Monday, August 8, 2011

ஆகஸ்ட் 7, 2011

வாழ்க்கையின் நெருக்கடிகளின் போது இறைவனில் நம்பிக்கை வைத்து வாழத் திருத்தந்தை அழைப்பு

   இவ்வுலக வாழ்க்கையின் நெருக்கடிகளின் போது தங்களது நம்பிக்கையை இறைவனில் வைத்து வாழுமாறு இயேசு தமது சீடர்களுக்குக் கற்பிக்க விரும்புகிறார் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் கூறினார். காஸ்தல் கந்தோல்ஃபோவிலுள்ள பாப்பிறைகளின் கோடை விடுமுறை இல்ல வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக் கணக்கான விசுவாசிகளுக்கு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தை அடிப்படையாக வைத்துப் பேசினார். கடல், இன்றைய மனித வாழ்க்கையையும் இவ்வுலகின் உறுதியற்ற தன்மையையும் புயல், மனிதனை நசுக்கும் பல துன்பங்களையும் குறித்து நிற்கின்றன, அதேவேளை, படகு, கிறிஸ்துவின் மீது கட்டப்பட்டு திருத்தூதர்களால் வழிநடத்தப்பட்ட திருச்சபையையும் குறித்து நிற்கின்றது என்று கூறினார் திருத்தந்தை. இந்நற்செய்திப் பகுதிக்குப் புனித அகுஸ்தீன் அளித்த விளக்கத்தையும் எடுத்துரைத்தத் திருத்தந்தை, புனித பேதுருவை இயேசு காப்பாற்ற முனைந்த போது இயேசு தம்மைத் தாழ்த்தித் தமது கரங்களால் பேதுருவைத் தூக்கி விட்டார் என்றும், நாம் நமது சொந்த வல்லமையால் நிமிர்ந்து நிற்க முடியாது என்றும் உரைத்தார். இறைவன் நம் அருகில் எப்போதும் இருக்கிறார், நாம் அவரில் முழு நம்பிக்கை வைக்க வேண்டுமென்று நமக்காக அவர் காத்திருக்கிறார் என்றும் திருத்தந்தை எடுத்துக் கூறினார். இறைவனில் முழுநம்பிக்கை வைத்து வாழ்ந்த அன்னைமரியை நம் வாழ்க்கையின் எடுத்துக்காட்டாகக் கொள்வோம், “நான்தான், துணிவோடிருங்கள் பயப்படாதீர்கள்”, என்ற இயேசுவின் வார்த்தைகளை நம் வாழ்க்கையின் துயரங்களின் போது நினைவுகூருவோம் என்று சொல்லி தனது மூவேளை செப உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். 

ஞாயிறு நற்செய்தி: மத்தேயு 14:22-33 
   அக்காலத்தில், இயேசு கூட்டத்தினரை அவ்விடத்திலிருந்து அனுப்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது சீடரையும் உடனே படகேறித் தமக்குமுன் அக்கரைக்குச் செல்லுமாறு அவர் கட்டாயப் படுத்தினார். மக்களை அனுப்பிவிட்டு, அவர் தனியே இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலையின்மேல் ஏறினார். பொழுது சாய்ந்தபிறகும் அங்கே அவர் தனியே இருந்தார். அதற்குள் படகு கரையிலிருந்து நெடுந்தொலை சென்றுவிட்டது. மேலும் எதிர்க்காற்று அடித்துக்கொண்டிருந்ததால் அலைகளால் படகு அலைக்கழிக்கப்பட்டது. இரவின் நான்காம் காவல்வேளையில் இயேசு அவர்களை நோக்கிக் கடல்மீது நடந்து வந்தார். அவர் கடல்மீது நடப்பதைக் கண்ட சீடர் கலங்கி, 'ஐயோ, பேய்' என அச்சத்தினால் அலறினர். உடனே இயேசு அவர்களிடம் பேசினார். 'துணிவோடிருங்கள்; நான்தான், அஞ்சாதீர்கள்' என்றார். பேதுரு அவருக்கு மறுமொழியாக, 'ஆண்டவரே நீர்தாம் என்றால் நானும் கடல்மீது நடந்து உம்மிடம் வர ஆணையிடும்' என்றார். அவர், 'வா' என்றார். பேதுருவும் படகிலிருந்து இறங்கி இயேசுவை நோக்கிக் கடல்மீது நடந்து சென்றார். அப்பொழுது பெருங்காற்று வீசியதைக் கண்டு அஞ்சி அவர் மூழ்கும்போது, 'ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்' என்று கத்தினார். இயேசு உடனே தம் கையை நீட்டி அவரைப் பிடித்து, 'நம்பிக்கை குன்றியவனே, ஏன் ஐயம் கொண்டாய்?' என்றார். அவர்கள் படகில் ஏறியதும் காற்று அடங்கியது. படகில் இருந்தோர் இயேசுவைப் பணிந்து, 'உண்மையாகவே நீர் இறைமகன்' என்றனர்.