Saturday, August 20, 2011

ஆகஸ்ட் 19, 2011

‘இயேசுவோடு இணைந்த பணியில் சுதந்திரத்திற்கான சிறகுகளை நாம் பெறமுடியும்’ - திருத்தந்தை

    இளையோர் முன்னிலையில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வழங்கிய சிறப்புரை பின்வருமாறு: இன்றைய இச்சந்திப்பின் போது வாசிக்கப்பட்ட நற்செய்தி வாசகம், இயேசுவின் வார்த்தைகளை வரவேற்பதையும் அதை நடைமுறைப்படுத்து வதையும் குறித்து எடுத்துரைக்கிறது. இயேசுவின் வார்த்தைகள் நம் இதயத்தை சென்றடைந்து, ஆழமாக வேரூன்றப்பட்டு, நம் வாழ்வில் பூத்து குலுங்கவேண்டும். நம் ஆசிரியராம் இயேசு நமக்குக் கற்றுத்தருவது, பிறரிடமிருந்து கற்றதையல்ல, மாறாக, தானே வாழ்ந்து காட்டியதை. இயேசுவின் வார்த்தைகள் வாழ்வையும் உயிர்துடிப்பையும் வழங்கும் வண்ணம், இளையோரே, அவ்வார்த்தைகளுக்குச் செவிமடுங்கள். இளையோர் கொண்டாட்ட இந்நாட்களை உங்களின் ஆன்மீக வளர்ச்சிக்கென நன்முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இன்றைய உலகில் பலர் தங்களுக்கான கடவுள்களை தாங்களே உருவாக்கிக் கொண்டு, தங்களைத்தவிர வேறு எந்த வித அடிப்படையோ ஆதாரமோ தேவையில்லை என்பதாய் வாழ்ந்து வருகின்றனர். எது உண்மை, எது உண்மையில்லை, எது நன்மை, எது தீமை, எது நீதி, எது அநீதி, யார் வாழவேண்டும், வேறு தேவைகளுக்காக யார் தியாகம் செய்யப்படவேண்டும், என்பவைகளை அவர்களே முடிவு செய்து கொண்டு எவ்வித தெளிவான பாதையுமின்றி மனம்போன போக்கில் வாழ்ந்து வருகின்றனர். இத்தகையச் சோதனைகளுக்கு உங்களைக் கையளிக்காதீர்கள். உண்மையில், இத்தகையப் போக்குகள், நோக்கமற்ற ஒரு வாழ்வுக்கும், இறைவனற்ற ஒரு சுதந்திரத்துக்குமே இட்டுச் செல்கின்றன. ஆனால், இறைச்சாயலில் சுதந்திரமாக படைக்கப்பட்ட நாம், உண்மை மற்றும் நன்மைத்தனத்திற்கானத் தேடலில் முன்னணியில் நிற்கவும், நம் செயற்பாடுகளுக்கு நாமே பொறுப்பேற்கவும், படைப்பை ஒழுங்காய் சீரமைத்து அழகுப்படுத்தும் பணியில் இணைப் பணியாளர்களாகச் செயல்படவும் அழைப்புப் பெற்றுள்ளோம். இயேசுவோடு இணைந்து இப்பணியில் நாம் வெற்றி பெறமுடியும் என்பது மட்டுமல்ல, நம் சுதந்திரத்திற்கானச் சிறகுகளையும் பெறமுடியும். கிறிஸ்துவில் உங்கள் வாழ்வைக் கட்டியெழுப்பும்போது, நீங்கள் எதற்கும் அஞ்சத்தேவையில்லை, உங்கள் இதயங்களில் அமைதி ஆட்சி புரியும். உங்களில் உருவாகும் மகிழ்வு பிறரையும் பாதிக்கும்போது, உங்கள் வாழ்வின் இரகசியத்தை அறிய ஆவல் கொள்ளும் அவர்கள், உங்களின் வாழ்வு இயேசுவின் மேல் கட்டப்பட்டிருப்பதைக் கண்டு கொள்வர்.

இளம் பேராசிரியர்களுக்கான திருத்தந்தையின் உரை : 
   இஸ்பெயின் பல்கலைக்கழகங்களின் இளம் பேராசிரியர்களே, உண்மையைப் பரப்புவதில் நீங்கள் சிறப்புச் சேவையாற்றி வருகிறீர்கள். உங்களோடு நிற்கும் இந்த வேளையில், நான், முன்பு போன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியதை நினைவுகூர்கிறேன். 'கிறிஸ்துவில் வேரூன்றியவர்களாகவும், அவர் மீது கட்டியெழுப்பப்பட்டவர்களாகவும், விசுவாசத்தில் உறுதியுடையவர்களாகவும் நில்லுங்கள்' என்ற இந்த உலக இளையோர் தின தலைப்பு, உங்களின் தனித்தன்மையையும் அழைப்பையும் மேலும் ஆழமாகப் புரிந்து கொள்வதில் ஒளியை வழங்குகிறது. ஒருவித குழப்ப நிலையையும், நிலையற்ற தன்மையையும் கொண்டுள்ள ஒரு சமுதாயத்தில் வாழும் இன்றைய இளையோர், யாரைப் பின்பற்றுவது என எங்கே தேடுவார்கள்? சில வேளைகளில் பல்கலைகழக பேராசிரியர்களின் பணி என்பது வேலை வாய்ப்பளிக்கும் ஒரு கல்வியை மட்டுமே வழங்குவதாக அமைந்து விடுகிறது. கல்வியிலும் இத்தகைய ஒரு நுகர்வுக் கலாச்சார அணுகுமுறை பரவலாகக் காணக்கிடக்கின்றது. நேரடி பயனுடையவைகளுக்கு மட்டுமே முதன்மையிடம் என்ற பாதையில் செல்லும்போது அங்கு இழக்கப்படுவது அதிகம் என்பது மட்டுமல்ல, அதன் விளைவுகளும் துன்பம் தருவதாக இருக்கும். தன்னைத் தாண்டி எதுவுமே இல்லை என்ற உறுதிப்பாட்டுடன் செயல்படும் அறிவியல் தவறாகப் பயன்படுத்தப்படல், மற்றும், அதிகாரத்தை மட்டுமே நம்பி, அதற்கு மேல் இருக்கும் ஒரு சக்தி குறித்து கவலையின்றி செயல்படும் அரசியல் சர்வதிகாரப் போக்கு போன்றவை உருவாகவும் வாய்ப்புள்ளது. ஆனால் பல்கலைகழகங்களின் உண்மை நோக்கமோ, இத்தகைய குறுகியப் போக்குகளி லிருந்து நம்மைக் காப்பதாகும். பல்கலைக்கழகம் என்பது மனிதனுக்கேயுரிய உண்மையைத் தேடும் ஓர் இல்லமாகும். கத்தோலிக்கத் திருச்சபை பல்கலைகழகங்களை ஊக்குவித்து வருவதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.
   இளமை என்பது உண்மையைத் தேடுவதற்கும் அதனை கண்டுகொள்வதற்குமான சிறந்த காலம். 'இளமையிலேயே உண்மையைத் தேடு, இல்லையெனில் பின்னர், அது நீ கைக்கொள்வதற்கு முன் தப்பிவிடும்' என்றுரைத்தார் பிளேட்டோ. உண்மைக்கான ஏக்கத்தை ஒரு கொடையாக தனிப்பட்ட முறையிலும் எடுத்துக்காட்டுகள் மூலமும் உங்கள் மாணவர்களுக்கு வழங்குங்கள். உண்மைக்கான அக்கறையையும் ஆர்வத்தையும் எச்சூழலிலும் கைவிடாதீர்கள். கல்வி கற்பித்தல் என்பது ஒரு கருத்து பரிமாற்றம் மட்டுமல்ல, இளைய தலைமுறையை உருவாக்குவதுமாகும். முழு அர்ப்பணம், மற்றும் அன்பையும் பகுத்தறிவையும் விசுவாசத்தையும் புரிந்து கொள்ளல் போன்றவைகளின் பாதையே உண்மையின் முழுமைத்தன்மைக்கான பாதை. நாம் ஏதாவது ஒன்றைக் குறித்து அறிய வேண்டுமானால் முதலில் அன்பால் அதை நோக்கி நகர்த்தப்பட வேண்டும். புரிந்து கொள்ளுதலும் அன்பும் வெவ்வேறுத் துறைகளைச் சேர்ந்தவை அல்ல. அன்பில் 'புரிந்து கொள்ளுதல்' நிரம்பி காணப்படுகின்றது, புரிந்து கொள்ளுதலில் 'அன்பு' நிரம்பியுள்ளது. உண்மையும் நன்மைத்தனமும் ஒன்றிணைந்து செல்லுமானால் அதுபோல் அறிவும் அன்பும் இணைந்து செல்கிறது. அன்பை நாம் தேடலாம், அதன் அருகில் செல்லலாம், ஆனால் அதனை முழுமையாக கைக்கொண்டுவிட முடியாது. மாறாக அதுவே நம்மைக் கைக்கொண்டு நமக்குத் தூண்டுதலாக இருக்கும். நாமும் மாணவர்களை நம்மை நோக்கி கவராமல், உண்மையை நோக்கிய பாதையில் அவர்கள் வழி நடக்க உதவ வேண்டும். அந்த உண்மையைத்தான் நாம் அனைவரும் ஒன்றிணைந்து தேடுகிறோம். இவ்வாறு, இஸ்பெயின் பல்கலைக்கழகங்களின் இளம் பேராசிரியர்களுக்கு உரை வழங்கினார் பாப்பிறை.

இளம் அருட்சகோதரிகளுக்கான திருத்தந்தையின் உரை:
    நற்செய்தி வழி நடப்பதில் தீவிரமாய்ச் செயல்படுவது என்பது, கிறிஸ்துவில் நாம் ஆழமாக வேரூன்றி அவரில் கட்டப்படுவதையும், விசுவாசத்தில் உறுதியுடன் இருப்பதையும் குறிக்கின்றது. துறவற அர்ப்பண வாழ்வில் இது, இயேசுவின் அன்பின் மூலத்திற்கு முழு இதயத்துடன் செல்வதையும், அவ்வன்பையே முதன்மையானதாகக் கொள்வதையும் குறிக்கின்றது. உங்கள் அர்ப்பண வாழ்விற்கான ஊட்டச்சத்தாக இருக்கும் இயேசுவுடனான தனிப்பட்ட சந்திப்பின் சாட்சியாக உங்கள் வாழ்வு அமையட்டும். அர்ப்பண வாழ்வுக்கே உரிய, நற்செய்தியை தீவிரமாக கடைபிடிக்கும் போக்கு, திருச்சபையுடனான குழந்தைகளுக்குரிய ஐக்கியத்திலும், மேய்ப்பர்களுடனான ஐக்கியத்திலும், உங்களின் துறவு சபையுடனான ஐக்கியத்திலும், திருச்சபையின் ஏனைய அங்கத்தினர்களுடனான ஐக்கியத்திலும் தன்னை வெளிப்படுத்துகின்றது. இறுதியாக, நற்செய்தியை தீவிரமாக பின்பற்றும் போக்கானது, இறைவன் நம்மிடம் ஒப்படைத்துள்ள பணிகளில் தன் வெளிப்பாட்டைக் கொண்டுள்ளது. அடைபட்ட மடங்களில் தியான வாழ்வை மேற்கொள்வோர், இறைவார்த்தையை தங்கள் வாழ்வில் வரவேற்று மௌனமாக தியானிக்கின்றனர். அப்போஸ்தலிக்க வாழ்வின் பல்வேறு பாதைகளில் விதைக்கப்படுள்ள இவ்விதையானது, குழந்தைகள் மற்றும் இளையோருக்கான கல்வி, முதியோர் மற்றும் நோயாளிகள் மீதான அக்கறை, குடும்பங்களுக்கான மேய்ப்புப்பணி, வாழ்வை மதிப்பதற்கான அர்ப்பணம், உண்மைக்கான சாட்சியமும் அமைதி மற்றும் பிறரன்பு குறித்த அறிவிப்பும், மறைப்பணி மற்றும் புதிய நற்செய்தி அறிவித்தல் என திருச்சபையின் அப்போஸ்தலப் பணிகளின் மேலும் பல துறைகளிலும் முளைத்து பலன் தருகிறது, என்ற திருத்தந்தை, அன்பு சகோதரிகளே, இறைவன் அழைப்பு விடுக்கும் புனிதத்துவத்திற்கான சாட்சிகளாக விளங்குங்கள் எனக் கேட்டு தன் உரையை நிறைவு செய்தார்.