Sunday, September 25, 2011

செப்டம்பர் 25, 2011

கடவுளின் இரக்கத்திலும் மன்னிப்பிலும் நம்பிக்கை வைக்க திருத்தந்தை அழைப்பு

   திருத்தந்தையின் ஜெர்மன் நாட்டுக்கான இந்த திருப்பயணத்தின் நிறைவு நாளான இஞ்ஞாயிறு உள்ளூர் நேரம் காலை 10 மணிக்கு, அதாவது இந்திய நேரம் பிற்பகல் ஒரு மணி 30 நிமிடத்திற்கு ஃப்ரை பூர்க் விமானநிலையத்துக்கு அருகிலுள்ள பெரிய திடலில் ஜெர்மனியின் 27 மறைமாவட்டங்களின் ஆயர்களுடன் கூட்டுத் திருப்பலியைத் தொடங்கினார் திருத்தந்தை. ஜெர்மன் நாட்டுக்கான பயணத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாஇத்திருப்பலியில் சுமார் ஒரு இலட்சம் விசுவாசிகள் மிகுந்த ஆர்வமுடன் பங்கு கொண்டனர். இத்திருப்பலியில் திருத்தந்தை வழங்கிய மறையுரை பின்வருமாறு:
    இன்றைய உலகில் நடக்கும் அனைத்துப் பயங்கரமான நிகழ்வுகளைப் பார்க்கும் போது கடவுள் எல்லாம் வல்லவராக இருக்க முடியாது என்று சொல்லும் இறையியலாளர் இருக்கின்றனர். ஆனால் இன்றையத் திருவழிபாட்டில், விண்ணை யும் மண்ணையும் படைத்த கடவுள் எல்லாம் வல்லவர் என்று அறிக்கையிடுகிறோம். அதற்காக நன்றி கூருவோம். ஆனால் கடவுள் தமது வல்லமையை நாம் நினைப்பது போலன்றி வித்தியாசமான வழியில் செயல்படுத்துகிறார். அவர் தமது படைப்புக்களின் பலவீனத்தை அறிந்திருக்கிறார். அவர் தமது மக்களின் மீட்பை விரும்புகிறார். எனினும் பயங்கரமான காரியங்கள் நம்மை மிரள வைக்கின்றன. தமது வல்லமையை இரக்கத்திலும் மன்னிப்பிலும் வெளிப்படுத்தும் அந்தக் கடவுளில் நமது நம்பிக்கையை வைப்போம். அவர் எப்போதும் நம்மோடு இருக்கிறார். குறிப்பாக ஆபத்தான மற்றும் கடும் மாற்றங்கள் நிகழும் போது அவரது இதயம் நமக்காக ஏங்குகிறது. நம்மை அடைகிறது. தீமைகளைக் கைவிட்டு அவரிடம் நம்மைக் கையளிக்க வேண்டும். எனினும் கடவுள் நமது சுதந்திரத்தை மதிக்கிறார். அதேநேரம் அவர் நம்மை வற்புறுத்துவதில்லை. 
   இன்றைய நற்செய்தி வாசகத்தில் இரண்டு மகன்கள் பற்றிய உவமையைக் கேட்டோம். வார்த்தைகள் அல்ல, செயல்களே, அதாவது மனமாற்றம் மற்றும் விசுவாசத்தின் செயல்களே கணக்கில் எடுக்கப்படும் என்ற செய்தி இவ்வுவமையில் தெளிவாகிறது. இக்காலத்திய மொழியில் இதனைக் கூறவேண்டுமெனில், திருச்சபைக்குப் பிரமாணிக்கமில்லாமல் வாழ்பவர்களைவிட, தூய இதயத்துக்காக ஏங்கி, பாவத்தின் காரணமாகத் துன்புறுவோர் இறையரசுக்கு நெருக்கமாக இருக்கி றார்கள். அதேநேரம், திருச்சபையில் வாழ்ந்து அதற்காக உழைக்கும் ஒவ்வொருவரும் இறையரசுக்குத் தூரமாக இருக்கிறார்கள் என்று நோக்கப்படக் கூடாது. நிச்சயமாக இல்லை. மாறாக, திருச்சபையில் பணியாற்றும் அனைவருக்கும் நன்றி சொல்லும் நேரமாக இது இருக்கின்றது. ஜெர்மன் திருச்சபையில் பல சமூக மற்றும் பிறரன்பு நிறுவனங்கள் இருக்கின்றன. இவை உலகின் எல்லாப் பகுதிகளிலும் பிறரன்புப் பணிகளை நிறையவே செய்கின்றன. கிறிஸ்துவின் அன்பால் தொடப்படுவதற்குத் தன்னை அனுமதிக்கும் திறந்த இதயம் தேவையில் இருப்போருக்குத் தன்னையே வழங்குகின்றது. எனவே கடவுளோடு நமக்குள்ள உறவு என்ன எனச் சிந்திப்போம். ஞாயிறு திருப்பலியில், மறைக்கல்வியில், செபத்தில் விவிலியம் வாசிப்பதில் எனது பங்கு என்ன? தூய பேதுரு மற்றும் திருத்தூதர்களின் வழிவருபவர்களுடன் ஜெர்மன் திருச்சபை பிரமாணிக்கத்துடன் நிலைத்திருந்தால் இது, கத்தோலிக்க உலகம் முழுவதற்கும் தொடர்ந்து ஆசீர்வாதமாக இருந்து வரும். எனவே ஒன்றிணைந்து உழையுங்கள். அன்பு நண்பர்களே, திருச்சபையின் புதுப்பித்தல், மனமாற்றத்திற்குத் திறந்த மனம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட விசுவாசத்தின் வழியாக மட்டுமே வரும்.