Sunday, August 21, 2011

ஆகஸ்ட் 20, 2011

 திருச்சபையின் புதிய மறைவல்லுநர்

 அவிலா புனித ஜான் (1500-1569)
   இஸ்பெயின் நாட்டின் மத்ரித் அரச மாளிகைக்கு முன்புறம் அமைந்துள்ள அல்முதேனா மரியன்னை கதீட்ரலில், குருமட மாணவர்களுக்காக திருத்தந்தை 16ம் பெனடிக்ட் திருப்பலி நிறைவேற்றினார். இவ்விளையோர் தினத்தில் கலந்து கொண்ட சுமார் ஆறாயிரம் குருத்துவ மாணவர்க்கென மறையுரை ஆற்றிய திருத்தந்தை, குருக்கள் அனைவரும் புனிதமாக வாழவேண்டும் என்று அழைப்புவிடுத்தார். இத்திருப்பலியின் இறுதியில் இஸ்பெயினின் 16ம் நூற்றாண்டு மறையுரையாளர் அவிலா நகர் புனித ஜானை அகில உலகத் திருச்சபையின் மறைவல்லுநராக திருத்தந்தை அறிவித்தார். புனித அகுஸ்தீன், புனித பிரான்சிஸ் டி சேல்ஸ், புனித அவிலா தெரேசா, புனித குழந்தை தெரேசா உட்பட ஏற்கனவே திருச்சபையில் 33 மறைவல்லுநர்கள் இருக்கின்றனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாது பேராலயத்திற்கு வெளியேயும் பல்லாயிரக்கணக்கானோர் நின்று கொண்டு இத்திருப்பலியில் பங்கு பெற்றனர்.