்லை, அவர்கள் உள்ளம் நம்பிக்கையால் நிரப்பப்பட்டது. தீமை மற்றும் சாவின் மீது வெற்றிகொண்டு உயிர்தெழுந்த ஒருவரில் நாம் நம்பிக்கை கொண்டிருக்கிறோம். நாமும் துணிவுடன் வெளியே சென்று, இந்த மகிழ்ச்சியையும் ஒளியையும் நாம் வாழும் அனைத்து இடங்களுக்கும் கொண்டு செல்வோம்.
   புதிய ஏற்பாட்டின் விசுவாசத்தை அறிக்கையிடும்போது, ஆண்கள், மட்டுமே உயிர்ப்பின் சாட்சிகளாக நினைவுகூரப்படுகிறார்கள், திருத்தூதர்கள், பெண்கள் அல்ல. இது ஏனென்றால், அக்கால யூத சட்டத்தின்படி பெண்களும் குழந்தைகளும் தகுந்த சாட்சிகளாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இருந்தாலும் நற்செய்திகளில், பெண்கள் முதன்மையான அடிப்படை இடம் பெறுகிறார்கள். நற்செய்தியாளர்கள் நிகழ்ந்ததை எளிமையாக எடுத்துரைக்கிறார்கள்: பெண்களே முதல் சாட்சிகளாக இருக்கிறார்கள். மனித சூழ்நிலைகளுக்கு ஏற்ப கடவுள் தேர்வு செய்வதில்லை என்பதை இது நமக்கு கூறுகிறது: இயேசு பிறந்தபோது எளிய, தாழ்ச்சியுள்ள இடையர்களே முதல் சாட்சிகளாக இருந்தார்கள், உயிர்ப்பின்போது பெண்கள் சாட்சிகளாக இருக்கிறார்கள். இது அழகாக இருக்கிறது, இதுவே பெண்களின் பணி, தாய்மார்களும் பெண்களும் தங்கள் பிள்ளைகள் மற்றும் பேரப் பிள்ளைகளிடம் கிறிஸ்து உயிர்த்துவிட்டார் என்பதற்கு சான்று பகர வேண்டும். விசுவாச கண்களுக்கு எப்பொழுதும் எளிய மற்றும் ஆழ்ந்த அன்பின் பார்வை தேவை. திருத்தூதர்களுக்கும் சீடர்களுக்கும் உயிர்த்த கிறிஸ்துவை நம்புவது கடினமாக இருந்தது, இருந்தாலும் பெண்களுக்கு அப்படியில்லை! பேதுரு கல்லறைக்கு ஓடினார், ஆனால் வெற்று கல்லறை முன்பாக நின்றுவிட்டார்; தோமா இயேசுவின் உடலின் காயங்களை தனது கரங்களால் தொட்டுப் பார்த்தார். நமது விசுவாசப் பயணத்தில் நமது விசுவாச பயணத்தில் கடவுள் நம்மை அன்பு செய்கிறார் என்பதை அறிந்து உணர்வது அவசியம், அன்பு செய்ய பயப்படாதீர்கள்: விசுவாசம் வாயாலும் இதயத்தாலும், வார்த்தையாலும் அன்பாலும் அறிக்கையிடப்படுகிறது.
   பெண்களுக்கு பிறகு வேறு பலருக்கும் காட்சியளித்த இயேசு புதியவராக தோன்றுகிறார்: அவர் சிலுவையில் அறையப்பட்டிருந்தாலும், அவரது உடல் மாட்சி நிறைந்ததாக இருந்தது; அவர் உலகு சார்ந்த வாழ்வுக்கு திரும்பவில்லை, மாறாக, புதிய நிலைக்கு திரும்பினார். முதலில் அவர்கள் அவரை கண்டுணரவில்லை, அவரது சொற்களும் செயல்களும் மட்டுமே அவர்கள் கண்களைத் திறந்தன: உயிர்த்த ஆண்டவருடனான சந்திப்பு உருமாற்றுகிறது, அது விசுவாசத்துக்கு புதிய பலத்தை, அசைக்க முடியாத அடித்தளத்தை தருகிறது. உயிர்த்த கிறிஸ்து பல அடையாளங்களால் நமக்கும் தன்னை வெளிப்படுத்துகிறார்: திருமறை நூல், நற்கருணை, மற்ற அருட்சாதனங்கள், பிறரன்பு, இந்த அன்புக்குரிய சைகைகள் உயிர்த்தெழுந்தவரின் ஒளிக்கதிரைக் கொணர்கின்றன.
   கிறிஸ்துவின் உயிர்ப்பால் நாம் ஒளியூட்டப் பெற்று, அவரது ஆற்றலால் உருமாற்றப் பெற்று, நம் வழியாக சாவின் அடையாளங்கள் இந்த உலகில் வாழ்வின் அடையாளங்களுக்கு வழிவிடட்டும்! இந்த சதுக்கத்தில் நான் ஏராளமான இளையோரைக் காண்கிறேன். இளம் சிறுவர்களே சிறுமியரே, இந்த உண்மையை உலகுக்கு கொண்டு செல்லுமாறு நான் உங்களுக்கு கூறுகிறேன்: ஆண்டவர் உயிரோடு இருக்கிறார், நமது வாழ்க்கை பயணத்தில் நம்மோடு நடக்கிறார். இந்த நம்பிக்கையை கண்முன் கொண்டிருங்கள், விண்ணகத்தில் இருந்து வரும் இந்த நம்பிக்கையில் நிலைத்திருங்கள். கிறிஸ்துவுக்கான உங்கள் சாட்சியம் போர்களாலும் பாவத்தாலும் தளர்ந்திருக்கிற இந்த உலகுக்கு நம்பிக்கையை கொணரட்டும்! முன் நோக்கிச் செல்லுங்கள் இளையோரே!

Monday, April 1, 2013

ஏப்ரல் 1, 2013

உயிர்த்த கிறிஸ்துவின் ஆற்றல் நம்பிக்கை தேவைப்படும் இடங்களைச் சென்றடையட்டும் - திருத்தந்தை

   வானதூதரின் திங்கள் என அழைக்கப்படும் உயிர்ப்பு ஞாயிறுக்கு அடுத்த நாளான இன்று பகல் 12 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் வழங்கிய பாஸ்கா மூவேளை செப உரை பின்வருமாறு:
அன்பு சகோதர சகோதரிகளே,
   அனைவருக்கும் உயிர்ப்பு பெருவிழா வாழ்த்துக்கள்! நமது விசுவாசத்தின் மைய மறைபொருளான உயிர்ப்பின் மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ள வந்திருக்கும் உங்களுக்கு நன்றி. கிறிஸ்துவின் உயிர்ப்பின் ஆற்றல் ஒவ்வொருவரையும், குறிப்பாக, துன்புறுவோரையும் நம்பிக்கை தேவைப்படும் இடங்களையும் சென்றடைய நாம் செபிப்போம்.
   கிறிஸ்து தீமையை முழுமையாகவும் முடிவாகவும் வென்றுவிட்டார், ஆயினும், இவ்வெற்றியை தங்களது வாழ்விலும், வரலாறு மற்றும் சமுதாயத்தின் உண்மைத்தன்மைகளிலும் ஏற்றுக்கொள்வது நம்மைச் சார்ந்தது. இதற்காகவே இன்றைய திருவழிபாட்டில் நாம், "உமது திருச்சபையை வளரச்செய்யும் எம் வானகத் தந்தையே, உமது விசுவாசிகளாகிய நாங்கள் பெற்றுக்கொண்ட விசுவாசத்தை திருவருட்சாதன வாழ்வில் வெளிப்படுத்த உதவி செய்யும்" என செபிக்கிறோம்.
   நம்மை கடவுளின் பிள்ளைகளாக ஆக்கும் திருமுழுக்கும், நம்மை கிறிஸ்துவோடு இணைக்கும் நற்கருணையும் நமது வாழ்வாக மாற வேண்டும். இவை நமது எண்ணங்களிலும், நமது புரிந்துகொள்ளுதலிலும், நமது நடத்தைகளிலும், செயல்களிலும், நாம் தேர்ந்தெடுப்பவைகளிலும் வெளிப்பட வேண்டும். பாஸ்கா திருவருட்சாதனங்களில் அடங்கியுள்ள திருவருள் நமது தனிப்பட்ட, குடும்ப மற்றும் சமூக வாழ்வைப் புதுப்பிப்பதற்கு அளவற்ற சக்தியைக் கொண்டுள்ளது. ஒவ்வொன்றும் மனித இதயங்களின் வழியாகச் செல்வதால், உயிர்த்த கிறிஸ்துவின் அருளோடு நாம் ஒத்துழைத்தால், நமக்கும் மற்றவருக்கும் தீமையை விளைவிப்பவற்றை அவ்வருள் நன்மையாக மாற்றும், அவ்வருள், நம் வாழ்விலும், உலகிலும் பெரிய மாற்றத்தைக் கொணரும். இறையருளின்றி நம்மால் ஒன்றும் செய்ய இயலாது, திருமுழுக்கு மற்றும் நற்கருணையின் அருளால் நாம் கடவுளின் இரக்கத்தின் கருவியாக மாற முடியும்.
   நம் வாழ்வில் பெறும் திருவருட்சாதனங்களைப் பற்றி கூற வேண்டுமானால்: இதோ, அன்பு சகோதர சகோதரிகளே, நமது அன்றாட வேலை - மேலும், நான் கூறுவேன், நமது அன்றாட மகிழ்ச்சி! கிறிஸ்து என்னும் திராட்சை செடியின் கிளைகளாக, அவரது ஆவியின் அசைந்தாடும் உடனிருப்பால் தூண்டுதல் பெற்று, கிறிஸ்துவின் அருளின் கருவிகளாக இருப்பதன் மகிழ்ச்சி! பாஸ்கா மறைபொருள், நம்மிலும் நம் காலத்திலும், வெறுப்பை அன்பாகவும், பொய்மையை மெய்மையாகவும், பழிவாங்குதலை மன்னிப்பாகவும், வருத்தத்தை மகிழ்ச்சியாகவும் மாற்ற அன்னை மரியாவின் பரிந்துரை வழியாக, இறந்து, உயிர்த்த ஆண்டவரின் பெயரால் நாம் சேர்ந்து செபிப்போம்.

Sunday, March 31, 2013

மார்ச் 31, 2013

தீமையைவிடவும் மரணத்தைவிடவும் வலிமை
கொண்டது கடவுளின் அன்பு - திருத்தந்தை

   இஞ்ஞாயிறு காலை திருத்தந்தை பிரான்சிஸ், வத்திக்கான் தூய பேதுரு பேராலய வளாகத்தில் உயிர்ப்பு பெருவிழா திருப்பலி நிகழ்த்தினார். அதை தொடர்ந்து திருத்தந்தை வழங்கிய 'ஊருக்கும் உலகுக்கும்' (Urbi et Orbi) செய்தி பின்வருமாறு:
அன்பு சகோதர சகோதரிகளே,
   உங்கள் அனைவருக்கும் உயிர்ப்பு பெருவிழா வாழ்த்துக்கள்! கிறிஸ்து உயிர்த்து விட்டார். இச்செய்தியை அறிவிப்பதில் எத்தனை மகிழ்ச்சி எனக்கு! ஒவ்வொரு வீட்டிற்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும், குறிப்பாக அதிக துன்பங்கள் காணப்படுமிடங்களுக்கு, மருத்துவமனைகளுக்கு, சிறைச்சாலைகளூக்கு இச்செய்தியுடன் நேரடியாகச் செல்ல ஆசைப்படுகிறேன். அனைத்திற்கும் மேலாக, ஒவ்வொரு இதயத்திற்குள்ளும் நுழைய ஆசைப்படுகிறேன். ஏனெனில் அங்குதான் இறைவன், 'இயேசு உயிர்த்துவிட்டார்’ என்ற செய்தியை விதைக்க ஆசைப்படுகிறார். உங்களுக்கு நம்பிக்கைக் காத்திருக்கிறது, நீங்கள் பாவத்தின், தீமையின் பிடியிலில்லை. அன்பு வெற்றிவாகை சூடியுள்ளது. கருணை வெற்றியடைந்துள்ளது.
   கல்லறை காலியாக இருப்பதைக் கண்ட இயேசுவின் பெண் சீடர்களைப்போல் நாமும் இந்நிகழ்வு தரும் பொருள் குறித்து திகைக்கலாம். இயேசு உயிர்த்துவிட்டார் என்பதன் அர்த்தம் என்ன? கடவுளின் அன்பு தீமையைவிடவும் மரணத்தைவிடவும் வலிமை கொண்டது. மேலும், கடவுளின் அன்பு நம் வாழ்வை மாற்றவல்லது என்பதுடன் நம் இதயத்தின் பாலைவனப் பகுதிகளில் பூக்களை மலரச்செய்ய வல்லது என்பதே இதன் பொருள். இறைமகன் மனிதனாகப் பிறந்து, இறுதி எல்லை வரை தாழ்ச்சி எனும் பாதையைப் பின்பற்றி, அதே அன்பிற்காக தன்னையே முற்றிலுமாகக் கையளித்தார். இதே கருணைமிகு அன்புதான் இயேசுவின் இறந்த உடலை ஒளியால் நிறைத்து, அதனை உருமாற்றி, முடிவற்ற வாழ்வுக்குக் கடந்துசெல்லச் செய்தது. இயேசு தன் பழைய வாழ்வுக்கு, அதாவது இவ்வுலக வாழ்வுக்குத் திரும்பவில்லை, மாறாக நம் மனிதத்தன்மையோடு இறைவனின் மகிமைநிறை வாழ்வுக்குள் நுழைந்ததன் மூலம் நமக்கு நம்பிக்கையின் வருங்காலத்தைத் திறந்துள்ளார். இதுதான் உயிர்ப்பு விழா. ஆம். இதுவே விடுதலைப்பயணம். பாவத்திற்கும் தீமைகளுக்கும் அடிமைகளாக இருந்த மனித குலத்தை அன்பு மற்றும் நன்மைத்தனம் நோக்கிய சுதந்திரத்துக்கு அழைத்துச்செல்வது. கடவுளே வாழ்வு, வாழ்வு மட்டுமே என்பதால் கடவுளின் மகிமை என்பது மனிதனே.
   அன்பு சகோதர சகோதரிகளே, கிறிஸ்து உறுதியாக, ஒவ்வொருவருக்காக இறந்து உயிர்த்துவிட்டார். ஆனால், பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து நன்மைத்தனத்தின் விடுதலை நோக்கிய பயணம், அதாவது உயிர்ப்பு, ஒவ்வொரு காலத்திலும், நம்முடைய தினசரி வாழ்விலும் நிகழவேண்டும். இக்காலத்திலும் எத்தனை பாலைவனங்களை மனிதர்கள் கடந்துச் செல்லவேண்டியுள்ளது! குறிப்பாக நமக்குள் இருக்கும் பாலைவனங்களை, அதாவது, கடவுள் மீதும் நம் அயலார் மீதும் அன்பின்றி செயல்படும்போது, கடவுள் நமக்குத் தந்த மற்றும் தந்துகொண்டிருக்கின்ற அனைத்தையும் பாதுகாக்கவேண்டியவர்கள் நாம் என்பதை உணராமல் செயல்படும்போது. கடவுளின் கருணை என்பது வறண்ட நிலங்களையும் பூந்தோட்டங்களாக மாற்றவல்லது, உலர்ந்துபோன எலும்புகளுக்கும் உயிரூட்ட வல்லது (எச.37: 1-14).
   எனவே, கிறிஸ்துவின் உயிர்ப்பு அருளை நாம் ஏற்றுக்கொள்வோம் என்பதே நான் இன்று உங்களுக்கு விடுக்கும் அழைப்பு. நாம் இறை இரக்கத்தால் புதுப்பிக்கப்படவும், இயேசுவால் அன்புகூரப்படவும், அவர் அன்பின் சக்தி கொண்டு நம் வாழ்வை மாற்றியமைக்கவும் உதவுவோம். மேலும், இக்கருணையை மக்களுக்குக் கொணரும் இணைப்பாளராவோம். நம் வழியாக இறைவன் இவ்வுலகிற்கு நீரூற்றி, இவ்வுலகின் படப்புகளனைத்தையும் பாதுகாத்து, நீதியும் அமைதியும் செழிக்கச் செய்வாராக. சாவையே வாழ்வாக மாற்றிய உயிர்த்த கிறிஸ்துவிடம், பகைமையை அன்பாகவும், பழிவாங்குதலை மன்னிப்பாகவும், போரை அமைதியாகவும் மாற்றும்படி வேண்டுவோம். 
   ஆம். கிறிஸ்துவே நம் அமைதி. அவர் வழியாகவே, இவ்வுலகம் முழுவதற்கும் அமைதி வழங்க நாம் இறைஞ்சுகின்றோம். மத்தியக் கிழக்குப் பகுதிக்காக; குறிப்பாக, இணக்கத்தின் பாதையை கண்டுகொள்ள முயலும் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனுக்கும் இடையே அமைதி நிலவ; நீண்ட காலமாக தொடர்ந்துவரும் சண்டைகள் நிறுத்தப்படுவதற்கு உதவும் பேச்சுவார்த்தைகள் ஆர்வமுடனும் மன உறுதியுடனும் மீண்டும் துவக்கப்பட; ஈராக்கின் அமைதிக்காக; அங்கு அனைத்து வன்முறைகளும் நிறுத்தப்பட; எல்லாவற்றிற்கும் மேலாக, அன்பு நிறை சிரியா நாட்டிற்காக. அங்கு மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக; மற்றும் உதவியும் ஆறுதலும் எதிர்நோக்கி நிற்கும் எண்ணற்ற அகதிகளுக்காக; எவ்வளவு இரத்தம் சிந்தப்பட்டுள்ளது!. அந்நாட்டின் நெருக்கடிகளுக்கு ஓர் அரசியல் தீர்வு காணப்படுவதற்குமுன் இன்னும் எவ்வளவு துன்பங்களை அவர்கள் அனுபவிக்க வேண்டியிருக்கும்?
   இன்னும் வன்முறை மோதல்களை அனுபவித்துக்கொண்டிருக்கும் ஆப்பிரிக்காவுக்கு அமைதி தேவை. மாலி நாட்டில் இணக்கமும் நிலையான தன்மையும் கொணரப்படட்டும். வன்முறைக் கும்பல்களால் குழந்தைகள் கூட பிணையக்கைதிகளாக வைக்கப்பட்டு, அப்பாவி மக்களின் வாழ்வு மிக அச்சுறுத்தலுக்கு உள்ளாகிவரும் வகையில் தாக்குதல்கள் தொடரும் நைஜீரியாவில் அமைதி திரும்பட்டும்! மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும்படி, அச்சத்தில் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள மத்திய ஆப்ரிக்கக் குடியரசு, மற்றும் காங்கோ குடியரசின் கிழக்குப்பகுதியில் அமைதி திரும்பட்டும்!
   ஆசியாவில், குறிப்பாக கொரிய தீபகற்பத்தில் அமைதி திரும்பட்டும். இங்கு கருத்துமோதல்கள் வெற்றிகாணப்பட்டு ஒப்புரவின் புதுப்பிக்கப்பட்ட உணர்வு வளர்வதாக!
   இருபத்தோராம் நூற்றாண்டில் அடிமைத்தனத்தின் ஒரு வடிவமாக இருக்கும் மனித வியாபாரம் தொடர காரணமாக இருக்கும் சுயநலப்போக்குகளாலும், குடும்பத்தையும் மனித வாழ்வையும் அச்சுறுத்தும் சுயநலத்தின் காயங்களாலும், எளிதான இலாபம் தேடும் பேராசைகளாலும் இன்னும் துண்டுபட்டிருக்கும் இவ்வுலகம் முழுவதற்கும் அமைதி திரும்பட்டும். போதைப்பொருள் தொடர்புடைய வன்முறைகளாலும், இயற்கை வளங்கள் வரைமுறையின்றி சுரண்டப்படுவதாலும் துன்புறும் இவ்வுலகிற்கு அமைதி கிட்டுவதாக. நம் பூவுலகிற்கு அமைதி திரும்பட்டும். இயற்கை வளங்களின் பொறுப்புடைய பாதுகாவலர்களாக நம்மை மாற்றுவதுடன், இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலை நம் உயிர்த்த ஆண்டவர் கொணர்வாராக!
   அன்பு சகோதர சகோதரிகளே, உரோம் நகரிலிருந்தும் உலகின் அனைத்து பகுதிகளிலிருந்தும் எனக்குச் செவிமடுக்கும் உங்களுக்கு திருப்பாடலின் அழைப்பை முன்வைக்கிறேன்: "ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு. 'என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக!" (திருப்பா. 117:1-2).
   'ஊருக்கும் உலகுக்கும்' செய்திக்குப்பின் மீண்டும் ஒருமுறை தன் வாழ்த்துக்களை வெளியிட்டார் திருத்தந்தை. "உங்கள் குடும்பங்களுக்கும் நாடுகளுக்கும் மகிழ்வின், நம்பிக்கையின் செய்தியை எடுத்துச் செல்லுங்கள். மரணத்தை வெற்றி கண்டவர் நமக்கு பலத்தை வழங்குகிறார், குறிப்பாக பலவீனமானவர்களுக்கும் பிறர் உதவி தேவைப்படுபவர்களுக்கும். உங்கள் வருகைக்கும், விசுவாச சாட்சியத்துக்கும் நன்றி கூறுகிறேன். உயிர்த்த கிறிஸ்து நீதியையும் அன்பையும் அமைதியையும் மனித குலமனைத்திற்கும் வழங்குவாராக!" இவ்வாறு தன் வாழ்த்துச் செய்தியை வழங்கிய திருத்தந்தை அனைவருக்கும் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

மார்ச் 30, 2013

கடவுள் நம்மை எப்போதும் ஆச்சரியம்
அடையச் செய்கிறார் - திருத்தந்தை

   புனித சனிக்கிழமை இரவு உரோம் தூய பேதுரு பேராலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ், உயிர்ப்பு பெருவிழா திருவிழிப்பு திருப்பலியை நிகழ்த்தி வழங்கிய மறையுரை பின்வருமாறு:
அன்பு சகோதர சகோதரிகளே,
   உயிர்ப்புத் திருவிழிப்பின் ஒளி மிகுந்த இரவில், இயேசுவின் உடலைக் கழுவிச் சுத்தம் செய்ய நறுமணப் பொருள்களுடன் கல்லறைக்கு செல்லும் பெண்களை முதலில் நாம் சிந்திக்கிறோம். (லூக். 24:1-3) நம்மை விட்டுப் பிரிந்த ஓர் அன்புள்ளத்திற்கு அன்புடனும், பாசத்தோடும் நாம் செய்யும் பாரம்பரியச் செயல்களைப்போல், இப்பெண்களும் கனிவு மிகுந்த ஒரு செயலைச் செய்வதற்குப் போகின்றனர். இப்பெண்கள் இயேசுவைப் பின்தொடர்ந்தவர்கள், அவரது சொற்களுக்குச் செவி மடுத்தவர்கள், அப்பெண்களின் உள்ளார்ந்த மாண்பை புரிந்துகொண்டவர் இயேசு என்பதால், அவருடன் இறுதிவரை உடன் சென்றவர்கள், சிலுவையிலிருந்து அவர் இறக்கப்படும் நேரம் வரை கல்வாரியில் உடன் இருந்தவர்கள். அவர்கள் வாழ்வு இனி முன்புபோல தொடரும். இருப்பினும், இப்பெண்கள் அவர் மீது அன்பு கொண்டிருந்தனர். அந்த அன்பே அவர்களைக் கல்லறைக்கு இட்டுச் சென்றது. ஆனால், இத்தருணத்தில், சற்றும் எதிர்பாராத, முற்றிலும் புதிதான ஒன்று நிகழ்ந்தது. அவர்களது உள்ளங்களையும், திட்டங்களையும் புரட்டிப் போட்டது போன்ற ஏதோ ஒன்று நிகழ்கிறது. அவர்கள் வாழ்வு முழுவதையும் இது புரட்டிப் போடும்: கல்லறையை மூடியிருந்த கல் அகற்றப்பட்டிருப்பதைக் காண்கின்றனர், நெருங்கிப் பார்க்கையில், ஆண்டவரின் உடலை அவர்கள் காணவில்லை. அவர்களைக் குழப்பத்திலும், தயக்கத்திலும் விட்டுச் சென்ற நிகழ்வு அது. "என்ன நிகழ்ந்தது?" "இவை அனைத்தின் பொருள் என்ன?" என்ற கேள்விகளால் அவர்களை நிறைத்த நிகழ்வு அது (லூக். 24:4).
   முற்றிலும் புதிதான ஒன்று நம் தினசரி வாழ்வில் நடக்கும்போது, இதேபோல் நமக்கும் தோன்றுவதில்லையா? நாம் அப்படியே நின்று விடுகிறோம். நமக்கு ஒன்றும் புரிவதில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் திகைக்கிறோம். புதியது பல நேரங்களில் நம்மை பயமுறுத்துகிறது. கடவுள் கொணரும் புதியவைகளும், கடவுள் நம்மிடம் கேட்கும் புதியனவும் நம்மை பயமுறுத்தும். நற்செய்தியில் நாம் காணும் திருத்தூதர்களைப் போலவே நாமும், நம்முடைய பாதுகாப்பை உறுதியாகப் பற்றிக்கொள்ள விரும்புகிறோம். கல்லறைக்கு முன் நிற்க, இறந்த ஒருவரை நினைத்துப் பார்க்க, வரலாற்றில் வாழ்ந்து மறைந்த பெரும் மனிதரைப்போல், நினைவில் மட்டும் வாழக்கூடியவர் இவர் என்று நம்புவதற்கு நாம் விருப்பப்படுகிறோம். கடவுளின் ஆச்சரியங்களைக் கண்டு அஞ்சுகிறோம். ஆம், அன்பர்களே, கடவுளின் ஆச்சரியங்களைக் கண்டு நாம் அஞ்சுகிறோம். அவரோ நம்மை எப்போதும் ஆச்சரியம் அடையச் செய்கிறார். அதுதான் கடவுள்!
   அன்பு சகோதர சகோதரிகளே, இறைவன் நம் வாழ்வில் கொணர விழையும் புதியவற்றிற்கு நம்மை மூடிவிட வேண்டாம். நாம் களைத்து, மனம் சோர்ந்து, துயரப்படுகிறோமா? நமது பாவங்களின் சுமையால் அழுத்தப்படுகிறோமா? நம்மால் சமாளிக்க முடியாது என்று எண்ணுகிறோமா? இதயத்தை மூடிவிட வேண்டாம். நம்பிக்கை இழக்க வேண்டாம். ஒருபோதும் முயற்சியை விட்டுவிட வேண்டாம். கடவுளால் மாற்றமுடியாதச் சூழல் என்று எதுவுமே இல்லை. அவரால் மன்னிக்க முடியாத பாவம் என்று எதுவுமே இல்லை. நாம் அவரிடம் நம்மைத் திறந்தால் போதும்.
   நாம் மீண்டும் நற்செய்திக்குத் திரும்புவோம். அந்தப் பெண்களைப் பற்றிய சிந்தனைகளை இன்னும் முன்னெடுத்துச் செல்வோம். கல்லறை காலியாக இருந்ததையும், அங்கு இயேசுவின் உடல் இல்லாததையும் அவர்கள் காண்கின்றனர். என்ன நடந்ததென்று உறுதியாகத் தெரியவில்லை. அச்சூழல் கேள்விகளை எழுப்பியது; பதிலேதும் தராத குழப்பத்தை உருவாக்கியது. அப்போது, திடீரென ஒளிவீசும் ஆடைகளுடன் இருவர் அங்கு தோன்றி, "உயிரோடு இருப்பவரைக் கல்லறையில் தேடுவதேன்? அவர் இங்கே இல்லை. அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்" (லூக். 24:5-6) என்று சொல்கின்றனர்.
   கல்லறைக்குச் செல்லுதல் என்ற ஒரு சிறு செயல், வாழ்வையே மாற்றும் ஒரு நிகழ்வாக மாறிவிட்டது. இனி ஒன்றும் முன்புபோல இருக்கப்போவதில்லை - அப்பெண்களுக்கு மட்டுமல்ல, மனித குலத்தில் தோன்றிய அனைவருக்கும் இதே நிலைதான். இயேசு இறந்து கிடக்கவில்லை, அவர் உயிர்த்துள்ளார், அவர் உயிருடன் உள்ளார்! அவர் வாழ்வுக்கு மீண்டும் திரும்பவில்லை, அவர் வாழ்வாகவே மாறுகிறார், ஏனெனில் அவர் வாழும் கடவுளின் மகன். (எண். 14:21-28; இணை. 5:26; யோசு. 3:10). இயேசு இறந்தகாலத்தைச் சார்ந்தவர் அல்ல, அவர் நிகழ்காலத்தில் இருக்கிறார், எதிர்காலத்தில் இருக்கிறார். அவரே கடவுளின் நித்திய 'இன்று'. கடவுள் புதிதாய் உருவாக்கிய இது, அப்பெண்களுக்கும், சீடர்களுக்கும், நம் அனைவருக்கும் தோன்றுகிறது. பாவம், தீமை, மரணம் ஆகியவை மீது கொண்ட வெற்றியாக, வாழ்வையும், மனித மாண்பையும் நொறுக்கும் அனைத்தின் மீது கொண்ட வெற்றியாகத் தோன்றுகிறது. அன்பு சகோதரியே, அன்பு சகோதரனே, இதுதான் எனக்கும் உங்களுக்கும் சொல்லப்பட்டுள்ள செய்தி. "உயிரோடு இருப்பவரை இறந்தோரிடையே ஏன் தேடுகிறீர்கள்" என்று அன்பு நம்மிடம் எத்தனை முறை சொல்ல வேண்டியுள்ளது!
   நமது அன்றாட பிரச்சனைகளும், கவலைகளும் நம்மைத் துயரிலும், கசப்பிலும் மூடிவிடுகின்றன. அங்குதான் மரணம் உள்ளது. வாழ்பவரை அவ்விடத்தில் தேடக்கூடாது. உயிர்த்த இயேசு உங்கள் வாழ்வில் நுழையட்டும். அவரை ஒரு நண்பராக வரவேற்று, அவர் மீது நம்பிக்கை கொள்ளுங்கள். அவரே வாழ்வு! இதுவரை தூரத்தில் அவரை வைத்திருந்தால், இப்போது அவரை நோக்கி வாருங்கள். அவர் உங்களை விரிந்த கரங்களுடன் வரவேற்பார். துணிந்து வாருங்கள், ஏமாற்றமடைய மாட்டீர்கள்.
   ஒளி மிகுந்த இவ்விரவில் அன்னை மரியாவின் பரிந்துரையை வேண்டுவோம். ஆண்டவரின் உயிர்ப்பில் நமக்கு ஒரு பங்களிக்க இறைவனை வேண்டுவோம். மாற்றம் கொணரும் புதியவற்றிற்கு நம்மை அவர் திறப்பாராக! இவ்வுலகிலும், நம் வாழ்விலும் இறைவன் செய்தவற்றை நினைவிற்கொள்ளும் மனிதர்களாக நம்மை அவர் மாற்றுவாராக! உயிராற்றல் கொண்ட அவரது உடனிருப்பை உணர உதவுவாராக! வாழ்கின்ற அவரை இறந்தோர் மத்தியில் தேடாமல் இருக்க, ஒவ்வொரு நாளும் நமக்கு அவர் சொல்லித் தருவாராக! ஆமென்.

Saturday, March 30, 2013

மார்ச் 29, 2013

அன்பையும், மன்னிப்பையும் நமது இதயங்களில்
சுமந்து நடப்போம் - திருத்தந்தை

   புனித வெள்ளிக்கிழமை மாலை ரோமின் கொலோசியம் திடலில் நடைபெற்ற சிலுவைப் பாதையின் இறுதியில் திருத்தந்தை பிரான்சிஸ் வழங்கிய முடிவுரை பின்வருமாறு:
அன்பு சகோதர சகோதரிகளே,
   இவ்வளவு பேர் இங்கு திரண்டு வந்து, இந்த ஆழமான செபத்தில் கலந்துகொண்டதற்காக நன்றி கூறுகிறேன். ஊடகங்கள் வழியாக இச்செபத்தில் இணைந்தவர்களுக்கு, சிறப்பாக, உடல் நலமற்றோர், வயது முதிர்ந்தோர் ஆகியோருக்கு நன்றி கூறுகிறேன்.
   நான் அதிக வார்த்தைகளைச் சேர்க்க விரும்பவில்லை. இந்த மாலைப் பொழுதுக்கு ஒரு வார்த்தை போதும். அதுதான் சிலுவை. உலகின் தீமைக்கு இறைவன் தந்த பதில் சிலுவை. சில வேளைகளில், தீமைக்கு இறைவன் பதிலளிக்காமல் மௌனம் காப்பதுபோல் தெரியலாம். ஆனால், இறைவன் பதிலளித்துவிட்டார். அவர் தந்த பதில் கிறிஸ்துவின் சிலுவை: அன்பு, கருணை, மன்னிப்பு ஆகியவற்றைக் கூறும் ஒரு வார்த்தை இது. இது இறைவனின் தீர்ப்பையும் வெளிப்படுத்துகிறது, அதாவது, கடவுள் நம்மை அன்பு செய்வதன் வழியாக தீர்ப்பிடுகிறார். இதை நினைவில் கொள்ளுங்கள்: கடவுள் நம்மை அன்பு செய்வதன் வழியாக தீர்ப்பிடுகிறார். அவரது அன்பை நான் அரவணைத்தால், நான் மீட்படைகிறேன். அதை நான் மறுத்தால், தண்டனைக்குள்ளாகிறேன். அவரால் நான் தண்டனை பெறவில்லை, நானே என்னைத் தண்டனைக்குள்ளாகுகிறேன். ஏனெனில், இறைவன் ஒருபோதும் தண்டனை தீர்ப்பு அளிப்பதில்லை. அன்பு செய்வதும், காப்பாற்றுவதும் மட்டுமே அவர்.
   அன்பு சகோதர சகோதரிகளே, உலகிலும், நமக்குள்ளும் இருந்து செயலாற்றும் தீமைக்கு கிறிஸ்தவர்கள் அளிக்கும் பதில் - சிலுவை என்ற சொல்லே. தீமைக்கு கிறிஸ்தவர்கள் அளிக்கும் பதில் - இயேசுவைப் போல் சிலுவையை ஏற்பது. லெபனான் நாட்டு சகோதர, சகோதரிகள் அளித்த சாட்சியத்தை இன்று மாலை சிலுவைப்பாதையில் நாம் கேட்டோம். அவர்களே இன்றைய சிந்தனைகளையும், செபங்களையும் உருவாக்கினர். அவர்கள் செய்த இப்பணிக்கும், அவர்கள் அளித்த சாட்சியத்திற்கும் நமது இதயம் நிறைந்த நன்றியைக் கூறுகிறோம். லெபனான் நாட்டுக்குத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் சென்றபோது, இந்த சாட்சியத்தை நம்மால் காண முடிந்தது. அந்நாட்டில் வாழும் கிறிஸ்தவர்கள் மத்தியில் நிலவும் வலுவான ஒன்றிப்பையும், அவர்கள் இஸ்லாமிய சகோதர சகோதரிகளுடனும், பிறருடனும் கொண்டிருக்கும் நட்புறவையும் நம்மால் காண முடிந்தது. மத்தியக் கிழக்குப் பகுதிக்கும், உலகிற்கும் நம்பிக்கை தரும் ஓர் அடையாளமாய் அத்தருணம் அமைந்தது.
   தற்போது நம் அன்றாட வாழ்வில் சிலுவைப் பாதையைத் தொடர்கிறோம். அனைவரும் இணைந்து இச்சிலுவைப் பாதையில் நடப்போம். அன்பையும், மன்னிப்பையும் நமது இதயங்களில் சுமந்து நடப்போம். இயேசுவின் உயிர்ப்பை எதிர்பார்த்து காத்திருப்போம். அவர் நம் அனைவரையும் மிக அதிகமாக அன்பு செய்கிறார். அவரே முழுமையான அன்பு.
   இந்த உரைக்குப் பின், அங்கு கூடியிருந்த பல்லாயிரம் மக்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் ஆசீர் அளித்தார்.

Friday, March 29, 2013

மார்ச் 28, 2013

நாம் அனைவரும் ஒருவருக்கொருவர்
பணிவிடை புரிய வேண்டும் - திருத்தந்தை

   புனித வியாழனன்று மாலை 5.30 மணிக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உரோம் நகரில் உள்ள வளர் இளம் கைதிகள் இல்லத்தில் ஆண்டவரின் இரவுணவுத் திருப்பலியை நிகழ்த்தினார். திருத்தந்தையின் வேண்டுகோளுக்கிணங்க, ஊடகத்தினரின் பங்கேற்பு ஏதுமில்லாமல் நிகழ்ந்த இத்திருப்பலியில், காசல் டெல் மர்மோ என்ற இவ்வில்லத்தில் வைக்கப்பட்டுள்ள 50 கைதிகளும், அவர்களைக் கண்காணிப்பவர்களும் கலந்துகொண்டனர். புனித வியாழன் திருப்பலியின் ஒரு முக்கிய நிகழ்வான பாதம் கழுவும் சடங்கிற்கு முன்னர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அச்சடங்கின் பொருளை அங்கு கூடியிருந்த இளையோருக்கு உணர்த்தும் வகையில் வழங்கிய மறையுரை பின்வருமாறு:
   இயேசு தன் சீடர்களின் பாதங்களைக் கழுவுகிறார். மனதைத் தொடும் ஒரு செயல் இது. பேதுரு இதைப் புரிந்துகொள்ளவில்லை, தன் பாதங்களை இயேசு கழுவுவதற்கும் அனுமதி தரவில்லை. இருப்பினும், இயேசு விளக்கம் அளிக்கிறார். "நான் உங்களுக்குச் செய்தது என்னவென்று உங்களுக்குப் புரிந்ததா? நீங்கள் என்னைப் 'போதகர்' என்றும் 'ஆண்டவர்' என்றும் அழைக்கிறீர்கள். நீங்கள் அவ்வாறு கூப்பிடுவது முறையே. நான் போதகர்தான், ஆண்டவர்தான். ஆகவே ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள்."
   இயேசு நமக்குச் சிறந்ததோர் எடுத்துக்காட்டை விட்டுச்சென்றுள்ளார். நம் மத்தியில் யார் மிக உயர்ந்த அதிகாரத்தில் உள்ளனரோ, அவரே மற்றவருக்குப் பணிவிடை செய்யவேண்டும். பாதம் கழுவுதல் என்பது ஓர் அடையாளம். நான் உங்களுக்குப் பணிவிடை செய்ய வந்துள்ளேன் என்பதை உணர்த்தும் ஓர் அடையாளம். நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் பணிவிடை புரிய வேண்டும். ஒவ்வொரு நாளும் நாம் மற்றவர்களின் பாதங்களைக் கழுவ வேண்டும் என்பதல்ல. நாம் ஒருவருக்கொருவர் உதவிகள் செய்ய வேண்டும். சில வேளைகளில் நான் யாருடனாவது கோபமாக இருக்கலாம். ஆனால், அவர் ஓர் உதவி கேட்டு வரும்போது, அந்தக் கோபத்தைக் களைந்து, அவருக்கு நான் உதவி செய்யவேண்டும்.
   ஒருவருக்கொருவர் உதவி செய்யுங்கள். இதைத்தான் இயேசு நமக்குச் சொல்லித் தருகிறார். இதைத்தான் நான் இப்போது செய்கிறேன். இதை என் முழு மனதுடன் செய்கிறேன். இது என் கடமை என்பதால் முழுமனதுடன் செய்கிறேன். ஏனெனில், ஒரு குருவாக, ஓர் ஆயராக நான் உங்களுக்குப் பணிவிடை புரியவேண்டும். இந்தக் கடமையை நான் மனதார விரும்புவதால் செய்கிறேன். ஆண்டவர் எனக்கு இதைச் சொல்லித் தந்ததால், நான் இதை விரும்பிச் செய்கிறேன். நீங்களும் எப்போதும் ஒருவருக்கொருவர் உதவிகள் செய்யவேண்டும். இவ்விதம் உதவிகள் செய்வதால், ஒருவருக்கொருவர் நன்மைகள் செய்கிறோம்.
   இப்போது நாம் பாதம் கழுவும் சடங்கை ஆற்றுவோம். அந்நேரத்தில் நாம் எண்ணிப் பார்க்க வேண்டியது இததான்: நான் மற்றவர்களுக்கு உதவி செய்ய விரும்புகிறேனா? இதை மட்டும் எண்ணிப் பாருங்கள். இது இயேசு தரும் அணைப்பின் அடையாளம். அவர் இதற்காக, நமக்குப் பணிவிடை புரிய, நமக்கு உதவி செய்ய மட்டுமே இவ்வுலகிற்கு வந்தார்.
   மறையுரைக்குப் பின், திருத்தந்தை பிரான்சிஸ் இளம் கைதிகள் பன்னிருவரின் பாதங்களைக் கழுவி, துடைத்து, பாதங்களை முத்தமிட்டார். 76 வயதான திருத்தந்தை ஆறு முறை தரையில் முழுவதும் மண்டியிட்டு, ஒவ்வொரு முறையும் இருவரது பாதங்களைக் கழுவி முத்தமிட்டது மனதைத் தொடும் நிகழ்வாக அமைந்ததென்று திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி கூறினார். இந்தப் பன்னிருவரில் இரு இளம் பெண்களும், இஸ்லாமிய இளையோர் இருவரும் இருந்தனர். அதேபோல், திருச்சபை வரலாற்றில் இதுவரை வேறெந்த திருத்தந்தையும் பெண்களின் பாதங்களைக் கழுவியதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Thursday, March 28, 2013

மார்ச் 28, 2013

குருக்கள் அருள்பொழிவின் சக்தியை உணர
விளிம்புகளுக்கு செல்ல வேண்டும் - திருத்தந்தை

   புனித வியாழன் காலை, புனித பேதுரு பேராலயத்தில் காலை 9.30 மணிக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புனித எண்ணெய் அர்ச்சிக்கும் திருப்பலியை தலைமையேற்று நடத்தினார். புனித வியாழன் என்பது, அருள் பணியாளர்களுக்கு உரிய சிறப்பு நாள் என்பதால், புனித பேதுரு பேராலயம் கர்தினால்கள், ஆயர்கள் ஆகியோருடன், ஆயிரக்கணக்கான குருக்கள் மற்றும் மக்கள் கூட்டத்தால் நிறைந்திருந்தது. இத்திருப்பலியில் அருள் பணியாளர்களுக்கென குறிப்பிட்ட வகையில் திருத்தந்தை வழங்கிய மறையுரை பின்வருமாறு:
அன்பு சகோதர சகோதரிகளே,
   புனித எண்ணெய் அர்ச்சிக்கும் திருப்பலியை உரோமையின் ஆயராக, முதன்முறையாகக் கொண்டாடுவதில் நான் மகிழ்வடைகிறேன். அனைவரையும், சிறப்பாக, என் அன்பு குருக்களே உங்களையும் வாழ்த்துகிறேன். என்னைப் போலவே நீங்களும் இன்று உங்கள் குருத்துவ அருள்பொழிவை நினைவுகூர்கின்றீர்கள்.
   இன்று நாம் வாசித்த வாசகங்களும், திருப்பாடலும் கடவுளின் 'அருள்பொழிவு பெற்றவர்களை' பற்றி பேசுகிறது - எசயா கூறும் யாவேயின் துன்புறம் ஊழியன், அரசன் தாவீது, மற்றும் நம் ஆண்டவர் இயேசு. இவர்கள் மூவருக்கும் பொதுவான ஓர் அம்சம் உள்ளது, அதாவது, கடவுளின் ஊழியர்களாக இவர்கள் இருப்பதால், மக்களை, சிறப்பாக, ஏழைகள், சிறையில் அடைக்கப்ப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர் இவர்களை அருள்பொழிவு செய்வதற்கே இவர்கள் அருள்பொழிவு பெற்றுள்ளனர். அருள்பொழிவு பெற்றவர்கள் மற்றவர்களுக்காக வாழ்பவர்கள் என்பதை நாம் உணர இன்றைய திருப்பாடலில் அழகியதோர் உருவகம் உள்ளது: “ஆரோனின் தலையினிலே ஊற்றப்பெற்ற நறுமணத்தைலம் அவருடைய தாடியினின்று வழிந்தோடி அவருடைய அங்கியின் விளிம்பை நனைப்பதற்கு ஒப்பாகும்.” (தி.பா. 133:2). ஆரோனின் தாடியினின்று வழிந்தோடும் நறுமணத்தைலம் அருள் பணியாளரின் அருள்பொழிவுக்கு அழகிய உருவகம். வழிந்தோடும் தைலம் அருள்பொழிவு செய்யப்பட்டுள்ள கிறிஸ்துவின் வழியாக உலகின் எல்லைகளுக்கு செல்லவேண்டும் என்பதை அங்கி என்ற உருவகம் சொல்கிறது.
   தலைமைக் குரு உடுத்தும் புனித உடைகள் பல செறிவு மிகுந்த அடையாளங்களைக் கொண்டுள்ளது. அவற்றில் ஒன்று இது: இஸ்ரயேல் மக்களின் பெயர்கள் பதிந்த இரு கற்பலகைகள் தலைமைக் குரு தோளில் அணிந்த உடையாக இருந்தது. இதுவே இன்று குருக்கள் அணியும் திருப்பலி உடைகளின் ஒரு பகுதியாக உள்ளது. அதேபோல், தலைமைக் குரு மார்புக் கவசம்போல் அணிந்த உடையிலும் இஸ்ரயேல் மக்களின் பன்னிரு குலத்தின் பெயர்களும் பொறிக்கப்பட்டிருந்தன. அருள் பணியாளர் திருப்பலி உடைகளை அணியும்போது, தன் தோளிலும் மார்பிலும் மக்களின் பெயர்களைத் தாங்கிச் செல்கிறார் என்பதே இந்த அடையாளத்தின் பொருள். நாம் திருப்பலி உடைகளை அணியும்போது, நம் மக்களை, அவர்களது பாரங்களை நமது இதயங்களில், தோள்களில் ஏந்திச் செல்வதாக உணரவேண்டும்.
   திருவழிபாட்டின் அடையாளங்களாக விளங்கும் இப்பொருட்கள் அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த பொருட்கள் மட்டுமல்ல, கடவுளின் புகழ் வெளிப்படும் மக்களை அடையாளப்படுத்தும் பொருட்கள். இப்பொருட்களிலிருந்து அருள் பணியாளரின் செயல்களின் மேல் நம் கவனம் திரும்பட்டும். ஆரோன் மீது ஊற்றப்பட்ட தைலம் நறுமணம் தருவதற்கு மட்டும் ஊற்றப்படவில்லை, விளிம்புகளை நனைப்பதற்கும் ஊற்றப்பட்டது. ஆண்டவர் இதனை மிகத் தெளிவாகக் கூறுவார்: ஏழைகளுக்காக, சிறைப்பட்டோருக்காக, நோயுற்றோருக்காக, தனிமையில் துன்புறுவோருக்காக அவரது அருள் பொழிவு வழங்கப்பட்டது. அருள் பொழிவுத் தைலம் நறுமணத்தைத் தருவதற்காக மட்டும் பயன்படக்கூடாது, முக்கியமாக, அது குடுவைகளில் அடைபட்டு, பயனற்றுப் போவதற்காக உருவாக்கப்பட்ட தைலம் அல்ல. அதேபோல், மனதில் கசப்புடன் வாழ்வதற்கு நாம் அருள்பொழிவு செய்யப்பட்டவர்கள் அல்ல.
   மக்கள் எவ்விதம் அருள்பொழிவு பெற்றுள்ளனர் என்பதைக் கொண்டே ஒரு நல்ல அருள் பணியாளரை நாம் அடையாளம் காணமுடியும். மகிழ்வின் தைலத்தால் மக்கள் அருள்பொழிவு செய்யப்பட்டிருந்தால், அது வெளிப்படையாகத் தெரியும்: எடுத்துக்காட்டாக, திருப்பலியை விட்டு அவர்கள் வெளியேச் செல்லும்போது, அவர்கள் நல்ல செய்தியை கேட்டனரா என்பதை அவர்களைப் பார்த்தே தெரிந்துகொள்ளலாம். உத்வேகத்துடன் நற்செய்தி அறிவிக்கப்படுவதையே நம் மக்கள் விரும்புகின்றனர்; அவர்கள் அன்றாட வாழ்வைத் தொடும்படி நம் மறையுரைகள் அமைவதையே மக்கள் விரும்புகின்றனர். ஆரோனின் தலையில் ஊற்றப்பட்ட தைலம், அவரது அங்கியின் விளிம்பையும் நனைத்ததுபோல், நமது நற்செய்தி அறிவிப்பு, மக்களின் இருளான பகுதிகளுக்குச் செல்ல வேண்டும்.
   பல்வேறு தீய சக்திகளின் தாக்குதல்களுக்கு உள்ளாகி, தங்கள் விசுவாசத்தை இழக்கும் அளவு விளிம்புகளில் வாழ்பவர்களிடையே நமது நற்செய்தி சென்றடைய வேண்டும். மக்களின் அன்றாட வாழ்வில் நிகழும் எதார்த்தங்களுக்காகவும், அவர்களது இன்ப, துன்பங்கள், நம்பிக்கைகள், பாரங்கள் அனைத்திற்காகவும் நாம் வேண்டிக்கொள்வதால், அவர்கள் நமக்கு நன்றி சொல்கின்றனர். அருள்பொழிவு செய்யப்பட்ட கிறிஸ்துவின் நறுமணம் நம் வழியாக அவர்களைச் சென்றடைவதை மக்கள் உணரும்போது, நம் மட்டில் அதிக நம்பிக்கை கொள்கின்றனர். அவர்களது தேவைகளை நம்மிடம் கூறி, "எனக்கு இந்தப் பிரச்சனை உள்ளது, எனக்காக இறைவனிடம் மன்றாடுங்கள்", "என்னை ஆசீர்வதியுங்கள்" என்று அவர்கள் சொல்லும்போது, அருள்பொழிவின் தைலம் அவர்களையும் சென்றடைந்துள்ளது என்பதை உணரலாம். இறைவனுக்கும், மக்களுக்கும் இடையே இத்தகைய உறவை நாம் கொண்டிருக்கும்போது, நம் வழியாக அருள் அவர்களைச் சென்றடையும்போது, இறைவனுக்கும், மனிதருக்கும் இடையே நாம் ஓர் இணைப்பாக அமைகிறோம்.
   இத்தருணத்தில் ஒரு முக்கிய கருத்தை வலியுறுத்த விரும்புகிறேன். அதாவது, நம்மிடம் மக்கள் கேட்கும் செபங்கள், சில சமயங்களில் உலகு சார்ந்த விண்ணப்பங்களாய், நமக்குச் சங்கடமான விண்ணப்பங்களாய் இருந்தாலும், அவை, இறை அருளை நமக்குள் தூண்டியெழுப்ப வேண்டும். அருள்பொழிவு தைலத்தின் நறுமணம் நம்மிடையே உள்ளதென்பதை மக்கள் உணர்வதாலேயே அவர்கள் நம்மிடம் வருகின்றனர். இரத்தப் போக்கினால் துன்புற்ற பெண், இயேசுவின் ஆடை விளிம்பைத் தொட்டபோது, நம்பிக்கை நிறைந்த அவரது துயரத்தை இயேசு உணர்ந்தார். இந்த நிகழ்வில், நெருக்கிக் கொண்டிருந்த மக்கள் கூட்டத்துடன் இயேசு சென்றதை, ஆரோனின் அங்கி என்ற அழகிய உருவகத்தின் ஓர் எடுத்துக்காட்டென நாம் உணரலாம். இந்த அங்கி என்ற உருவகம் அனைவருக்கும் புலனாவதில்லை. விசுவாசக் கண்கொண்டு நோக்குபவர்களுக்கே அது புலனாகும். அத்தகைய கண்ணோட்டம், இரத்தப் போக்குடைய அப்பெண்ணிடம் இருந்தது. மற்ற மக்களிடமோ, எதிர்காலத்தில் அருள் பணியாளர்களாக மாறிய சீடர்களிடமோ, அக்கண்ணோட்டம் இல்லை. அவர்கள் மேலோட்டமான பார்வையுடன் கூட்டத்தை மட்டுமே கண்டனர் (லூக்கா 8:42). இதற்கு மாறாக, இயேசுவோ, அருள்பொழிவு சக்தி தன் ஆடையின் விளிம்பிலிருந்து வெளிப்பட்டதை உணர்ந்தார்.
   நமது அருள்பொழிவின் சக்தியையும் நாம் உணரவேண்டுமெனில், நாமும் 'வெளியே செல்ல' வேண்டும். விளிம்புகளுக்கு செல்ல வேண்டும். துன்பம், இரத்தம் சிந்துதல், பார்வையற்ற நிலை, தீய சக்திகளால் சிறைப்பட்டிருக்கும் நிலை ஆகிய விளிம்புகளுக்குச் செல்லவேண்டும். நம்மை நாமே ஆய்வு செய்வதில், நமது உள்நோக்கிய பார்வையில் நாம் ஆண்டவரைச் சந்திக்க இயலாது. தன்னைத் தானே முன்னேற்றிக் கொள்ளும் வழிமுறைகள் பயனுள்ளவைதான். ஆனால், இந்த பயிற்சிகளிலேயே மூழ்கிப்போய், ஒரு பயிற்சியிலிருந்து மற்றொரு பயிற்சிக்குத் தாவிக் கொண்டிருந்தால், இறையருளின் சக்தியை மறுத்து, நமது சொந்த முயற்சிகளிலேயே கவனம் செலுத்திய பெலாஜியர்களின் நிலைக்கு நாம் மாறுவோம். அதற்கு மாறாக, மக்கள் மத்தியில் சென்று, அங்கு நம்மிடம் உள்ள அருள்பொழிவு தைலம் சிறிதளவேயாயினும், அதனை ஒன்றுமேயில்லாதவர்களோடு நாம் பகிர்ந்து கொள்வோம்.
   மக்கள் மத்தியில் செல்லாத அருள் பணியாளர், தன் குருத்துவ இதயத்தைத் தூண்டியெழுப்பக் கூடிய மக்களிடமிருந்து கிடைக்கும் சிறந்த எண்ணங்களை இழக்கிறார். தங்களைவிட்டு வெளியேறாத அருள் பணியாளர்கள், இறைவனையும் மக்களையும் இணைப்பவர்களாக இல்லாமல், இடைத்தரகர்களாக, மேலாளர்களாக மாறி விடுகின்றனர். இவ்விரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை நாம் அறிவோம். மேலாளர் அல்லது இடைத்தரகர் "தனது சன்மானத்தை ஏற்கனவே பெற்றுவிட்டவர்". இவர் தன் இதயத்தையோ, வாழ்வையோ மக்களுக்கு முன் ஒப்படைக்காததால், அவர்களின் மனம் நிறைந்த நன்றியை ஒருபோதும் பெறுவதில்லை. ஒரு சில அருள் பணியாளர்கள் மனமிழந்து, விரக்தியாவதற்கு இதுவே காரணம். "ஆடுகளின் மணத்துடன்" ஆடுகள் மத்தியிலேயே வாழும் மக்களின் மேய்ப்பர்களாக, மக்களைப் பிடிக்கும் மீனவர்களாக இருப்பதற்குப் பதிலாக, பழமையானவற்றையும், புதியவற்றையும் சேகரிப்பவர்களாக இவ்வருள் பணியாளர்கள் வாழ்கின்றனர்.
அருள் பணியாளர்களின் தனித்துவத்திற்கு ஏற்பட்டுள்ள ஆபத்து நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால், இந்தத் தாக்குதலை எதிர்கொண்டு, ஆண்டவரின் பெயரால் நாம் தொடர்ந்து வலைகளை வீச முடியும். இன்றைய உலகச் சூழலில், "இன்னும் ஆழத்திற்குச் செல்ல" நாம் அழைக்கப்படுகிறோம். நமது செயல்பாடுகளில் நம்பிக்கை கொள்ளாமல், இறைவனின் அருள்போழிவில் நம்பிக்கை கொண்டு, நாம் வலைகளை வீசினால், அபரிமிதமான மீன்கள் வலையில் விழும் என்பதை நாம் நம்பலாம்.
   அன்பு இறைமக்களே, உங்கள் அன்பாலும், செபங்களாலும் அருள் பணியாளர்களுடன் நெருங்கியிருங்கள். அப்போதுதான், இறைவனின் இதயத்திற்கேற்ப நல்ல மேய்ப்பர்களாக இவர்கள் விளங்க முடியும்.
   அன்பு அருள் பணியாளர்களே, அருள்பொழிவு செய்யப்பட்டுள்ள நம்மை, தூய்மையின் ஆவியால் தந்தையாம் இறைவன் மீண்டும் புதுப்பிப்பாராக. நமது அருள்பொழிவு, விளிம்புவரை சென்று, அங்கு தேவையில் உள்ளோரை அருள்பொழிவு செய்ய இறை ஆவியார் நம்மைப் புதுப்பிப்பாராக. நாம் ஆண்டவரின் சீடர்கள் என்பதையும், அருள் பணியாளர் என்ற முறையில் நாம் அணியும் உடைகள் மீது மக்களின் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன என்பதையும், இவற்றைத் தவிர, வேறு எவ்வகைத் தனித்துவத்தையும் நாம் தேடாதவர்கள் என்பதையும் மக்கள் உணர்வார்களாக. அருள் பொழிவு செய்யப்பட்ட இயேசுவின் மகிழ்வுத் தைலத்தை நமது சொற்களாலும், செயல்களாலும் மக்கள் பெறுவார்களாக. ஆமென்.

Wednesday, March 27, 2013

மார்ச் 27, 2013

தந்தை இறைவனின் அன்பிற்கான பதிலுரையாக இயேசு தன்னையே சாவுக்கு கையளித்தார் - திருத்தந்தை

   வத்திக்கான் தூய பேதுரு பேராலய வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ், தனது முதல் புதன் பொது மறைபோதகத்த்தை வழங்கினார். இதில், திருச்சபை அனுசரித்து வரும் புனித வாரத்தின் முக்கியத்துவம் குறித்து திருத்தந்தை எடுத்துரைத்தார்.
   புனித வாரம் குறித்து இந்நாளில் உங்களோடு பேச விழைகிறேன். குருத்து ஞாயிறோடு இப்புனித வாரத்தை தொடங்கியுள்ளோம். இயேசுவின் பாடுகள், மரணம் மற்றும் உயிர்ப்போடு நாம் அவரோடு இணைந்து செல்லும் இந்த வாரம், திருவழிபாட்டு ஆண்டின் மையமாக உள்ளது. புனித வாரத்தில் வாழ்வது என்பது நமக்கு என்ன அர்த்தத்தைக் கொடுக்கிறது? கல்வாரியின் சிலுவை மற்றும் உயிர்ப்பை நோக்கிய அவரது பாதையில் பின்செல்வது என்பது எதைக் குறிக்கிறது? தன் இவ்வுலகப் பணிக் காலத்தின்போது இயேசு புனித பூமியின் தெருக்களில் நடந்தார், தன்னோடு இருக்கும்படி பன்னிரண்டு சாதாரண மனிதர்களைத் தேர்ந்துகொண்டார். அனைவரிடமும் எவ்வித வேற்றுமையும் பாராட்டாமல் உரையாடினார். பெரியவர், சிறியவர், பணக்கார இளைஞன், ஏழை விதவை, பலம் பொருந்தியவர், பலவீனமானவர் என வேறுபாடின்றி இறைவனின் கருணையையும் மன்னிப்பையும் வழங்கினார். அவர்களைக் குணப்படுத்தினார், ஆறுதலளித்தார், அனைவருக்கும் நம்பிக்கையை ஊட்டினார். ஒரு நல்ல தந்தையாக, நல்ல தாயாக அனைத்து மனிதர்களிடமும் அக்கறையுடையவராக இருக்கும் இறைவனை நோக்கி இயேசு மக்களை வழிநடத்திச் சென்றார்.
   நாம் அவரை நோக்கிச் செல்லவேண்டும் என இறைவன் காத்திருக்கவில்லை, மாறாக, எவ்விதக் கணக்கும் பார்க்காமல் அவர் நம்மை நோக்கி வந்தார். ஆயனற்ற ஆடுகள் போல் வாழ்ந்த மக்களிடையே வந்த இயேசு கிறிஸ்து, தினசரி உண்மை நிலைகளின் முன்னால் ஒரு சாதாரண மனிதன் போலவே வாழ்ந்தார். தங்கள் சகோதரன் இலாசரின் மரணத்தினால் துயருற்ற மார்த்தா மற்றும் மரியாவின் முன்னால் இயேசு அழுதார், வரி வசூலிப்பவர் ஒருவரைத் தன் சீடராக ஏற்றுக்கொண்டார், மற்றும் தன் நண்பனின் நம்பிக்கைத் துரோகத்திற்கும் உள்ளானார். இறைவன் நம் நடுவே நம்மோடு இருக்கிறார் என்ற உறுதிப்பாட்டை கிறிஸ்துவில் நமக்கு வழங்கியுள்ளார். இயேசு, "நரிகளுக்கு பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்கு கூடுகளும் உண்டு. மானிட மகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை" என்றார். இயேசுவுக்கு உறைவிடம் இல்லை, ஏனெனில் மக்களே அவரது இல்லம். அந்த இல்லத்தின் பணி இறைவனுக்காக அனைத்துக் கதவுகளையும் திறப்பதும், இறைவனின் அன்பு உடனிருப்பாக விளங்குவதும் ஆகும். மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையேயான உறவில் வரலாறு முழுவதும் தொடர்ந்து வரும் இந்த அன்பு திட்டத்தையே இப்புனிதவாரப் பயணத்தின் உச்சமாக நாம் கொண்டாடப்போகிறோம்.
   தனக்கென எதுவும் எடுத்துக்கொள்ளாமல் தன்னை முழுமையாக கையளிக்கும் அந்த நிலை நோக்கி எருசலேமிற்குள் நுழைகிறார் இயேசு. தன் நண்பர்களுடன் மேற்கொண்ட இறுதி இரவு உணவின்போது நமக்கென அப்பத்தைப் பகிர்ந்து கிண்ணத்தை வழங்கினார். இறைமகன் நம்மோடு இருப்பதற்காக, நம்முடன் தங்குவதற்காக நம் கைகளில் தன் உடலையும் இரத்தத்தையும் கையளித்தார். பிலாத்துவின் விசாரணையின் போது நடந்தது போலவே ஒலிவ மலையிலும், இறைவாக்கினர் எசாயா உரைக்கும் துன்புறும் ஊழியன் போல், எவ்வித மறுப்பும் இன்றி இயேசு தன்னையே கையளிக்கிறார். தியாகத்திற்கு இட்டுச்சென்ற இந்த அன்புத் திட்டத்தை, ஏதோ இதுதான் தலைவிதி என்பதாக இயேசு வாழவில்லை, வன்முறையான இந்த மரணத்தின் முன்னால் ஆழமான துன்ப நிலைகளை அவர் மறைக்கவில்லை, மாறாக, இறைவனில் முழு நம்பிக்கை கொண்டு செயல்பட்டார். நம்மீது இறைவன் கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்துவதற்காக இறைவிருப்பத்திற்கு முற்றிலும் இணங்கியவராக, தந்தையாம் இறைவனின் அன்பிற்கான பதிலுரையாக தன்னையே சாவுக்குக் கையளித்தார்.
   "சிலுவையில் இயேசு என்னை அன்புகூர்ந்தார், எனக்காக தன்னை கையளித்தார்" என்கிறார் தூய பவுல். இது நமக்குத் தரும் அர்த்தம் என்ன? இதுவே என்னுடைய, உங்களுடைய பாதை என்பதே இதன் அர்த்தம். இயேசுவைப் பொறுத்த வரையில், புனித வாரத்தை வாழ்வது என்பது இதயத்தின் உணர்வுகளால் மட்டும வாழ்வதல்ல. நாம் நம்மிலிருந்து வெளியே வந்து, தொலைவில் இருக்கிற, அதே வேளையில் கைவிடப்பட்ட மற்றும் புரிதலுக்காகவும், ஆறுதலுக்காகவும், உதவிகளுக்காகவும் ஏங்கும் மக்களுக்கென நம்மைத் திறக்க வேண்டும். அன்பும் கருணையும் நிறைந்த இயேசுவின் வாழும் உடனிருப்பைக் கொணர வேண்டியது இன்றைய அத்தியாவசிய தேவையாக உள்ளது. புனித வாரத்தை வாழ்வது என்பது சிலுவையின் வாழ்வாக, அதாவது துயரும் மரணமும் கொண்டதாகத் தோன்றுகிறது, ஆனால் இது வாழ்வைக் கொணரும் அன்பையும், தன்னையே வழங்குவதையும் உள்ளடக்கியது. கிறிஸ்துவோடு இணைந்து வாழ்வது என்பது முதலில் நம்மை விட்டு நாம் வெளிவருவதை எதிர்பார்க்கிறது. கடவுள் நம்மிடையே குடிகொள்ள வந்தார். நமக்கு நம்பிக்கையைத் தந்து நம்மை மீட்கும் இறைஇரக்கத்தை நமக்குக் கொணர்ந்தார். நாம் அவரோடு இணந்திருப்பது என்பது அந்த தொன்னூற்றொன்பது ஆடுகளுள் ஒன்றாக இருப்பதில் மனநிறைவு கொள்வதில் இல்லை, மாறாக அந்தக் காணாமல் போன ஓர் ஆட்டைக் கண்டுபிடிப்பதில் அவரோடு இணைந்து தேடுவதில் இருக்கிறது.
   'எனக்கு நேரமில்லை', 'எனக்கு நிறைய வேலையிருக்கிறது', 'இது சிரமமானது', -'என்னிடமுள்ள சிறிய சக்தியை வைத்துக்கொண்டு நான் என்ன பெரிதாக சாதித்துவிடமுடியும்' என நம்மில் சிலர் கேட்கலாம். நாம் பலவேளைகளில் சிறு செபங்களிலும், ஞாயிறு திருப்பலிகளிலும், சிறிய பிறரன்பு செயல்களிலும் நிம்மதியடைந்து விடுகிறோம். கிறிஸ்துவை மற்றவர்களுக்கு கொணர்வதற்கு நாம் நம்மையே திறக்க முன்வருவதில்லை. நாமும் ஒரு வகையில் தூய பேதுருவைப் போன்று இருக்கிறோம். இயேசு, தன் பாடுகள், மரணம் மற்றும் உயிர்ப்பு, அதாவது தன்னையே முற்றிலுமாக அன்பில் பிறருக்கு வழங்குவது குறித்து பேசியபோது, தூய பேதுரு இயேசுவை தனியாக அழைத்துப்போய் கடிந்து கொள்கிறார். இயேசு எடுத்துரைத்தது அவரால் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்தது, மெசியா குறித்த அவரின் எண்ணத்திற்கு முரணானதாக இருந்தது. இயேசுவோ துய பேதுருவை நோக்கி கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். இயேசு தம் சீடர்கள் பக்கம் திரும்பிப் பார்த்து பேதுருவிடம், "என் கண் முன் நில்லாதே, சாத்தானே. ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்" என்று கடிந்துகொண்டார்.
   கடவுள் கருணையுடன் எண்ணுகிறார். தன் மகன் திரும்பி வருவதற்காகக் காத்திருக்கும் அன்பு தந்தையாகச் செயல்படுகிறார். கள்வர்களால் தாக்கப்பட்டவனைக் கண்டு அவனுக்கு உதவும் நல்ல சமாரியராக இறைவன் செயல்படுகிறார். தன் உயிரையேக் கொடுத்து மந்தையைக் காக்கும் நல்லாயனாக இறைவன் உள்ளார். நாம் நமது விசுவாசத்தின் ஒளியையும் மகிழ்வையும் நம் அருகிலிருப்போருக்கு கொணரும் வண்ணம் நம்மை விட்டு வெளியே வந்து, நம் இதயங்களின், வாழ்வின், பங்குதளங்களின், இயக்கங்களின் கதவுகளை மற்றவர்களுக்கு திறக்க உதவும் அருளை இறைவன் நமக்கு வழங்கும் காலமே இந்த புனித வாரம். இறைவனின் அன்புடன் நாம் செயல்படும்போது இறைவனே நம்மை வழிநடத்தி நம் செயல்பாடுகளைப் பலனுள்ளதாக மாற்றுகிறார். இறைவனின் அன்பை நாம் சந்திக்கும் மனிதர்களுக்கு கொணரும் வண்ணம் இந்நாட்களில் மன உறுதியுடன் வாழ உங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
   இவ்வாறு தன் புதன் பொது மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, மத்திய ஆப்பிரிக்கவில் இடம்பெறும் மோதல்கள் நிறுத்தப்பட்டு அமைதி திரும்ப உழைக்க வேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்தார். அந்நாட்டில் துன்புறும் மக்களுக்காக தான் செபித்து வருவதாகவும் உறுதி கூறிய பாப்பிறை, கூடியிருந்த அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

Sunday, March 24, 2013

மார்ச் 24, 2013

சிலுவையில் இறப்பதற்காகவே இயேசு
எருசலேமில் நுழைந்தார் - திருத்தந்தை

   வத்திக்கான் புனித பேதுரு பேராலய வளாகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் நிகழ்த்திய குருத்து ஞாயிறு திருப்பலியில் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பங்கேற்றனர். இத்திருப்பலியில் திருத்தந்தை பிரான்சிஸ் வழங்கிய மறையுரை பின்வருமாறு:
   இயேசு எருசலேமில் நுழைகிறார். விழாக்கால மனநிலையோடு சீடர்களின் கூட்டம் அவரோடு செல்கிறது. அவர்களது உடைகள் அவருக்கு முன் விரிக்கப்படுகின்றன, அவர் செய்த புதுமைகள் பற்றி பேசப்படுகிறது, சத்தமான வாழ்த்தொலிகள் கேட்கிறது: "ஆண்டவர் பெயரால் அரசராய் வருகிறவர் போற்றப்பெறுக! விண்ணகத்தில் அமைதியும் மாட்சியும் உண்டாகுக!" (லூக்கா 19:38).
   மக்கள், கொண்டாட்டம், வாழ்த்து, ஆசி, அமைதி: எங்கும் மகிழ்ச்சி நிரம்பியிருக்கிறது. எளியோர், தாழ்ச்சியுடையோர், ஏழைகள், மறக்கப்பட்டோர், உலகத்தின் கண்களில் பெரிதாக தெரியாதோரின் உள்ளங்களில் பெரிய நம்பிக்கையை இயேசு தட்டி எழுப்புகிறார். அவர் மனித துன்பங்களை புரிந்துகொள்கிறார், கடவுளின் இரக்கமுள்ள முகத்தை காண்பிக்கிறார், உடலையும் ஆன்மாவையும் குணமாக்க அவர் வளைந்து கொடுக்கிறார். இந்த இதயமே நம் அனைவரையும் நோக்குகிறது, நமது நோய்களையும், பாவங்களையும் பார்க்கிறது. இயேசுவின் அன்பு பெரியது. இத்தகைய அன்புடன் எருசலேமில் நுழையும் அவர் நம் அனைவரையும் காண்கிறார். இது அழகான காட்சி, இயேசுவின் அன்பின் ஒளி, அவர் இதயத்தின் ஒளி, மகிழ்ச்சி, கொண்டாட்டம்.
  திருப்பலியின் தொடக்கத்தில், இவை அனைத்தையும் மீண்டும் செய்தோம். நமது குருத்தோலைகளையும், ஒலிவ கிளைகளையும் நாம் அசைத்தோம், "ஆண்டவர் பெயரால் அரசராய் வருகிறவர் போற்றப்பெறுக!" என்று பாடினோம்; நாமும் இயேசுவை வரவேற்றோம்; அவருடன் இணைந்திருக்கும் நமது மகிழ்ச்சியை நாமும் வெளிப்படுத்தினோம், அவரை நமது நெருக்கத்தில் அறிந்து, நம்மிலும், நம் நடுவிலும் ஒரு நண்பராக, சகோதரராக மட்டுமின்றி அரசராகவும் இருக்கிறார்: அதுவே, நமது வாழ்வுக்கு ஒளி தரும் கலங்கரை விளக்கம். இயேசு கடவுளாக இருக்கிறார், ஆனால் அவர் தன்னை தாழ்த்தி நம்மோடு நடக்கிறார். அவர் நமது நண்பராகவும், நமது சகோதரராகவும் இருக்கிறார். இங்கு, அவர் நமது பயணத்தில் நமக்கு ஒளியேற்றுகிறார். எனவ, இன்று நாம் அவரை வரவேற்கிறோம். இங்கு நம் மனதில் முதலாவதாக தோன்றும் வார்த்தை "மகிழ்ச்சி!" சோகமுள்ள ஆண்களாகவோ, பெண்களாகவோ இருக்காதீர்கள்: ஒரு கிறிஸ்தவர் ஒருபோதும் சோகமாக இருக்க கூடாது. அவநம்பிக்கைக்கு ஒருபோதும் இடம் கொடாதீர்கள்!
   நமது மகிழ்ச்சி அதிகமான பொருட்களை கொண்டிருப்பதால் வருவதில்லை. மாறாக, ஒரு மனிதரை சந்திப்பதால் வருகிறது: இயேசு, அவரோடு இருப்பதை அறிந்து கொண்டால் ஒருபோதும், கடினமான தருணங்களிலும், நம் வாழ்வில் வரும் பிரச்சனைகளிலும், தீர்க்க முடியாததாக தோன்றும் இடையூறுகளிலும் நாம் தனித்து இருப்பதில்லை. இத்தகைய நேரத்தில் எதிரியோ, அலகையோ வந்து, அதுவும் வானதூதரின் வேடத்தில் மெல்ல வந்து தனது வார்த்தையை நமக்கு கூறலாம். அவனுக்கு செவிகொடுக்க வேண்டாம்! நாம் இயேசுவை பின்பற்றுகிறோம். நாம் இணைந்திருக்கிறோம், நாம் இயேசுவை பின்பற்றுகிறோம், அனைத்துக்கும் மேலாக அவர் நம்மோடு இருக்கிறார், தனது தோள்களில் நம்மை சுமக்கிறார். இதுவே நம் மகிழ்ச்சி, இந்த நம்பிக்கையையே நாம் இந்த உலகத்துக்கு கொண்டுசெல்ல வேண்டும். விசுவாசத்தின் மகிழ்ச்சியை நாம் ஒவ்வொருவரிடமும் கொண்டு செல்வோம். நமது விசுவாசம் திருடப்படாதபடி பார்த்துக்கொள்வோம். இயேசு நமக்கு தந்த நம்பிக்கையில் உறுதியாய் இருப்போம்!
   இரண்டாவது வார்த்தை: இயேசு ஏன் எருசலேமில் நுழைந்தார்? மேலாக: இயேசு எவ்வாறு எருசலேமில் நுழைந்தார்? மக்கள் கூட்டம் அவரை அரசராக அறிக்கையிட்டது. அவர் அதை மறுக்கவில்லை, அவர் அவர்களை அமைதியாக இருக்குமாறு கூறவில்லை. ஆனால் இயேசு எத்தகைய அரசர்? நாம் அவரை உற்று நோக்குவோம்: அவர் ஒரு கழுதையின் மீது பயணம் செய்கிறார், அவருக்கென்று ஓர்  அரசவை இல்லை, அவரது வலிமையின் அடையாளமாக எந்த படையும் அவரை சூழ்ந்து வரவில்லை. அவர் தாழ்ச்சியும், எளிமையும் உள்ள நாட்டுப்புற மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டார், அவர்கள் "இயேசுவே மீட்பர்" என்று விசுவாசம் கொண்டிருந்தார்கள். இயேசு புனித நகரத்தில் நுழைந்தது உலக அரசர்களுக்குரிய மரியாதையை பெறுவதற்கு அன்று. எசாயா முன்னரிவித்தவாறு, சாட்டையால் அடிக்கப்படவும், நிந்தனை செய்யப்படவும் அவர் நுழைந்தார். முள்முடியை பெறவும், கொலையும், ஊதா அங்கியை பெறவும் அவர் நுழைந்தார்: அவரது அரசக்கோலம் அவமானத்துக்குரியதாய் இருந்தது. மரத்தினாலான பழுவை சுமந்துகொண்டு கல்வாரியில் ஏறுவதற்காக அவர் நுழைந்தார். இது நமக்கு இரண்டாவது வார்த்தையை கொண்டு வருகிறது: "சிலுவை!" சிலுவையில் இறப்பதற்காகவே எருசலேமில் நுழைந்தார். இங்கு கடவுளுக்குரிய அவரது அரசத்தன்மை ஒளிர்கிறது: சிலுவை மரமே அவரது அரச அரியணையாக இருக்கிறது.
   திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கர்தினால்களிடம் கூறியதை நான் நினைத்து பார்க்கிறேன்: "நீங்கள் சிலுவையில் அறையப்பட்ட அரசரின் இளவரசர்களாய் இருக்கிறீர்கள்" அதுவே கிறிஸ்துவின் அரியணை. இயேசு அதை தன் மீது சுமது செல்கிறார்... ஏன்? ஏன் சிலுவையை? இயேசு தீமையை, வேண்டாததை, உலகின் பாவங்களை, நமது பாவங்களையும் சேர்த்து தன் மீது சுமந்து சென்று, அதை தூய்மையாக்குகிறார், தன இரத்தத்தாலும், இரக்கத்தாலும், கடவுளின் அன்பாலும் அதை தூய்மையாக்குகிறார். நம்மை சுற்றி இருப்பதை நோக்குவோம்: தீமைகளால் மனிதகுலம் எந்த அளவுக்கு காயங்களை பெற்றிருக்கிறது! போர்கள், வன்முறை, நலிந்தோரை தாக்கும் பொருளாதார சீரழிவுகள், பணத்தின் மீதான பேராசை. "எந்த சவச்சீலையிலும் பைகள் இருக்காது!" என குழந்தைகளாகிய எங்களுக்கு எனது பாட்டி கூறுவார். பணத்தின் மீதான பேராசை, அதிகாரம், ஊழல், பிரிவினைகள், மனித வாழ்வுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் படைப்புக்கு எதிரானவை! மேலும், நம் ஒவ்வொருவருக்கும் நமது சொந்த பாவங்கள் தெரியும்: கடவுளுக்கும், நமது அருகில் உள்ளோருக்கும், படைப்பு அனைத்துக்குமே அன்பும் மரியாதையும் செலுத்த நாம் தவறுகிறோம். சிலுவையில் தொங்கும் இயேசு தீமை அனைத்தின் சுமையையும் உணர்ந்தவராகவும், கடவுளின் அன்பால் அதை வேன்றவராகவும் இருக்கிறார், அவர் அதை தனது உயிர்ப்பின் வழியாக வென்றார். இதுவே தன் அரியணையாகிய சிலுவை வழியாக கிறிஸ்து நம் அனைவருக்கும் கொண்டு வந்த நன்மை. அன்போடு இணைந்ததாய் இருக்கும் கிறிஸ்துவின் சிலுவை சோகத்துக்கு அன்று, மாறாக மகிழ்ச்சிக்கு இட்டுச் செல்லும். மீட்பு பெற்றதன் மற்றும் அவர் இறந்த நாளில் செய்ததில் சிறிதளவு செய்வதன் மகிழ்ச்சி.
  இன்று இந்த சதுக்கத்தில், ஏராளமான இளையோர் இருக்கிறார்கள்: 28 ஆண்டுகளாக குருத்து ஞாயிறு உலக இளையோர் தினமாக உள்ளது. இதுவே நமது மூன்றாவது வார்த்தை: "இளையோர்!" நீங்கள் திருப்பயண சிலுவையை உலகின் அனைத்து கண்டங்களின் நெடுஞ்சாலைகளிலும் சுமந்து வந்திருக்கிறீர்கள்! "நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்" (மத்தேயு 28:19) என்ற இயேசுவின் அழைப்புக்கு பதிலளிக்கும் வகையில் நீங்கள் அதை சுமந்திருக்கிறீர்கள், இதுவே இந்த ஆண்டு இளையோர் தினத்தின் மையப்பொருளாக உள்ளது. அன்பு நண்பர்களே, அருளாளர் 2ம் ஜான் பால், 16ம் பெனடிக்ட் ஆகியோரின் வழியில், இன்று முதல் இந்த பயணத்தில் நானும் உங்களோடு இருக்கிறேன். கிறிஸ்துவின் சிலுவையின் மாபெரும் திருப்பயணத்தில், நாம் ஏற்கனவே அடுத்த கட்டத்தை நெருங்கிவிட்டோம். வரும் ஜூலையில் ரியோ டி ஜெனிரோவில் உங்களை சந்திக்கும் நாளை மகிழ்ச்சியோடு நோக்குகிறேன். இளையோர் உலகத்துக்கு சொல்ல வேண்டியது இதுவே: "இயேசுவை பின்பற்றுவது நல்லது, இயேசுவோடு செல்வது நல்லது, இயேசுவின் செய்தி நல்லது, நம்மை விட்டு வெளியேறுவது நல்லது, உலகின் மூலைகள் அனைத்திலும் இயேசுவை பிறருக்கு கொண்டு செல்ல வேண்டும்!"
   மூன்று வார்த்தைகள்: மகிழ்ச்சி, சிலுவை, இளையோர். கன்னி மரியாவின் பரிந்துரையை நாம் வேண்டுவோம். கிறிஸ்துவை சந்திப்பதன் மகிழ்ச்சியையும், சிலுவையின் அடியை நோக்க தேவையான அன்பையும், இந்த புனித வாரத்திலும், நம் வாழ்நாள் முழுவதும் இயேசுவை பின்பற்றத் தேவையான ஆர்வமுள்ள இளம் உள்ளத்தையும் கொண்டிருக்க அவர் நமக்கு கற்றுத் தருவார். ஆமென்.

Tuesday, March 19, 2013

மார்ச் 19, 2013

தேவையில் இருப்போருக்கு பணி புரிவதே
உண்மையான அதிகாரம் - திருத்தந்தை

   கத்தோலிக்க திருச்சபையின் 266வது திருத்தந்தையின் பதவியேற்பு விழா வத்திக்கான் புனித பேதுரு பேராலயத்தில் நடைபெற்றது. அங்கு கூடியிருந்த மக்கள் நடுவே ஆசி வழங்கியவாறே பவனி வந்த திருத்தந்தை பிரான்சிஸ், பதவியேற்பு திருப்பலி வழிபாட்டின் தொடக்கத்தில் தனது பணிக்குரிய பாலியம், மீனவரின் மோதிரம் ஆகியவற்றை பெற்றுக் கொண்டார். திருப்பலியில் புனித யோசேப்பை மையமாக கொண்டு திருத்தந்தை வழங்கிய மறையுரை பின்வருமாறு:
அன்பு சகோதர சகோதரிகளே,
   திருச்சபையின் காவலரும், அன்னை மரியாவின் வாழ்க்கைத் துணைவருமான புனித யோசேப்பு பெருவிழாவன்று பேதுருவின் பணியை நான் துவங்கும் அருளை வழங்கியதற்காக இறைவனுக்கு நன்றி சொல்கிறேன். எனக்கு முன்னர் தலைமைப் பணியிலிருந்த திருத்தந்தையின் (ஜோசப் ரட்சிங்கர்) பெயர்கொண்ட திருநாள் இது என்பது கூடுதலான ஒரு மகிழ்வு. மிகுந்த அன்போடும், நன்றியோடும் நமது செபங்களால் அவருடன் நெருங்கியிருப்போம்.
   என் உடன் சகோதர கர்தினால்கள், ஆயர்கள், குருக்கள், திருத்தொண்டர்கள், இருபால் துறவியர் மற்றும் அனைத்து விசுவாசிகளுக்கும் என் அன்பு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். ஏனைய கிறிஸ்தவ சபைகளிலிருந்தும், யூதக் குழுமத்திலிருந்தும், பிற மதங்களிலிருந்தும் வந்திருக்கும் பிரதிநிதிகளுக்கு என் நன்றி. பல்வேறு நாடுகளிலிருந்து வந்திருக்கும் அரசுத் தலைவர்களுக்கும், ஏனைய அரசுகளின் பிரதிநிதிகளுக்கும் என் வாழ்த்துக்கள்.
   “யோசேப்பு, ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார்” (மத்தேயு 1:24) என்று இன்றைய நற்செய்தியில் வாசிக்கக் கேட்டோம். புனித யோசேப்புக்கு இறைவன் வழங்கிய பணி இங்கு தெளிவாகிறது, அதாவது, பாதுகாவலர் என்பதே அவருக்கு வழங்கப்பட்ட பணி. யாருக்கு அவர் பாதுகாவலர்? மரியாவுக்கு, இயேசுவுக்கு பாதுகாவலர்; ஆனால், இந்த பாதுகாவல் திருச்சபையையும் உள்ளடக்குகிறது. "புனித யோசேப்பு, மரியாவைப் பாதுகாத்து, இயேசுவை நல்முறையில் வளர்க்க தன்னையே அர்ப்பணித்ததுபோல், கிறிஸ்துவின் மறையுடலான திருச்சபையையும் பாதுகாத்து வருகிறார்" என்று அருளாளர் இரண்டாம் ஜான் பால் கூறியுள்ளார்.
   பாதுகாவலர் என்ற பணியை புனித யோசேப்பு எவ்விதம் ஆற்றுகிறார்? அமைதியாக, தாழ்ச்சியாக, எவ்வித பதட்டமுமின்றி ஆற்றுகிறார். அனைத்தையும் புரிந்துகொள்ள முடியாதச் சூழலிலும், மாறாத நம்பிக்கையுடன் தன் பணியை ஆற்றுகிறார். மரியாவை மனைவியாக ஏற்றுக்கொண்ட நேரத்திலிருந்து, பன்னிரு வயதில் எருசலேம் கோவிலில் இயேசுவைக் கண்டுபிடிக்கும்வரை, ஒவ்வொரு நொடிப்பொழுதும் அன்புடன் பாதுகாத்து வருகிறார். மரியாவின் இன்பத் துன்பங்களில் பங்கேற்கிறார். எகிப்திற்குத் தப்பித்து ஓடியபோதும், பின்னர் நாசரேத்தில் அமைதி வாழ்வு வாழ்ந்தபோதும், இயேசுவுக்குத் தன் தொழிலைக் கற்றுத் தந்தபோதும் புனித யோசேப்பு அருகிருந்தார்.
   கடவுளின் வார்த்தைகளைக் கேட்டு, அவரது திட்டங்களை திறந்த மனதுடன் ஏற்றதால், பாதுகாவலர் என்ற அழைப்பை புனித யோசேப்பால் நிறைவேற்ற முடிந்தது. இன்றைய முதல் வாசகத்தில் நாம் கேட்டதுபோல், இத்தகைய மனப்பான்மையையே தாவீதிடம் கடவுள் கேட்கிறார். மனிதக் கைகளால் கட்டப்பட்ட ஓர் இல்லத்தைக் காட்டிலும், கடவுளின் வார்த்தைகளை நம்பி, அவரது திட்டத்தின் பேரில் கட்டப்படும் இல்லத்தையே அவர் விரும்புகிறார். புனித யோசேப்பு தன்னைச் சுற்றி நிகழ்ந்தவற்றை ஓர் எதார்த்தப் பார்வையுடன் நோக்கி, தன் சூழல் அனைத்தையும் மென்மையாக புரிந்துணர்ந்ததால், அவரால் அறிவார்ந்த முடிவுகளை எடுக்க முடிந்தது. புனித யோசேப்புவிடமிருந்து நாம் பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். கிறிஸ்துவை நம் வாழ்வில் பாதுகாக்க வேண்டும், அதன் வழியாக நாம் மற்றவர்களையும், படைப்பு அனைத்தையும் காக்க முடியும்.
   'பாதுகாவலர்' என்ற அழைப்பு கிறிஸ்தவர்களுக்கு மட்டும் கொடுக்கப்பட்டுள்ள அழைப்பு அல்ல; மனிதராய்ப் பிறந்த அனைவருக்கும் கொடுக்கப்பட்டுள்ள அழைப்பு இது. தொடக்க நூல் கூறுவது போலவும், அசிசி நகர் புனித பிரான்சிஸ் வாழ்ந்தது போன்றும், இந்த அழகிய உலகையும், படைப்பு அனைத்தையும் காப்பது நமது கடமை. கடவுளின் படைப்பையும், நமது சுற்றுச்சூழலையும் காப்பது; ஒவ்வோரு மனிதரையும் காப்பது; முக்கியமாக, மனிதர்களிடையில் நாம் அதிகம் சிந்தித்துப் பார்க்காதவர்களான குழந்தைகள், வயது முதிர்ந்தோர், தேவைகள் அதிகம் உள்ளோர் ஆகியோரைக் காப்பது நமது கடமை.
   நமது பாதுகாக்கும் பணி குடும்பங்களில் ஆரம்பமாக வேண்டும். கணவனும் மனைவியும் முதலில் ஒருவர் ஒருவரை பாதுக்காக்க வேண்டும், பின்னர் தங்கள் குழந்தைகளைக் காக்க வேண்டும், குழந்தைகள் வளர்ந்ததும் தங்கள் பெற்றோரைக் காக்க வேண்டும். இறைவன் நமக்கு வழங்கியுள்ள அனைத்து கொடைகளையும் பாதுக்காப்பது நமக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பு. நம் சகோதர சகோதரிகளையும், படைப்பையும் நாம் பாதுகாக்கத் தவறும்போது, அழிவை நோக்கிய பாதையை நாம் திறந்துவிடுகிறோம். வரலாற்றின் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மரணத்தையும், அழிவையும் விளைவிக்கவும், மனித குலத்தின் முகத்தைக் குலைக்கவும் எழும் ஏரோதுகள் நம்மிடையே உள்ளனர்.
   பொருளாதாரம், அரசியல் மற்றும் சமுதாய தளங்களில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் தலைவர்களுக்கும், அனைத்து நல்மனம் கொண்டோருக்கும் நான் முக்கியமான ஒரு வேண்டுகோளை விடுக்கிறேன். கடவுளின் திட்டம் ஆழப் பதிந்துள்ள படைப்பின் பாதுகாவலர்களாக நாம் இருப்போம். பிறரையும், படைப்பையும் பாதுக்காப்பதற்கு முன், நம்மைக் கவனமுடன் கண்காணிக்க வேண்டும். நமக்குள் எழும் வெறுப்பு, கர்வம், பொறாமை ஆகிய உணர்வுகளே நம்மை உருக்குலைக்கின்றன என்பதைக் கவனமுடன் கண்டுணர வேண்டும். நன்மைத்தனத்தையும், மென்மையான உணர்வுகளையும் கண்டு நாம் பயப்படத் தேவையில்லை.
   இங்கு மற்றொரு எண்ணத்தைப் பகிர்ந்துகொள்ள விழைகிறேன். பாதுகாவல் என்ற பணிக்கு, நன்மைத்தனமும், மென்மையும் கொண்டிருப்பது அவசியம். புனித யோசேப்பு, உடலளவில் உறுதிவாய்ந்த தொழிலாளியாக இருந்தார் எனினும், மனதில் மென்மை உணர்வுகள் கொண்டிருந்ததால், அவர் பாதுகாவலராக இருக்க முடிந்தது. மென்மையான மனது கொண்டிருப்பதை வலுவிழந்த நிலையாகக் காண்பது தவறு, மென்மை உணர்வுகள் கொண்டோரிடமே, கனிவு, கருணை, பிறரின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது போன்ற நற்பண்புகள் காணப்படும். எனவே, நன்மைத்தனத்தையும், மென்மையான உணர்வுகளையும் கண்டு நாம் அஞ்சக்கூடாது.
   புனித யோசேப்பின் பெருவிழாவுடன், உரோம் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் (திருத்தந்தை) பணியின் தொடக்க விழாவையும் இன்று நாம் கொண்டாடுகிறோம். பேதுருவின் வழித்தோன்றல் என்ற நிலை அதிகாரமுள்ள ஒரு நிலை. இயேசு பேதுருவுக்கு அதிகாரம் அளித்தார். ஆனால், அது, எவ்வகை அதிகாரம்? தன் உயிர்ப்புக்குப் பின்னர் பேதுருவைச் சந்தித்த இயேசு, அவரிடமிருந்து மும்முறை அன்பின் வாக்குறுதியைப் பெறுவதிலிருந்தும், என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர்; என் ஆடுகளை மேய் என்று சொன்னதிலிருந்தும் இது எவ்வகை அதிகாரம் என்பதைப் புரிந்துகொள்ளலாம். பணி புரிவதே உண்மையான அதிகாரம். இந்தப் பணியில் தன்னை முழுவதும் இணைத்து, இறுதியாக சிலுவையில் இணைவதே திருத்தந்தையின் அதிகாரம். சிறப்பாக, மனுக்குலத்தில் வறியோர், வலுவிழந்தோர், எவ்வகையிலும் முக்கியத்துவம் பெறாதோர் திருத்தந்தையின் பணியில் முதலிடம் பெறவேண்டும். மத்தேயு நற்செய்தியில், இறுதித் தீர்வையின்போது சொல்லப்பட்டுள்ள பசியுற்றோர், தாகமுற்றோர், அன்னியர், ஆடையற்றோர், நோயுற்றோர், சிறையில் இருப்போர் (மத். 25: 31-46) ஆகியோரே இப்பணிக்கு முக்கிய மனிதர்கள்.
   புனித யோசேப்பின் பணிவாழ்வில் விளங்கிய தாழ்ச்சியும், நம்பிக்கையும் திருத்தந்தையின் பணிவாழ்விலும் விளங்கவேண்டும். அன்புடன் பணிபுரிபவர்களால் மட்டுமே அகிலத்தைப் பாதுகாக்க முடியும். இன்றைய இரண்டாம் வாசகத்தில், ஆபிரகாமைப்பற்றி புனித பவுல் கூறும்போது, "எதிர்நோக்குக்கு இடம் இல்லாததுபோல் தோன்றினும், அவர் எதிர்நோக்கினார்: தயங்காமல் நம்பினார்" (உரோமையர் 4:18) என்று எழுதியுள்ளார். இன்று நம்மைச் சூழ்ந்துள்ள இருளுக்கு நடுவில், நாம் நம்பிக்கையின் ஒளியைக் காணவேண்டும், அந்த நம்பிக்கையை மனிதர்களுக்குக் கொணரவேண்டும். நம்பிக்கை தரும் பணிக்கே உரோமையின் ஆயர் அழைக்கப்பட்டிருக்கிறார்.
   கன்னி மரியா, புனித யோசேப்பு, புனிதர்கள் பேதுரு மற்றும் பவுல், புனித பிரான்சிஸ் ஆகியோரின் பரிந்துரையால், தூய ஆவியார் என் பணியில் உடனிருக்க நான் வேண்டுகிறேன். நீங்கள் அனைவரும் எனக்காகச் செபிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஆமென்.

Thursday, February 28, 2013

பிப்ரவரி 28, 2013

கர்தினால்களுக்கு திருத்தந்தையின் பிரியாவிடை உரை

   எட்டு ஆண்டுகளாக கத்தோலிக்க திருச்சபையின் தலைமைப் பொறுப்பை ஏற்று பணியாற்றிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், தன் பணியின் இறுதி நாளன்று உலகெங்குமிருந்து ரோம் நகர் வந்துள்ள கர்தினால்களை குழுவாக சந்தித்து பிரியாவிடை உரை வழங்கினார்.
அன்புக்குரிய சகோதரர்களே,
   உங்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். எம்மாவு சீடர்களைப் போன்று, உயிர்த்த ஆண்டவரின் உடனிருப்பின் ஒளியில் உங்களோடு சேர்ந்து நடந்தது எனக்கு மகிழ்ச்சி அளித்தது. இந்த எட்டு ஆண்டுகளில், ஒளிமிகுந்த அழகான நாட்களும், மேகங்கள் சூழ்ந்த நாட்களும் இருந்தன. நமது பணியின் ஆன்மாவாகிய ஆழ்ந்த அன்போடு நாம் கிறிஸ்துவுக்கும், அவரது திருச்சபைக்கும் சேவையாற்ற முயற்சித்தோம். நமது ஒன்றிப்புக்கும், சேர்ந்து செபிக்கவும், கர்தினால்கள் குழாமின் தொடர்ந்த ஒற்றுமைக்கும் உதவிபுரியும் ஆண்டவருக்கு நாம் நன்றி சொல்வோம்.
   திருச்சபை மற்றும் அதன் பணியைப் பற்றி, என் இதயத்துக்கு நெருக்கமான ஓர் எளிய சிந்தனையை உங்களுக்கு தர விரும்புகிறேன். இறையியலாளர் குவார்டினி கூறுகிறார்: "திருச்சபை என்பது மேசையில் கட்டப்பட்ட ஒரு நிறுவனம் அல்ல, மாறாக, அது வாழும் உண்மை. அது ஏனைய உயிர்களைப் போன்று, காலச் சூழலில் வாழ்ந்து உருமாறுகின்றது, இருந்தாலும் அதன் இயல்பு மாறாமல் நிலைத்திருக்கிறது. கிறிஸ்துவே அதன் இதயத்தில் இருக்கிறார்." இதுவே நாம் நேற்று புனித பேதுரு சதுக்கத்தில் கண்ட அனுபவம். திருச்சபை தூய ஆவியால் இயக்கப்பெற்று, உண்மையில் கடவுளின் வல்லமையால் வாழும் உயிருள்ள உடலாக இருப்பதை காண முடிகிறது. அது இவ்வுலகில் இருந்தாலும், இவ்வுலகைச் சார்ந்தது அன்று. நேற்று நாம் பார்த்தது போன்று, அது கடவுளுடையது, கிறிஸ்துவினுடையது, ஆவிக்குரியது.
  ஆகவேதான், குவார்டினியின் இன்னொரு கூற்று உண்மையாகிறது: "திருச்சபை ஆன்மாக்களில் விழித்தெழுகிறது." இறைவார்த்தையை ஏற்று தூய ஆவியின் வல்லமையால் கருதாங்கிய கன்னி மரியாவைப் போன்ற ஆன்மாக்களில் திருச்சபை வாழ்ந்து, வளர்ந்து, விழித்தெழுகிறது. கிறிஸ்துவை இந்த உலகில் பெற்றெடுப்பதற்காக, ஏழ்மையிலும் தாழ்ச்சியிலும் அவர்கள் தங்கள் உடலை கடவுளுக்கு காணிக்கை ஆக்குகிறார்கள். திருச்சபையின் வழியாக மனித உடலேற்பு மறைபொருள் எப்பொழுதும் நிலைத்திருக்கிறது. கிறிஸ்து எல்லாக் காலங்களிலும், அனைத்து இடங்களிலும் தொடர்ந்து நடைபோடுகிறார். அன்பு சகோதரர்களே, இந்த மறைபொருளுக்காகவும், செபத்திலும், சிறப்பாக அன்றாட நற்கருணை கொண்டாட்டத்திலும் தொடர்ந்து இணைந்திருந்து திருச்சபைக்கும் மனிதகுலம் அனைத்துக்கும் நாம் பணியாற்றுவோம். இதுவே நம்மிடம் இருந்து யாராலும் பறித்துக்கொள்ள முடியாத மகிழ்ச்சி.
   உங்கள் ஒவ்வொருவரிடம் இருந்தும் தனிப்பட்ட விதத்தில் பிரியாவிடை பெறும் இவ்வேளையில், எனது செபத்தின் வழியாக நான் உங்களுக்கு நெருக்கமாக இருப்பேன் என்பதை தெரிவிக்க விரும்புகிறேன், அதன் வழியாக நீங்கள் தூய ஆவியின் செயலுக்கு முற்றிலும் பணிந்து புதிய திருத்தந்தையை தேர்வு செய்வீர்கள். ஆண்டவர் தனது திருவுளத்தை உங்களுக்கு காட்டுவாராக! உங்கள் நடுவே, கர்தினால்கள் குழாமின் மத்தியில், எதிர்காலத் திருத்தந்தைக்கு இன்று என் நிபந்தனையற்ற மரியாதையையும், கீழ்ப்படிதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவை அனைத்துக்காகவும், பாசத்தோடும் நன்றியோடும், உளமார்ந்த முறையில் எனது அப்போஸ்தலிக்க ஆசீரை உங்களுக்கு நான் வழங்குகிறேன்.

Wednesday, February 27, 2013

பிப்ரவரி 27, 2013

வரலாற்றின் பாதையில் திருச்சபையை
வழிநடத்துபவர் இறைவனே! - திருத்தந்தை

  திருத்தந்தை 16ம் பெனடிக்ட், பதவி விலகுவதற்கு முன் வழங்கிய இறுதி மறை போதகத்தை கேட்க வத்திக்கான் புனித பேதுரு பேராலய வளாகத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் திரண்டிருந்தனர். அவர்கள் நடுவே பவனியாக வந்து உரை நிகழ்த்திய திருத்தந்தை, கடந்த 8 ஆண்டுகளில் இறைவன் செய்த அனைத்து நன்மைகளுக்காகவும் நன்றி கூறினார். தனது செபங்கள் மூலம் நான் திருச்சபையோடு இணைந்து நடப்பதாகவும் திருத் தந்தை வாக்களித்தார்.
அன்பு சகோதர சகோதரிகளே,
   எனது இந்த இறுதி புதன் பொதுமறைபோதகத்தில் கலந்துகொள்ள இவ்வளவு பெரும் எண்ணிக்கையில் வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் என் அன்பும் பாசமும் நன்றியும் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 2005ம் ஆண்டு ஏப்ரல் 19ம் தேதிக்கு பின்னர், இந்த எட்டு ஆண்டுகளில் நம் ஆண்டவர் என்னை உண்மையிலேயே வழிநடத்தினார். அவர் எனக்கு மிக நெருக்கமாக இருந்தார். தினமும் அவரது பிரசன்னத்தை என்னால் உணர முடிந்தது என்று என்னால் சொல்ல முடியும். இந்த ஆண்டுகள், திருச்சபையின் திருப்பயணத்தில் மகிழ்ச்சியும் ஒளியும் நிறைந்த நேரங்களாகவும், அதேசமயம் கடினமான தருணங்களாகவும் இருந்தன. இப்போது நான் சிலுவையைக் கைவிடேன், ஆயினும், புதிய வழியில் சிலுவையில் அறையுண்ட ஆண்டவருக்கு நெருக்கமாக இருப்பேன். செபம் மற்றும் தியானம் மூலம் திருஅவையின் பயணத்தில் தொடர்ந்து செல்வேன்.
   புனித பவுல், கொலேசேயருக்கு எழுதிய திருமுகத்தில், "உங்களுக்காகத் தவறாமல் இறைவனிடம் வேண்டி இவ்வாறு அவரிடம் கேட்டுக்கொள்கிறோம்: நீங்கள் முழு ஞானத்தையும் ஆவிக்குரிய அறிவுத்திறனையும் பெற்றுக் கடவுளின் திருவுளத்தைப் பற்றிய அறிவை நிறைவாக அடையவேண்டும். நீங்கள் அனைத்திலும் ஆண்டவருக்கு உகந்தவற்றைச் செய்து அவருக்கு ஏற்புடையவர்களாய் நடந்து கொள்ள வேண்டும். நீங்கள் பயன்தரும் நற்செயல்கள் அனைத்தும் செய்து கடவுளைப்பற்றிய அறிவில் வளரவேண்டும்" (1:9-10) எனக் கூறுகிறார். எனது இதயமும் இறைவனுக்கான நன்றியால் நிறைந்துள்ளது. அவரே திருச்சபையையும், விசுவாசத்திலும் அன்பிலுமான அதன் வளர்ச்சியையும் கண்காணிக்கிறார். நன்றியிலும் மகிழ்விலும் உங்களனைவரையும் நான் அணைத்துக்கொள்கிறேன்.
   திருச்சபையின் வாழ்விலும் நம் வாழ்விலும் இறை உடனிருப்பின் மீதான நம் மகிழ்ச்சி நிறை நம்பிக்கையை புதுப்பிக்க நாம் இந்த நம்பிக்கை ஆண்டில் அழைப்பு பெறுகிறோம். தூய பேதுருவின் வழித்தோன்றலாக நான் இந்தப் பணியை ஏற்றுக்கொண்டதிலிருந்து கடந்த எட்டு ஆண்டுகளில் இறைவன் காட்டிய தொடர்ந்த அன்பிற்கும் வழிகாட்டுதலுக்கும் நான் தனிப்பட்டமுறையில் நன்றியுள்ளவனாக உள்ளேன். என்னைப் புரிந்து கொண்டதற்கும், ஆதரவு வழங்கியதற்கும், செபங்களுக்கும் இங்கு ரோம் நகரில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு என் ஆழ்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன். நீண்ட செபத்திற்குப்பின் நான் எடுத்த இந்தப் பணிஓய்வு குறித்த முடிவு, இறைவிருப்பத்தில் கொண்டுள்ள முழு நம்பிக்கை மற்றும் அவரின் திருச்சபை மீது கொண்டுள்ள ஆழமான அன்பின் கனியாகும்.
   என் செபங்கள் மூலம் நான் திருச்சபையுடன் தொடர்ந்து இணைந்து நடப்பேன். எனக்காகவும் வரவிருக்கும் புதிய திருத்தந்தைக்காகவும் செபிக்குமாறு உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். அன்னைமரியோடும் அனைத்துப் புனிதர்களோடும் இணைந்து விசுவாசத்திலும் நம்பிக்கையிலும் நம்மை இறைவனிடம் ஒப்படைப்போம். அவரே நம் வாழ்வின்மீது அக்கறை கொண்டு பராமரிக்கிறார். வரலாற்றின் பாதையில் இவ்வுலகையும் திருச்சபையையும் வழிநடத்துபவரும் அவரே. மிகுந்த பாசத்தோடு உங்கள் அனைவரையும் இறைப்பராமரிப்பில் ஒப்படைக்கிறேன். இறைவனால் மட்டுமே தர முடிந்த வாழ்வின் முழுமைக்கு உங்கள் இதயங்களைத் திறக்க உதவும் நம்பிக்கையில் உங்களைப் பலப்படுத்துமாறு இறைவனை நோக்கி வேண்டுகிறேன். நமது இதயத்தில், உங்கள் ஒவ்வொருவருடைய இதயத்திலும் ஆண்டவர் அண்மையில் இருப்பதன், அவர் நம்மை கைவிடாமல் இருப்பதன், தம் அன்பால் நம்மை சூழ்ந்திருப்பதன்  மகிழ்ச்சி எப்பொழுதும் இருப்பதாக! நன்றி!

Sunday, February 24, 2013

பிப்ரவரி 24, 2013

சரியான பாதைக்கும், செயலுக்கும் திரும்ப
செபம் நம்மை வழிநடத்துகிறது - திருத்தந்தை

   வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த ஏராளமான மேற்பட்ட மக்களுக்கு இஞ்ஞாயிறு நண்பகலில் இறுதி மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இயேசுவின் உருமாற்றம் பற்றி எடுத்துரைத்தார்.
அன்பு சகோதர சகோதரிகளே,
   தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு வழிபாடு நமக்கு எப்பொழுதுமே ஆண்டவரின் உருமாற்ற நற்செய்தியை வழங்குகிறது. நற்செய்தியாளர் லூக்கா, 'இயேசு வேண்டிக் கொண்டிருந்தபோது அவரது முகத்தோற்றம் மாறியது' என்று அழுத்தமாக கூறுகிறார். பேதுரு, யாக்கோபு மற்றும் யோவான் ஆகியோருடன் உயர்ந்த மலைமீது இயேசு ஆன்மீக பயிற்சியில் இருந்தபோது, தந்தையுடனான உறவில் அவர் பெற்ற ஆழ்ந்த அனுபவம் இது; இந்த மூன்று சீடர்களும் தங்கள் குருவின் இறைத்தன்மை வெளிப்பட்ட தருணங்களில் எப்பொழுதும் உடனிருந்தவர்கள்.
   சற்று முன் தனது இறப்பையும், உயிர்ப்பையும் (9:22) முன்னுரைத்த ஆண்டவர் தன் மாட்சியின் முன்சுவையை சீடர்களுக்கு அளிக்கிறார். திருமுழுக்கைப் போலவே, உருமாற்றத்தின் போதும், நாம் விண்ணக தந்தையின் குரலை கேட்கிறோம்: "இவரே என் மைந்தர்; நான் தேர்ந்து கொண்டவர் இவரே. இவருக்குச் செவி சாயுங்கள்" (9:35). மோசே மற்றும் எலியாவின் உடனிருப்பு, பழைய உடன்படிக்கையின் சட்டத்தையும் இறைவாக்கினரையும் குறித்து நிற்கிறது; இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது: உடன்படிக்கையின் முழு வரலாறும் அவரையே சுட்டிக்காட்டுகின்றன, மோசேயின் காலத்தைப் போன்ற வாக்களிக்கப்பட்ட நாட்டுக்கு அல்லாமல், கிறிஸ்து விண்ணகத்துக்கு ஒரு புதிய விடுதலைப் பயணத்தை நிறைவு செய்கிறார் (9:31). "ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது" (9:33) என்ற பேதுருவின் வார்த்தைகள், இந்த மறைபொருள் அனுபவத்தை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியாக காணப்படுகின்றன. புனித அகுஸ்தீன் கோருகிறார்: "[பேதுரு] ... மலை மீது ... கிறிஸ்துவை ஆன்ம உணவாக கொண்டார். அவர் ஏன் வேலைகளுக்கும் துன்பங்களுக்கும் திரும்பி வர வேண்டும், மேலே இருக்கும்போது அவர் கடவுளுக்குரிய தூய அன்பை முழுமையாக உணர்ந்தது அவரை புனித நடத்தையில் வாழ தூண்டியது?"
   நற்செய்தியின் இந்த பகுதியை தியானிப்பதன் வழியாக நாம் மிக முக்கிய பாடத்தை கற்றுக்கொள்ள முடியும். முதலாவது, செபத்தின் முதன்மை, அது இல்லாமல் திருத்தூது மற்றும் பிறரன்பு பணிகள் அனைத்தும் நடவடிக்கையாக சுருங்கிவிடும். தவக்காலத்தில் நாம் செபத்திற்கு போதிய நேரம் ஒதுக்க கற்றுக்கொள்கிறோம், தனிப்பட்ட விதத்திலும் சமூகத்திலும் அது நமது ஆன்மீக வாழ்வுக்கு உயிர்மூச்சு அளிக்கிறது. மேலும், செபிப்பது என்பது உலகம் மற்றும் அதன் முரண்பாடுகளில் இருந்து ஒருவரை தனிமைப்படுத்துவது இல்லை, மாறாக தாபோரில் பேதுரு விரும்பியது போன்று, செபம் சரியான பாதைக்கும், செயலுக்கும் திரும்ப நம்மை வழிநடத்துகிறது. நான் தவக்காலத்துக்கான எனது செய்தியில் எழுதியிருப்பது: "கிறிஸ்தவ வாழ்வு, கடவுளை சந்திப்பதற்காக தொடர்ந்து மலை ஏறுவதையும், பின்னர் அவரிடம் இருந்து பெற்ற அன்பையும் பலத்தையும் தாங்கி கீழே இறங்கி வருவதையும் உள்ளடக்கியது, அதன் மூலம் கடவுளின் சொந்த அன்பைக் கொண்டு நமது சகோதர சகோதரிகளுக்கு சேவை செய்ய முடியும்.
   அன்பு சகோதர சகோதரிகளே, எனது வாழ்வின் இத்தருணத்தில், இந்த கடவுளின் வார்த்தை தனிப்பட்ட விதத்தில் எனக்கு வழங்கப்பட்டதாக உணர்கிறேன். செபத்திலும் தியானத்திலும் மேலும் அதிகமாக என்னை அர்ப்பணிக்குமாறு, "மலை மீது ஏற" ஆண்டவர் என்னை அழைக்கிறார். ஆனால் இது திருச்சபையை கைவிடுவதாக பொருளாகாது, உண்மையில், இதை செய்ய கடவுள் என்னை கேட்டாரென்றால், அதன் மூலம், இதுவரை நான் செய்தது போன்று, அதே அர்ப்பணத்தோடும் அதே அன்போடும், எனது வயதிற்கும் பலத்திற்கும் பொருந்தும் வகையில் திருச்சபைக்கு எனது சேவையைத் தொடர முடியும். நாம் கன்னி மரியாவின் பரிந்துரையை வேண்டுவோம்: செபத்திலும் பிறரன்பு செயல்களிலும் ஆண்டவர் இயேசுவை நாம் அனைவரும் பின்பற்ற அவர் எப்பொழுதும் நமக்கு உதவி செய்வாராக!
   இந்த நாட்களில் நான் பெற்று வரும் நன்றிக்கும், பாசத்துக்கும், செப நெருக்கத்துக்கும் ஒவ்வொருவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ஈஸ்டரை நோக்கிய தவக்கால பயணத்தை நாம் தொடரும் வேளையில், உருமாற்றத்தின் வழியாக மலை மீது மாட்சியை வெளிப்படுத்திய மீட்பராம் இயேசு மீது நமது கண்களை தொடர்ந்து பதிப்போம். உங்கள் அனைவர் மீதும் கடவுளின் ஆசிகள் அதிக அளவில் பொழியப்பட வேண்டுகிறேன்.

Sunday, February 17, 2013

பிப்ரவரி 17, 2013

கடவுள் மீதான விசுவாசத்தை மீண்டும் கண்டறிய
தகுந்த காலம் தவக்காலம் - திருத்தந்தை

   வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்களுக்கு இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, சோதனையை எதிர்கொள்வது பற்றி எடுத்துரைத்தார்.
அன்பு சகோதர சகோதரிகளே,
   கடந்த புதன்கிழமை, பாரம்பரிய சாம்பல் பூசும் சடங்குடன், ஈஸ்டர் தயாரிப்புக்கான மனமாற்றம் மற்றும் தவத்தை மேற்கொள்ளும் காலமாகிய தவக்காலத்துக்குள் நாம் நுழைந்திருக்கிறோம். தாயும் ஆசிரியருமான திருச்சபை, தனது உறுப்பினர்கள் அனைவரும் ஆவியில் புதுப்பிக்கப்படவும், கடவுளை நோக்கி மீண்டும் நெருங்கி வரவும், அன்பில் வாழும் பொருட்டு தற்பெருமையையும், தன்னலத்தையும் மறுக்கவும் அழைக்கிறது. இந்த விசுவாச ஆண்டின் தவக்காலம், நமது வாழ்வுக்கும், திருச்சபையின் வாழ்வுக்கும் அடிப்படையாக விளங்கும் கடவுள் மீதான விசுவாசத்தை மீண்டும் கண்டறிய தகுந்த காலம் ஆகும். இது எப்பொழுதுமே போராட்டத்தை உள்ளடக்கியது, ஓர் ஆன்மீக போராட்டம், ஏனெனில் இயல்பாகவே தீய ஆவி நமது புனிதத்தன்மையை எதிர்ப்பதுடன், கடவுளின் வழியில் இருந்து நம்மை விலக்கவும் முயல்கிறது, இதற்காகவே தவக்காலத்தின் முதல் ஞாயிறு நற்செய்தி ஒவ்வொரு ஆண்டும் இயேசுவின் பாலைநில சோதனையை எடுத்துரைக்கிறது.
   இயேசு, உண்மையில், திருமுழுக்கு மூலம் யோர்தானில் மெசியாவாக தூய ஆவியால் அருட்பொழிவு பெற்ற பிறகு, அதே ஆவியால் பாலைநிலத்துக்கு அலகையால் சோதிக்கப்படுமாறு அழைத்துச் செல்லப்படுகிறார். தனது பொது பணியைத் தொடங்கும்போது, சோதனையாளன் பரிந்துரைத்த மெசியா பற்றிய தவறான உருவங்களைப் புறக்கணித்து, இயேசு தன்னை வெளிப்படுத்த வேண்டும். ஆனால் இந்த சோதனைகள் மனிதனின் தவறான உருவங்கள், ஒவ்வொரு நேரமும் மனசாட்சியை வேரறுத்து, பொருத்தமானவையாகவும், சரியானவையாகவும், நல்லவையாகவும் கூட வேடமிடுகின்றன. நற்செய்தியாளர்களான மத்தேயுவும், லூக்காவும் வரிசையில் மட்டுமே மாறுபட்ட இயேசுவின் மூன்று சோதனைகளை தருகிறார்கள். அவற்றின் மையம் எப்பொழுதும் சொந்த விருப்பங்களுக்காக கடவுளை பயன்படுத்துவதிலும், வெற்றி மற்றும் உலகப் பொருட்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதிலும் இருக்கிறது. சோதனையாளன் நழுவக்கூடியவனாக இருக்கிறான்; இது நேரடியாக தீமைக்கு செல்கிறது, போலியான நலத்துக்கு, அடிப்படை தேவைகளை சந்திக்கும் வலிமையே உண்மையில் அவசியம் என்று நம்பச் செய்கிறது. இவ்வாறாக, கடவுள் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டு, பாதியாக குறைக்கப்பட்டு, இறுதியில் பொய்யானவராக மாறி, இல்லாதவராக, மறைந்து விடுகிறார். இறுதியாக, விசுவாச சோதனையில் என்ன இடர்படுகிறது என்றால் கடவுள் இடர்படுகிறார். வாழ்வின் முக்கியமான தருணங்களில், நாம் குறுக்கு வழிகளில் இருக்கும் எந்த நேரத்திலும்: நாம் கடவுளைப் பின்பற்ற விரும்புகிறோமா அல்லது நம்மையா? சொந்த விருப்பமா அல்லது உண்மையான நலமா, எது உண்மையில் நன்மை?
   திருச்சபை தந்தையர்கள் நமக்கு எப்படி கற்பிக்கிறார்கள், இயேசு நமது மனித நிலைக்கு, பாவத்தின் படுகுழிக்கும் அதன் விளைவுகளுக்கும் இறங்கியதன் பகுதியாக சோதனைகள் இருக்கின்றன. கீழிறங்குதலின் இறுதி நிலைக்கு, சிலுவை மரணம் வரையிலும், கடவுளிடம் இருந்து பெரிதும் பிரிந்திருக்கும் கீழுலகிற்கு இயேசு வந்தார். காணாமற்போன ஆடுகளாகிய மனிதரை பத்திரமாக கடவுளிடம் திரும்ப கொண்டு சேர்க்கும் கையாக அவர் இருக்கிறார். புனித அகுஸ்தீன் கற்பிப்பது போல, இயேசு தனது வெற்றியை நமக்கு தருவதற்காக, நம்மிடம் இருந்து சோதனையை எடுத்துக்கொண்டார். எனவே, நாம் நம்மை எதிர்கொள்ளவும், தீய ஆவிக்கு எதிராக போராடவும் பயப்படக்கூடாது, முக்கியமானது என்னவென்றால் நாம் வெற்றியாளரான அவரோடு இருக்கிறோம். அவரோடு இருக்க, அன்னை மரியாவை நோக்கி திரும்புவோம்: சோதனை நேரங்களில் பிள்ளைக்குரிய நம்பிக்கையோடு நாம் வேண்டுவோம், அவரது தெய்வீக மகனின் வலிமையான உடனிருப்பை உணரவும், கிறிஸ்துவின் வார்த்தைக்கு எதிரான சோதனைகளை நிராகரிக்கவும் உதவுவார், அதன் மூலம் கடவுளை நமது வாழ்வின் மையாமாக்குவோம்.

Thursday, February 14, 2013

பிப்ரவரி 13, 2013

ஆண்டவரிடம் திரும்புவது அவர் இரக்கத்தில் நம்பிக்கை கொள்ளும் விசுவாசத்தின் விளைவு - திருத்தந்தை

  திருத்தந்தை 16ம் பெனடிக்ட், தனது பதவி விலகல் அறிவிப்பை வெளியிட்டதை தொடர்ந்து, இந்த ஆண்டு சாம்பல் புதன் திருவழிபாடு புனித சபினா பேராலயத்துக்கு பதிலாக, புனித பேதுரு பேராலயத்தில் நடைபெற்றது. தனது பதவி காலத்தில் திருத்தந்தை நிகழ்த்திய கடைசி பொது திருப்பலியான இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அவர்களுக்கு மறையுரை வழங்கிய திருத்தந்தை, தவக்காலத்தின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்தார்.
அன்பு சகோதர சகோதரிகளே,
   சாம்பல் புதனான இன்று, நாம் ஒரு புதிய தவக்கால பயணத்தை தொடங்குகிறோம்; இது மரணத்தின் மீதான வாழ்வின் வெற்றியைக் கொண்டாடும் உயிர்ப்பின் மகிழ்ச்சியை நோக்கிய நாற்பது நாட்களுக்கும் மேலான நீண்ட பயணம். சூழ்நிலைகளின் காரணமாக, புனித சபினா பேராலயத்துக்கு பதிலாக, நாம் இன்று புனித பேதுரு பேராலயத்தில் நற்கருணை கொண்டாட்டத்துக்காக கூடியிருக்கிறோம். திருத்தூதர் பேதுருவின் கல்லறையை சூழ்ந்துள்ள நாம், இத்தருணத்தில் திருச்சபையின் முன்னோக்கிய பாதைக்காகவும், தலைமை மேய்ப்பரும் ஆண்டவருமாகிய கிறிஸ்துவில் நம் விசுவாசம் புதுப்பிக்கப்படவும் அவரது செபத்தை வேண்டுவோம். ஒவ்வொருவருக்கும், குறிப்பாக ரோம் மறைமாவட்டத்தின் விசுவாசிகளுக்கும் நன்றி சொல்ல எனக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு; பேதுருவின் பணியை நிறைவு செய்ய தயாரித்து கொண்டிருக்கும் என்னை உங்கள் செபத்தில் சிறப்பாக நினைவுகூர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
   தவக்காலத்தில் திடமான மனநிலைக்கும் செயல்களுக்கும் மாற, நாம் கடவுளின் அருளால் அழைக்கப்பட்டிருப்பது குறித்த சிந்தனைகளை நமக்கு அறிவிக்கப்பட்ட வாசகங்கள் வழங்குகின்றன. அனைத்துக்கும் முதலாவதாக இறைவாக்கினர் யோவேல் இஸ்ரயேல் மக்களுக்கு விடுத்த ஆற்றல்மிகு அழைப்பை திருச்சபை பரிந்துரைக்கிறது: "ஆண்டவர் கூறுகிறார்: இப்பொழுதாவது உண்ணா நோன்பிருந்து, அழுது புலம்பிக்கொண்டு, உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள்" (2:12). 'முழு இதயத்தோடு' என்ற சொற்றொடரை கவனியுங்கள், நமது சிந்தனைகள், உணர்வுகள், முடிவுகள், செயல்கள் ஆகியவற்றின் ஆழத்தில் இருந்து என்பது அதன் பொருள். கடவுளிடம் திரும்புவது சாத்தியமா? ஆம், ஏனெனில் இதற்கான உந்துதல் கடவுளின் இதயத்திலும், அவரது இரக்கத்தின் ஆற்றலிலும் இருந்து உருவாகிறது. இறைவாக்கினர் கூறுகிறார்: "கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள்; அவர் அருள் நிறைந்தவர், இரக்கம் மிக்கவர்; நீடிய பொறுமையுள்ளவர், பேரன்பு மிக்கவர்; செய்யக் கருதிய தீங்கைக் குறித்து மனம் மாறுகின்றவர்" (2:13). ஆண்டவரிடம் திரும்புவது சாத்தியமே, ஏனெனில் இது கடவுளின் அருட்செயல், அவரது இரக்கத்தில் நம்பிக்கை கொள்ளும் விசுவாசத்தின் விளைவு. கடவுளின் வார்த்தைகளை இறைவாக்கினர் மீண்டும் ஒருமுறை உரைக்கிறார்: "நீங்கள் உடைகளைக் கிழித்துக்கொள்ள வேண்டாம், உங்கள் இதயத்தைக் கிழித்துக்கொள்ளுங்கள்" (2:13).
   "முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள்" என்ற அழைப்பு தனி மனிதருக்குரிய அழைப்பு அல்ல, முழு சமூகத்திற்கும் உரியது. மேலும் நாம் முதல் வாசகத்தில் கேட்கிறோம்: "சீயோனில் எக்காளம் ஊதி எச்சரியுங்கள்; புனிதமான உண்ணா நோன்புக்கென நாள் குறியுங்கள்; வழிபாட்டுப் பேரணியைத் திரட்டுங்கள். மக்களைத் திரண்டு வரச்செய்யுங்கள்; புனித கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள்; முதியோரைக் கூடிவரச் செய்யுங்கள், பிள்ளைகளையும் பால் குடிக்கும் குழந்தைகளையும் ஒருசேரக் கூட்டுங்கள்; மணமகன் தன் அறையை விட்டு வெளியேறட்டும்; மணமகள் தன் மஞ்சத்தை விட்டுப் புறப்படட்டும்" (2:15-16). விசுவாசத்திலும் கிறிஸ்தவ வாழ்விலும் சமூக பரிமாணம் என்பது இன்றியமையாதது. "சிதறி வாழ்ந்த கடவுளின் பிள்ளைகளை ஒன்றாய்ச் சேர்க்கவே" (யோவான் 11:52) கிறிஸ்து வந்தார். ஒவ்வொரு நபரும், பாவங்களுக்காக மனம் வருந்தும் தவப் பயணத்தை தனியாக மேற்கொள்ள முடியாது என்ற விழிப்புணர்வை பெற்று, திருச்சபையின் சகோதர, சகோதரிகளோடு ஒன்றிணைந்து செல்ல வேண்டும்.
   இறுதியாக, குருக்களின் செபங்களைப் பற்றி இறைவாக்கினர் எடுத்துரைக்கிறார்: "ஆண்டவரின் ஊழியர்களாகிய குருக்கள் கோவில் மண்டபத்திற்கும் பலிபீடத்திற்கும் இடையே நின்று அழுதவண்ணம், 'ஆண்டவரே, உம் மக்கள்மீது இரக்கம் கொள்ளும்; உமது உரிமைச் சொத்தை வேற்றினத்தார் நடுவில் நிந்தைக்கும் பழிச்சொல்லுக்கும் ஆளாக்காதீர். அவர்களுடைய கடவுள் எங்கே?' என வேற்றினத்தார் கூறவும் வேண்டுமோ?' எனச் சொல்வார்களாக!" (2:17). இந்த செபம் நம் ஒவ்வொருவருக்கும், நமது சமூகத்துக்கும் கிறிஸ்தவ வாழ்வு மற்றும் விசுவாசத்துக்கு சான்று பகர்வதன் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைக்கிறது. அதன் மூலம் நாம் திருச்சபையின் முகத்தை, அந்த முகம் தற்போது உருகுலைந்திருப்பதை வெளிப்படுத்த முடியும். திருச்சபையின் ஒற்றுமைக்கு எதிராக திருச்சபைன் உடலில் ஏற்படும் பிரிவினைகளை முக்கியமான பாவங்களாக நான் கருதுகிறேன். இந்த தவக்காலத்தில் தன்னலம், போட்டி மனப்பான்மை ஆகியவற்றை வென்று, திருஆட்சி அமைப்பில் ஆழ்ந்த, தெளிவான ஒன்றிப்பை ஏற்படுத்துவது விசுவாசத்துக்கு புறம்பே, அக்கறையின்றி வாழ்வோருக்கு விலைமதிப்பற்ற, எளிய அடையாளமாக விளங்கும்.
   "இதுவே தகுந்த காலம்! இன்றே மீட்பு நாள்!" (2 கொரிந்தியர் 6:2) என்ற திருத்தூதர் பவுலின் வார்த்தைகள் நம்மை விரைந்து செயல்பட அழைக்கின்றன. இப்பொழுது என்பதை நாம் இழந்துவிடக் கூடாது, அது நமக்கு வழங்கப்பட்டுள்ள தனிப்பட்ட வாய்ப்பு. மனிதரின் பாவங்களுக்காக கிறிஸ்து தனது வாழ்வை அர்ப்பணித்ததைப்  பற்றி திருத்தூதர் எடுத்துரைக்கிறார். புனித பவுலின் வார்த்தைகள் மிகவும் வலிமையானவை: "நாம் கிறிஸ்து வழியாகத் தமக்கு ஏற்புடையவராகுமாறு கடவுள் பாவம் அறியாத அவரைப் பாவநிலை ஏற்கச் செய்தார்" (5:21). மாசற்றவரும், தூயவருமான இயேசு மரணத்தைக் கொணரும் பாவச்சுமையை தாங்கி, மனிதகுலத்தோடு சிலுவை சாவை ஏற்றார். மனிதரான இறைமகன், கொல்கதாவில் உயர்த்தப்பட்ட சிலுவையில் தொங்கி செலுத்திய மிக அதிக விலையால் நாம் கடவுளோடு மீண்டும் ஒப்புரவாகியுள்ளோம். இதில் தீமையின் படுகுழியிலான மனித துன்பங்களில் கடவுளின் பங்கேற்பு நமது நீதிக்கு அடிப்படை ஆகிறது. கடவுளிடம் முழு இதயத்தோடு திரும்புவதற்கான தவக்கால பயணம், சிலுவை வழியாக கிறிஸ்துவைப் பின்பற்றி கல்வாரி பாதைக்கு செல்வதில் இருக்கிறது. இந்த பயணத்தில் நமது தன்னலத்தை கைவிட்டு, நமக்குரியவற்றை மூடி வைத்துவிட்டு, நமது இதயங்களைத் திறந்து உருமாற்றும் கடவுளுக்காக அறையைத் தயார் செய்வோம். புனித பவுல் நமக்கு நினைவூட்டுவது போன்று, சிலுவை பற்றிய செய்தி நமக்குள் எதிரொலிக்க வேண்டும். நமது பாதையை ஒளிர்விக்கும் ஒளியாம் இறைவார்த்தையை கவனமாக கேட்க, தவக்கால பயணத்தில் இது நமக்கு ஒரு அழைப்பாக அமைகிறது.
   மலைப்பொழிவோடு இணைந்ததாக அழைக்கப்படும் மத்தேயு நற்செய்தி பகுதியில், மோசேயின் சட்டத்தின் அடிப்படையிலான மூன்று வழக்கங்களைப் பற்றி இயேசு குறிப்பிடுகிறார்: தர்மம், இறைவேண்டல் மற்றும் நோன்பு. தவக்கால பயணத்தில் முழு இதயத்தோடு கடவுளிடம் திரும்புவதற்கான அழைப்புக்கு பதிலளிக்க பாரம்பரியமாக வழங்கப்படும் அறிவுறுத்தல்கள் இவை. சமயம் சார்ந்த ஒவ்வொரு செயலுக்கும் தரமும், அதை உறுதி செய்யும் கடவுளுடனான நமது உண்மை உறவும் தேவைப்படுவதை இயேசு சுட்டிக் காட்டுகிறார். இந்த காரணத்திற்காக பிறருடைய பாராட்டையும், அங்கீகாரத்தையும் தேடும் வெளிவேடத்தை அவர் எதிர்க்கிறார். உண்மையான சீடர் தனக்காகவோ, மக்களுக்காகவோ அன்றி, எளிமையாகவும் தாராளத்தோடும் ஆண்டவருக்கு சேவை செய்வார்: "மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்" (மத்தேயு 6:4,18). நமது சொந்த மகிமையை குறைவாக தேடி, நேர்மையாளர்களின் பரிசு கடவுளே, அவரில் இணைவதே,  இங்கே விசுவாச பயணத்திலும், வாழ்வின் முடிவில், அமைதி ஒளியில் நேருக்கு நேராகவும் எப்பொழுதும் அவரோடு இருப்பதே என்பதை அதிகம் உணர்ந்து செயல்பட்டால் நமது பயிற்சி அதிக பயனுள்ளதாக இருக்கும்.
   அன்பு சகோதர சகோதரிகளே, நாம் நம்பிக்கையோடும் மகிழ்ச்சியோடும் நமது தவக்கால பயணத்தை தொடங்குகிறோம். "முழு இதயத்தோடு கடவுளிடம் திரும்பி வாருங்கள்" என்ற மனமாற்றத்திற்கான அழைப்பு நம்மில் வலிமையாக எதிரொலிக்கட்டும், நம்மை புதியவர்களாக மாற்றும் அவரது அருளை ஏற்பதன் மூலம் இயேசுவின் வாழ்வில் பங்கேற்போம். சாம்பல் பூசும் சடங்கிலும் விடுக்கப்படும் இந்த எளிய, அழகிய அழைப்புக்கு நம்மில் யாரும் செவிகொடுக்காதவர்களாய் இருக்கக்கூடாது. திருச்சபையின் தாயும், ஆண்டவரின் ஒவ்வொரு சீடருக்கும் முன்மாதிரியுமான கன்னி மரியா இவ்வேளையில் நமக்கு துணைநிற்பாராக! ஆமென்.

Sunday, February 10, 2013

பிப்ரவரி 10, 2013

கிறிஸ்துவை அனைத்து மனிதருக்கும் அறிவிப்பதில்
ஒருபோதும் சோர்வுறக்கூடாது - திருத்தந்தை

   வத்திக்கான் தூய பேதுரு சதுக்கத்தில் கூடி யிருந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், சீமோன் பேதுருவின் அழைப்பை பற்றி எடுத்துரைத்தார்.
அன்பு சகோதர சகோதரிகளே,
   இன்றைய திருவழிபாட்டில், முதல் சீடர்கள் அழைக்கப்பட்ட நிகழ்வை லூக்கா நற்செய்தி வழங்குகிறது. இயேசு மக்கள் கூட்டத்துக்கு கற்பித்து, பெருந்திரளான மீன்களைப் பிடிக்கச் செய்த பிறகு, ஆண்டவரின் திருவுளத்துக்கு ஏற்ப இந்த அழைப்பு நிகழ்கிறது. உண்மையில், இயேசுவின் வார்த்தையைக் கேட்பதற்காக கெனசரேத்து ஏரிக்கரையில் இந்த மக்கள் கூட்டம் நெருக்கிக் கொண்டிருந்தபோது, இரவு முழுவதும் எதுவும் கிடைக்காமல் சோர்வுற்றிருந்த சீமோனை அவர் காண்கிறார். கரையில் இருந்து சற்று தொலைவில் நின்றுகொண்டிருந்த மக்களுக்கு போதிப்பதற்காக இயேசு முதலில் அவரது படகை கேட்கிறார்; பிறகு, போதனையை முடித்ததும், அவர் சீமோனிடம் அவரது நண்பர்களுடன் ஆழத்திற்கு போய், மீன் பிடிக்க வலைகளைப் போடுமாறு கட்டளையிடுகிறார். சீமான் கீழ்படிந்ததால், அவர்கள் பெருந்திரளான மீன்களைப் பிடித்தார்கள். இவ்வாறு, அற்புத அடையாளங்களின் வழியாக முதல் சீடர்கள் எப்படி இயேசுவைப் பின்தொடர்ந்தார்கள், அவரில் நம்பிக்கை வைத்தார்கள், அவரது வார்த்தையின்படி நடந்தார்கள் என்பதை நற்செய்தியாளர் காட்டுகிறார். இந்த அடையாளத்துக்கு முன் தன்னைப் பற்றி இயேசுவிடம் பேசும் சீமோன், அவரை "ஐயா" என்று அழைத்துக் கொண்டிருந்தார், பின்னரோ அவர் அவரை "ஆண்டவர்" அழைக்கிறார். இது கடவுளின் அழைப்பினை உணர்த்தும் நிலை, இதில் தேர்ந்தேடுக்கப்படுபவரின் தரமல்ல, "உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்" என்ற சீமோனைப் போன்ற விசுவாசமே கருத்தில் கொள்ளப்படுகிறது.
   மீனின் வடிவம் திருச்சபையின் பணியைக் குறிப்பதாக உள்ளது. இது பற்றி புனித அகுஸ்தீன் இவ்வாறு கூறுகிறார்: "ஆண்டவரின் கட்டளைக்கு ஏற்ப சீடர்கள் இரண்டு முறை மீன்பிடிக்கச் செல்கிறார்கள்: ஒருமுறை பாடுகளுக்கு முன்பு, அடுத்தது உயிர்ப்புக்கு பின்பு. மீன்பிடிக்கும் இந்த இரண்டு காட்சிகளில், முழு திருச்சபையும் அடையாளப்படுத்தப்படுகிறது: தற்போது உள்ளதும், இறந்து உயிர்த்தெழுதலுக்கு பிந்தியதுமான திருச்சபை. இப்போது இது பெருந்திரளானவர்களை, நல்லோரும் தீயோருமான எண்ணற்றவர்களை ஒன்றாக கொண்டுள்ளது; உயிர்த்தெழுதலுக்கு பின் நல்லோரை மட்டுமே கொண்டிருக்கும்." பேதுருவின் இந்த அனுபவம் தனித்தன்மை வாய்ந்தது, இருப்பினும் நற்செய்தியின் அனைத்து திருத்தூதர்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது, அவர் கிறிஸ்துவை உலகின் கடையெல்லை வரை உள்ள அனைத்து மனிதருக்கும் அறிவிப்பதில் ஒருபோதும் சோர்வுறக்கூடாது. அனைத்துக்கும் மேலாக, இன்றைய வாசகம் குருத்துவம் மற்றும் அர்ப்பண வாழ்வுக்கான அழைப்பை பற்றி எடுத்துரைக்கிறது. தனது வாழ்க்கை நிலையை முடிவு செய்வது மனிதருக்கு உரியதல்ல; அது கடவுளின் அழைப்புக்கான பதில்மொழி. கடவுள் அழைக்கும்போது, மனித பலவீனம் பயப்படக்கூடாது. நமது ஏழ்மையில் செயலாற்றும் அவரது நம்பிக்கையின் பலம் தேவை; உருமாற்றுவதும் புதுப்பிப்பதுமான அவரது இரக்கத்தின் வல்லமையை அதிகமதிகமாக நாம் சார்ந்திருக்க வேண்டும்.
   அன்பு சகோதர சகோதரிகளே, நற்செய்தியை அறிவிப்பதற்கும், அதற்கு சான்று பகர்வதற்கும் தேவையான தைரியம், நம்பிக்கை, உற்சாகம் ஆகியவை நம்மிலும்  நமது கிறிஸ்தவ சமூகங்களிலும் கடவுளின் இந்த வார்த்தையால் புத்துயிர் பெறட்டும். தோல்விகளும் துன்பங்களும் சோர்வுக்கு இட்டுச் செல்லக்கூடாது: நாம் விசுவாசத்தோடு வலைகளைப் போடுவது நமது பணி - மற்றவற்றை ஆண்டவர் செய்வார். திருத்தூதர்களின் அரசியான கன்னி மரியாவின் பரிந்துரையிலும் நாம் நம்பிக்கை வைக்க வேண்டும். ஆண்டவரின் அழைப்புக்கு, அவர் தனது சிறுமைநிலையை உணர்ந்தவராய், முழு நம்பிக்கையோடு பதிலளித்தார்: "இதோ நானிருக்கிறேன்." அந்த தாயின் உதவியோடு, தலைவரும் ஆண்டவருமான இயேசுவை பின்பற்றுவதற்கான நமது விருப்பத்தை புதுப்பிப்போம்.

Wednesday, February 6, 2013

பிப்ரவரி 6, 2013

அன்போடும் உரிமையோடும் தாம் படைத்தவற்றின்
மீது கடவுள் அக்கறை கொள்கிறார் - திருத்தந்தை

   வத்திகானின் பாப்பிறை ஆறாம் பவுல் மண்டபத் தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு புதன் பொது மறைபோதகம் வழங்கிய திருத்தந்தை 16ம் பென டிக்ட், கடவுளின் படைப்பை பற்றி எடுத்துரைத்தார்.
அன்பு சகோதர சகோதரிகளே,
   கடவுளை 'எல்லாம் வல்ல தந்தை'யாக விவரிக்கும் விசுவாச அறிக்கை, விவிலியத்தின் தொடக்கத்தை உறுதி செய்யும் வகையில், 'விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்தவர் அவரே' என்று தொடர்கிறது. திருமறை நூலின் முதல் வசனத்தில் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: " தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்தார்" (தொடக்கநூல் 1:1). கடவுள் அனைத்துக்கும் மூலமாக இருப்பதிலும், படைப்பின் அழகிலும், அன்பு தந்தையான அவரது எல்லையற்ற ஆற்றலை காண்கிறோம்.
   படைப்பில் தந்தையாகவும், உயிரின் தொடக்கமாகவும், படைப்பதில் அவரது எல்லையற்ற ஆற்றலை வெளிப்படுத்துபவராகவும் கடவுள் இருக்கிறார். ஒரு வலிமையுள்ள நல்ல தந்தையைப் போன்று, ஒருபோதும் குறைவுபடாத அன்போடும் உரிமையோடும் தாம் படைத்தவற்றின் மீது அக்கறை கொள்கிறார். எனவே, ஆண்டவரின் எல்லையற்ற ஆற்றலையும், அவரது நன்மைத்தனத்தையும் அறிந்து அடையாளம் காணும் இடமாக படைப்பு உள்ளது, மேலும் கடவுளை படைப்பாளராக பறைசாற்றும் நம்பிக்கையாளர்களாகிய நமக்கு விசுவாசத்தின் அழைப்பாகவும் மாறுகிறது. எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர் எழுதுவது போன்று, "உலகம் முழுமையும் கடவுளின் சொல்லால் உருவாக்கப்பட்டது என்றும் காணப்படாதவற்றினின்று காணப்படுகிறவை உண்டாயின என்றும் நம்பிக்கையாலேயே புரிந்து கொள்கிறோம்" (11:3). காணக்கூடிய உலகத்தின் கூறுகளை கண்டறிவதில் இருந்து, காணப்படாதவற்றை அடையாளம் காண முடிவதே விசுவாசம். நம்பிக்கையாளரால் இயற்கையின் மாபெரும் புத்தகத்தை படித்து, அதன் மொழியைப் புரிந்துகொள்ள முடியும். விசுவாசத்தை தூண்டியெழுப்பும் கடவுளின் வெளிப்பாட்டு வார்த்தை நமக்கு தேவை, அதன் மூலம் கடவுள் படைப்பாளராகவும், தந்தையாகவும் இருக்கும் உண்மையைப் பற்றிய முழு விழிப்புணர்வை அடைய முடியும்.
   திருமறை நூலில், உலகத்தை புரிந்துகொள்வதற்கான அம்சங்களை மனித அறிவு விசுவாசத்தின் ஒளியில் கண்டுணர முடியும். தொடக்கநூலின் முதல் அதிகாரம் கடவுளின் படைப்புச் செயலைப் பற்றி எடுத்துரைப்பதில் சிறப்பிடம் பெறுகிறது. கடவுள் ஆறு நாட்களில் படைப்புகளை நிறைவு பெறச்செய்து, ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார். கடவுளின் முதல் சிந்தனை, தமது அன்புக்கு பதிலளிக்கும் அன்பை கண்டறிவதாக இருந்தது. இரண்டாவது, பொருள் சார்ந்த உலகைப் படைத்து அவருக்கு சுதந்திரமாக பதிலளிக்கும் உயிரினங்களில் அந்த அன்பை நிறுவுவதாக இருந்தது. இதையே ஆறு முறை மீண்டும் மீண்டும் வரும் வசனம் எடுத்துரைக்கிறது: "கடவுள் அது நல்லது என்று கண்டார்." மனிதனின் படைப்பு நிறைவடைந்ததும் ஏழாவது முறையாக இவ்வாறு வருகிறது: "கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும் நோக்கினார். அவை மிகவும் நன்றாய் இருந்தன" (1:31). கடவுள் படைத்த அனைத்துமே நல்லதாகவும், அழகானதாகவும், ஞானத்தாலும் அன்பாலும் நிறைந்ததாகவும் இருக்கின்றன. கடவுளின் படைப்புச் செயல் ஒழுங்கையும், ஒருங்கிணைவையும், அழகையும் கொண்டு வருகிறது. திருப்பாடல் ஆசிரியர் பாடுவது போன்று, "ஆண்டவரது வாக்கினால் வானங்கள் உண்டாயின; அவரது சொல்லின் ஆற்றலால் வான்கோள்கள் எல்லாம் உருவாயின ... அவர் சொல்லி உலகம் உண்டானது; அவர் கட்டளையிட, அது நிலை பெற்றது" (33:6,9). அனைத்தும் கடவுளின் வாக்குக்கு கீழ்ப்படிவதாலேயே, வாழ்வு வழங்கப்படுகிறது, உலகம் நிலைத்திருக்கிறது.
   இந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்ப காலத்திலும் படைப்பை பற்றி பேசுவது அறிவுப்பூர்வமானதாக இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. தொடக்கநூலின் புனைவுகளை நாம் எவ்வாறு புரிந்துகொள்ள வேண்டும்? தொடக்கநூலில் உள்ள கதைகள், கடவுளின் முடிவற்ற காரணமாகிய வார்த்தையாலேயே இந்த பிரபஞ்சம் தோன்றி நிலைத்திருக்கிறது என்பதை வெளிப்படுத்துகின்றன. இந்த காரணத்தில் இருந்து, படைப்பாளரான ஆவியால் உலகின் வடிவமைப்பு பிறக்கிறது. உலகின் தோற்றமும், நமது தோற்றமும் பகுத்தறிவுக்கு எதிரானதாகவோ தேவையற்றதாகவோ இல்லாமல், காரணத்தோடும், அன்போடும், சுதந்திரத்தோடும் அமைந்துள்ளது என்பதை மறைநூல் நமக்கு கூறுகிறது. இந்நிலையிலேயே நாம் நம்புகிறோம். படைப்புகள் அனைத்துக்கும் உச்சமாக, "தங்களைப் படைத்தவரை அறிந்து, அன்பு செய்யும் திறன்பெற்ற" மனித ஆணும் பெண்ணும் மட்டுமே இருக்கின்றனர் என்பதை கூற விரும்புகிறேன். "உமது கைவேலைப்பாடாகிய வானத்தையும் அதில் நீர் பொருத்தியுள்ள நிலாவையும் விண்மீன்களையும் நான் நோக்கும்போது, மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு அவர்கள் யார்? மனிதப் பிறவிகளை நீர் ஒருபொருட்டாக எண்ணுவதற்கு அவர்கள் எம்மாத்திரம்?" என்று திருப்பாடல் (8:3-4) ஆசிரியர் வினவுகிறார். பிரபஞ்சத்தோடு ஒப்பிடும்போது மனிதன் சிறியவனாக இருந்தாலும், கடவுளின் நிலையான அன்பின் திருவுளம் அவனில் நிறைவேறுகிறது.
   தொடக்கநூலில் உள்ள படைப்பு பற்றிய கதைகள், மனிதருக்கான கடவுளின் திட்டத்தை நாம் அறிந்துகொள்ள உதவுகிறது. அனைத்துக்கும் மேலாக இந்த பூமியின் தூசியில் இருந்து கடவுள் மனிதரைப் படைத்தார் என்பதை அவை உறுதிபடுத்துகின்றன. நாம் கடவுள் அல்ல, நாம் நம்மை உண்டாக்கி கொள்ளவில்லை, படைப்பாளரின் வேலைப்பாட்டால் நல்ல நிலத்தில் இருந்து நாம் உரு பெற்றிருக்கிறோம் என்பதை இது உணர்த்துகிறது. மேலும், பண்பாடு, வரலாறு மற்றும் சமூக வேறுபாடுகளைத் தாண்டி மனிதர் அனைவரும் தூசியாக இருக்கின்றனர், நாம் அனைவரும் கடவுளால் உருவாக்கப்பட்ட ஒரே பூமியில் உருவாக்கப்பட்டிருக்கிறோம் என்ற அடிப்படை உண்மை தெளிவாகிறது. இரண்டாவது, நிலத்தில் இருந்து உருவாக்கப்பட்ட உடலில் கடவுள் தம் உயிர்மூச்சை அளித்ததால் மனிதகுலம் தோன்றியது. மனிதர் கடவுளின் உருவிலும் சாயலிலும் படைக்கப்பட்டிருக்கின்றனர். நாம் ஒவ்வொருவரும் கடவுளிடம் வந்த வாழ்வின் மூச்சை நம்மில் சுமக்கிறோம், ஒவ்வொரு மனித வாழ்வும் கடவுளின் சிறப்பு பாதுகாப்பைப் பெற்றிருக்கிறது. இதன் காரணாமாக, மனித மாண்பை கறைபடுத்தாமல் பாதுகாப்பது ஆழ்ந்த தேவையாக இருக்கிறது.
   தொடக்கநூலின் முதல் அதிகாரங்களில், நன்மை, தீமை அறியும் மரத்தையும், பாம்பையும் கொண்ட தோட்டம் பற்றி காண்கிறோம். கடவுள் மனிதரை பாதுகாப்பான, உணவளிக்கக்கூடிய, வாழ்வதற்கு ஏற்ற இடத்தில் வைத்தார் என்பதை இந்த தோட்டம் நமக்கு கூறுகிறது. மனிதர் உலகத்தை தமது சொத்தாக கருதி கொள்ளையிடவும் சுரண்டவும் துணியாமல், அது படைத்தவரின் கொடையாகவும், அவரது மீபளிக்கும் திருவுளத்தின் அடையாளமாகவும் இருப்பதை உணர்ந்து, கடவுளின் திட்டத்துக்கு ஏற்ப இசைந்து வாழ வேண்டும். தோட்டத்தில் காணப்படும் பாம்பு ஒரு கேள்வியின் வழியாக, கடவுளுடனான உடன்படிக்கையில் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் சந்தேகத்தை எழுப்புகிறது. இந்த சோதனையால், படைப்பு பொருளுக்குரிய எல்லைகளையும், நமை, தீமைக்குரிய எல்லைகளையும் கடந்து, கடவுளின் படைப்பு அன்பைச் சார்ந்திருப்பதை சுமையாக கருதும் சொந்த உலகத்தில் வாழ நேரிடுகிறது. அவருடைய இடத்தில் நம்மை வைப்பதால் கடவுளுடனான உறவு பாதிக்கப்பட்டு, மற்ற அனைத்து உறவுகளிலும் மாற்றம் ஏற்படுகிறது. ஆதாம் ஏவாள் மீது குற்றம் சுமத்துகிறான். இருவரும் கடவுள் முன்னிலையில் இருந்து தங்களை மறைத்துக் கொள்கிறார்கள். தன சகோதரனான ஆபேலை கொலை செய்யும் அளவுக்கு காயினுக்கு பொறாமை உருவாகிறது. தன்னை படைத்தவருக்கு எதிராக மனிதன் செல்லும்போது, தனக்கு எதிராகவும் செல்கிறான், தனது தொடக்கத்தையும் அதனால் உண்மையையும் மறுப்பதால் வலி மற்றும் மரணத்துடன் உலகில் தீமை நுழைகிறது. கடவுள் படைத்த அனைத்தும் நன்றாக, உண்மையில் மிக நன்றாக இருந்தும், மனிதனின் உண்மைக்கு எதிரான முடிவுகளால், உலகில் தீமை நுழைந்தது.
   இறுதியாக, தொடக்க [ஜென்ம] பாவத்தின் உண்மை நிலையைப் பற்றி பார்ப்போம். எந்த மனிதரும் தம்மில் தாமாகவே வாழ்ந்துவிடுவது இல்லை, பிறப்பில் மட்டுமன்றி, ஒவ்வொரு நாளும் நாம் மற்றவரிடமிருந்து வாழ்வைப் பெறுகிறோம். கடவுள் மற்றும் பிறருடனான அன்புறவிலேயே நமது தனித்தன்மை தெளிவாகிறது. கடவுளின் இடத்தில் நம்மை வைக்கும்போது, பாவத்தின் இருப்பு கடவுளுடனான நமது அடிப்படை உறவை பாதித்து அழிக்கிறது. முதல் பாவத்தைப் பற்றி கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி இவாறு கூறுகிறது: மனிதன் "கடவுளுக்கு மேலாகவும் எதிராகவும், தனது படைப்புப்பொருள் நிலைக்கும், தனது நன்மைக்கும் எதிரானதைத் தானே தேர்ந்தெடுத்தான்." ஒருமுறை அடிப்படை உறவு பாதிக்கப்பட்டதால், உறவுகளின் மற்ற தூண்களும் பாதிப்புக்கு ஆளாயின, பாவம் அனைத்தையும் அழித்துவிட்டது. தொடக்கத்தில் இருந்தே மனிதகுலத்தின் உறவு அமைப்பு பாதிக்கப்பட்டு இருப்பதால், உலகில் நடைபோடும் ஒவ்வொரு மனிதரும் இந்த உறவுநிலை பாதிப்பை சுமக்கிறார். பாவத்தால் கறைபட்ட உலகில் நுழைவதால் அவரும் தனிப்பட்ட விதத்தில், தொடக்க பாவத்தினால் காயப்பட்ட மனித இயல்பினால் அடையாளம் இடப்பட்டிருக்கிறார்.
   இந்த காயப்பட்ட நிலையில் இருந்து மீண்டுவர மனிதரின் சொந்த பலத்தால் முடியவில்லை. ஆதாமுக்கு எதிரான பாதையைத் தேர்ந்தெடுத்த இயேசு கிறிஸ்துவால் கடவுளுடனான நல்லுறவு மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்தில் புனித பவுல் கூறுவது போன்று, ஆதாம் தான் படைப்புப்பொருள் என்பதை உணராமல் கடவுளின் இடத்தில் தன்னை வைக்க விரும்பிய வேளையில், கடவுள் வடிவில் விளங்கிய இயேசு கிறிஸ்து, தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்றதுடன், அன்பின் பாதையில் பயணித்து, கடவுளுடனான உறவை ஒழுங்குபடுத்த சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்கு தம்மையே தாழ்த்தினார். எனவே, கிறிஸ்துவின் சிலுவை புதிய வாழ்வின் மரமாக மாறியுள்ளது. அன்பு சகோதர சகோதரிகளே, விசுவாசத்தில் வாழ கடவுளின் மேன்மையைக் கண்டுணர்ந்து, படைப்புப் பொருளுக்குரிய நமது சிறுமையை ஏற்றுக்கொண்டு, ஆண்டவர் தமது அன்பால் நிரப்ப நம்மை அர்ப்பணிப்போம்.