Thursday, August 4, 2011

ஆகஸ்ட் 3, 2011

புதன் மறைபோதகம்: விவிலியம் வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள திருத்தந்தை அழைப்பு

   ஒரு மாத இடைவெளிக்குப்பின் இப்புதனன்று திருத்தந்தையர்களின் கோடை விடுமுறை இல்லம் இருக்கும் காஸ்தல் கந்தோல்ஃபோவில் பொது மறைபோதகத்தையொட்டி திருப்பயணிகளைச் சந்தித்த திருத்தந்தை, விவிலியத்தை வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ளுமாறு அறிவுரை கூறி தன் போதனைகளை வழங்கினார்.
   ஐரோப்பா கோடை விடுமுறைகாலத்தை அனுபவித்து வரும் இக்காலக்கட்டத்தில், விடுமுறையைச் செலவிடுவதன் ஒரு பகுதியாக புத்தகம் வாசிக்கும் பழக்கத்தைக் கைகொள்வோம். ஒவ்வொருவருக்கும், பழையவைகளை எண்ணிப்பார்ப்பதற்கும், சிந்தனை செய்வதற்கும், அமைதியாயாய் இருப்பதற்குமான நேரம் தேவைப்படுகிறது. ஏனெனில் நாம் வேலை செய்வதற்கு என்று மட்டுமேப் படைக்கப்பட்டவர்கள் அல்ல. விடுமுறை காலத்தில் வாசிப்பதற்கென்றும் சிறிது நேரத்தை ஒதுக்கி விவிலியத்தின் சில புத்தகங்களை நாம் வாசித்தால் என்ன? விவிலியம் என்பது பல புத்தகங்களின் தொகுப்பு, அதாவது ஒரு சிறிய நூலகம். இதன் சில புத்தகங்கள் மிகவும் சிறியவை. குடும்பம் மற்றும் திருமணம் குறித்த உயர் சிந்தனைகளை வழங்கும் தோபித்து ஆகமம், தன் செபம் மற்றும் விசுவாசம் மூலம் மக்களைக் காப்பாற்றிய எபிரேய அரசி எஸ்தர் குறித்த நூல், இறைவனின் வழிகளை அறிந்த ரூத் குறித்த புத்தகம் என சிறிய புத்தகங்கள் விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் காணப்படுகின்றன. இப்புத்தகங்கள் ஒருமணி நேரத்தில் கூட வாசிக்கப்பட்டுவிடலாம். அதிக நேரமும் ஈடுபாடும் தேவைப்படும் புத்தகங்களாக யோபு ஆகமம், சபை உரையாளர் ஆகமம், இனிமைமிகு பாடல் ஆகியவைகளைக் குறிப்பிடலாம். இவையெல்லாம் பழைய ஏற்பாட்டுப் புத்தகங்கள். புதிய ஏற்பாட்டின் நான்கு நற்செய்திகளுள் ஒன்று, திருத்தூதர் பணிநூல் அல்லது திருமுகங்களுள் ஒன்று என இக்கோடைகாலத்தில் வாசிக்கலாம். இவ்வாறு உரை வழங்கிய திருத்தந்தை, விவிலியப் புத்தக வாசிப்பு ஆன்மாவிற்கானச் சிறந்த உணவாக இருக்க முடியும் என மேலும் கூறினார்.
   அங்கு குழுமியிருந்த அனைவருக்கும் தன் வாழ்த்துக்களையும் வழங்கிய திருத்தந்தை தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.