Thursday, February 28, 2013

பிப்ரவரி 28, 2013

கர்தினால்களுக்கு திருத்தந்தையின் பிரியாவிடை உரை

   எட்டு ஆண்டுகளாக கத்தோலிக்க திருச்சபையின் தலைமைப் பொறுப்பை ஏற்று பணியாற்றிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், தன் பணியின் இறுதி நாளன்று உலகெங்குமிருந்து ரோம் நகர் வந்துள்ள கர்தினால்களை குழுவாக சந்தித்து பிரியாவிடை உரை வழங்கினார்.
அன்புக்குரிய சகோதரர்களே,
   உங்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். எம்மாவு சீடர்களைப் போன்று, உயிர்த்த ஆண்டவரின் உடனிருப்பின் ஒளியில் உங்களோடு சேர்ந்து நடந்தது எனக்கு மகிழ்ச்சி அளித்தது. இந்த எட்டு ஆண்டுகளில், ஒளிமிகுந்த அழகான நாட்களும், மேகங்கள் சூழ்ந்த நாட்களும் இருந்தன. நமது பணியின் ஆன்மாவாகிய ஆழ்ந்த அன்போடு நாம் கிறிஸ்துவுக்கும், அவரது திருச்சபைக்கும் சேவையாற்ற முயற்சித்தோம். நமது ஒன்றிப்புக்கும், சேர்ந்து செபிக்கவும், கர்தினால்கள் குழாமின் தொடர்ந்த ஒற்றுமைக்கும் உதவிபுரியும் ஆண்டவருக்கு நாம் நன்றி சொல்வோம்.
   திருச்சபை மற்றும் அதன் பணியைப் பற்றி, என் இதயத்துக்கு நெருக்கமான ஓர் எளிய சிந்தனையை உங்களுக்கு தர விரும்புகிறேன். இறையியலாளர் குவார்டினி கூறுகிறார்: "திருச்சபை என்பது மேசையில் கட்டப்பட்ட ஒரு நிறுவனம் அல்ல, மாறாக, அது வாழும் உண்மை. அது ஏனைய உயிர்களைப் போன்று, காலச் சூழலில் வாழ்ந்து உருமாறுகின்றது, இருந்தாலும் அதன் இயல்பு மாறாமல் நிலைத்திருக்கிறது. கிறிஸ்துவே அதன் இதயத்தில் இருக்கிறார்." இதுவே நாம் நேற்று புனித பேதுரு சதுக்கத்தில் கண்ட அனுபவம். திருச்சபை தூய ஆவியால் இயக்கப்பெற்று, உண்மையில் கடவுளின் வல்லமையால் வாழும் உயிருள்ள உடலாக இருப்பதை காண முடிகிறது. அது இவ்வுலகில் இருந்தாலும், இவ்வுலகைச் சார்ந்தது அன்று. நேற்று நாம் பார்த்தது போன்று, அது கடவுளுடையது, கிறிஸ்துவினுடையது, ஆவிக்குரியது.
  ஆகவேதான், குவார்டினியின் இன்னொரு கூற்று உண்மையாகிறது: "திருச்சபை ஆன்மாக்களில் விழித்தெழுகிறது." இறைவார்த்தையை ஏற்று தூய ஆவியின் வல்லமையால் கருதாங்கிய கன்னி மரியாவைப் போன்ற ஆன்மாக்களில் திருச்சபை வாழ்ந்து, வளர்ந்து, விழித்தெழுகிறது. கிறிஸ்துவை இந்த உலகில் பெற்றெடுப்பதற்காக, ஏழ்மையிலும் தாழ்ச்சியிலும் அவர்கள் தங்கள் உடலை கடவுளுக்கு காணிக்கை ஆக்குகிறார்கள். திருச்சபையின் வழியாக மனித உடலேற்பு மறைபொருள் எப்பொழுதும் நிலைத்திருக்கிறது. கிறிஸ்து எல்லாக் காலங்களிலும், அனைத்து இடங்களிலும் தொடர்ந்து நடைபோடுகிறார். அன்பு சகோதரர்களே, இந்த மறைபொருளுக்காகவும், செபத்திலும், சிறப்பாக அன்றாட நற்கருணை கொண்டாட்டத்திலும் தொடர்ந்து இணைந்திருந்து திருச்சபைக்கும் மனிதகுலம் அனைத்துக்கும் நாம் பணியாற்றுவோம். இதுவே நம்மிடம் இருந்து யாராலும் பறித்துக்கொள்ள முடியாத மகிழ்ச்சி.
   உங்கள் ஒவ்வொருவரிடம் இருந்தும் தனிப்பட்ட விதத்தில் பிரியாவிடை பெறும் இவ்வேளையில், எனது செபத்தின் வழியாக நான் உங்களுக்கு நெருக்கமாக இருப்பேன் என்பதை தெரிவிக்க விரும்புகிறேன், அதன் வழியாக நீங்கள் தூய ஆவியின் செயலுக்கு முற்றிலும் பணிந்து புதிய திருத்தந்தையை தேர்வு செய்வீர்கள். ஆண்டவர் தனது திருவுளத்தை உங்களுக்கு காட்டுவாராக! உங்கள் நடுவே, கர்தினால்கள் குழாமின் மத்தியில், எதிர்காலத் திருத்தந்தைக்கு இன்று என் நிபந்தனையற்ற மரியாதையையும், கீழ்ப்படிதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவை அனைத்துக்காகவும், பாசத்தோடும் நன்றியோடும், உளமார்ந்த முறையில் எனது அப்போஸ்தலிக்க ஆசீரை உங்களுக்கு நான் வழங்குகிறேன்.