Friday, September 23, 2011

செப்டம்பர் 22, 2011

கிறிஸ்தவர்கள் இயேசுவில் நிலைத்திருக்க 
திருத்தந்தை அழைப்பு

   திருத்தந்தை 16ம் பெனடிக்ட், தனது ஜெர்மனி பயணத்தின் முதல் நாள் மாலையில், பெர்லின் ஒலிம்பிக் திடலில் திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கினார். இதில் சுமார் 70 ஆயிரம் கிறிஸ்தவ விசுவாசிகள் பங்கேற்றனர்.
   பெர்லின் ஒலிம்பிக் திடலில் பெருமளவில் விசுவாசிகளைப் பார்க்கும் போது இதயம் மிகுந்த மகிழ்ச்சியாலும் நம்பிக்கை யாலும் நிறைந்துள்ளது என்று மறையுரையைத் தொடங்கிய திருத்தந்தை, தங்களைக் கத்தோலிக்கர் என்று சொல்லிக் கத்தோலிக்கப் போதனைகளை மறுக்கும் ஜெர்மானியர்கள் திருச்சபையை விமர்சிப்பதற்கு மிகவும் நயமாக, அதேசமயம் உறுதியாகத் தனது கருத்துக்களை எடுத்துச் சொன்னார். “நானே திராட்சைச் செடி, நீங்கள் அதன் கொடிகள்” (யோவா.15:5) என்று இயேசு தம் திருத்தூதர்களுக்கு கூறிய நற்செய்தி திரு வசனங்களை மையமாக வைத்து மறையுரை வழங்கினார். ஒருவர் ஒருவரைச் சார்ந்து இருப்பது, கிறிஸ்துவைச் சார்ந்து இருப்பது ஏதோ உருவகமான, அடையாள மான ஒன்று அல்ல. ஆனால், இயேசு கிறிஸ்துவுக்கு உரியவராய் இருப்பது உயிரியல் ரீதியானது, இது வாழ்வை வழங்கும் நிலையாகும். கிறிஸ்துவும் திருச்சபையும் எவ்வாறு ஒன்றாக, ஒரே மாதிரியாக இருக்கின்றார்கள் என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும். இயேசு இவ்வுலகில் தனது திருச்சபையில் தொடர்ந்து வாழ்ந்து வருகிறார். கத்தோலிக்கர், திருச்சபையை மனிதக் கூறுகளால் மட்டும், அதாவது இந்நவீன காலப் போக்குக்கு ஏற்றாற்போல் மாற்றத்திற்கு அது திறந்த மனம் கொண்டிருக்க வேண்டும் அல்லது திருச்சபையை அதன் சில பாவம் புரிந்த உறுப்பினர்களின் தொகுப்பு என்று மட்டும் நோக்கத் தொடங்கும் போது திருச்சபை மகிழ்ச்சியின் ஊற்றாக இருக்காது. மக்களின் மேலோட்டமான மற்றும் தவறான எண்ணம் கொண்ட அவர்களின் கனவுத் திருச்சபை, அதிருப்தியையும் மனநிறைவின்மையையும் ஏற்படுத்தும். இக்காலத்தில் அர்ப்பணம் குறைகின்றது. எனவே எம்மாவுஸ் சீடர்கள் போன்று, ஆண்டவரே எங்களோடு தங்கும், மாலை நேரமாகிறது. எங்களைச் சுற்றி இருள் சூழ்ந்துள்ளது என்று மக்கள் குரல் எழுப்ப வேண்டும். உயிர்த்த ஆண்டவர் நமக்கு புகலிடம் தருவார். இது ஒளியின், நம்பிக்கையின், விசுவாசத்தின், பாதுகாப்பின், இளைப்பாறும் இடமாகும். இவ்வாறு பெர்லினில் நிகழ்த்திய திருப்பலியில் மறையுரையாற்றினார் திருத்தந்தை.