Monday, September 12, 2011

செப்டம்பர் 11, 2011

நற்கருணை முன் மண்டியிடும் ஒவ்வொருவரும் பகிர்ந்து வாழத் தயாராக இருக்க வேண்டும் - திருத்தந்தை

   இத்தாலியில் அன்கொனா நகரில் கடந்த ஒரு வாரமாகக் கொண்டாடப்பட்ட 25வது திருநற்கருணை தேசிய மாநாட்டின் நிறைவுத் திருப்பலியை இந்த ஞாயிறு நிகழ்த்தி மறையுரை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், கிறிஸ்துவைத் திருவிருந்தில் ஏற்றுக் கொள்ளும் ஒவ்வொருவரும் அருகில் இருப்போரின் தேவைகளைப் புரிந்துகொண்டு, அவர்களுடன் தங்கள் உடைமைகளைப் பகிர்ந்து வாழத் தயாராக இருக்க வேண்டும் என்று  கூறினார்.
   இன்றைய உலகில் பெருமளவு வளர்ந்து வரும் சுயநலம், தற்பெருமை ஆகிய குறைகளுக்கு ஒரு மாற்று மருந்தாக நற்கருணையைச் சார்ந்துள்ள ஆன்மீகம் விளங்குகிறது என்று திருத்தந்தை சுட்டிக் காட்டினார். திரு நற்கருணை முன் தாழ்மையோடு மண்டியிடும் எவரும் அடுத்தவரின் தேவைகளைக் கவனியாது இருக்க முடியாது என்றும், அடுத்தவரின் பசி, தாகம், ஆடையின்மை, உடல்நலக் குறைவு ஆகிய பல்வேறு தேவைகளைத் தீர்க்காமல் போகமாட்டார்கள் என்றும் தன் மறையுரையில் வலியுறுத்தினார் திருத்தந்தை.
   திருச்சபை என்ற குடும்பத்தின் இதயத்துடிப்பாக விளங்கும் திருநற்கருணை ஆன்மீகம், பிளவுகளையெல்லாம் மேற்கொள்ளும் ஒரு சிறந்த வழி என்று கூறியத் திருத்தந்தை, சமுதாயத்தில் மிகவும் நலிந்தோரை மீண்டும் மனித குலத்தின் மையத்திற்குக் கொண்டுவரும் வலிமைபெற்றது இந்த ஆன்மீகம் என்றும் கூறினார்.
   அன்கொனா நகரில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமாக கூடியிருந்த மக்களுக்கு திறந்தவெளியரங்கில் திருப்பலியையும் ஞாயிறு மூவேளை செப உரையையும் வழங்கியத் திருத்தந்தை ஞாயிறு மாலை மீண்டும் வத்திக்கான் திரும்பினார்.
 

திருத்தந்தையின் மூவேளை செப உரை:
   இத்தாலியின் அன்கொனா நகரில் 25வது திருநற்கருணை தேசிய மாநாட்டின் இறுதியில் திருப்பலி நிகழ்த்தியபின், அங்கு கூடியிருந்த ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்குத் தன் ஞாயிறு மூவேளை செப உரையை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இந்த உலகில் நாம் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு வன்முறை ஒரு நாளும் தீர்வாகாது என்பதை உலகத் தலைவர்களும் நல்மனம் கொண்ட அனைவரும் உணர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
   2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி நியூயார்க் நகரிலும், வாஷிங்டனிலும் நடைபெற்ற விமானத் தாக்குதல்களின் பத்தாம் ஆண்டு நினைவு கடைபிடிக்கப் பட்டதையொட்டி, சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களும் திருத்தந்தை தன் உரையிலும் அமெரிக்க மக்களுக்கு அனுப்பியுள்ள செய்தியிலும் இதுபற்றி குறிப்பிட்டு வருகிறார்.