Wednesday, January 9, 2013

ஜனவரி 9, 2013

இயேசுவில், கடவுள் நம்மைப் போன்று
உருவெடுத்து மனிதரானார் - திருத்தந்தை

   வத்திகானின் பாப்பிறை ஆறாம் பவுல் மண்டபத் தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு புதன் பொது மறைபோதகம் வழங்கிய திருத்தந்தை 16ம் பென டிக்ட், இயேசுவில் கடவுள் மனுவுரு எடுத்த மறை யுண்மை குறித்து எடுத்துரைத்தார்.
    விண்ணகத் தந்தையின் தத்துப்பிள்ளைகளாக நாம் மாறும் வண்ணம், நம் மீட்புக்காக மனிதனாகப் பிறந்த இறைமகனின் மனுவுரு எனும் மறையுண் மையை கிறிஸ்து பிறப்பு பெருவிழாக் காலத்தில் நாம் கொண்டாடுகிறோம். இயேசுவில், கடவுள் உரு வெடுத்தார்; அவர் நம்மைப் போன்று மனிதரானார். இதன் மூலம் அவரோடு முழுமை யாக ஒன்றிக்குமாறு, விண்ணகத்தின் கதவுகளை நமக்கு திறந்துவிட்டார். பெத்லகேம் குழந்தையில் இறைவன் நமக்கு மிகப்பெரும் கொடை ஒன்றை வழங்கினார். ஆம். தன்னையே கொடையாகத் தந்தார். நமக்காக இறைவன் நம்மைப்போல் ஒருவரானார். நம் மனித வாழ்வை முழுமையாகப் பகிர்ந்துகொண்டு அதற்குக் கைமாறாக, தன் தெய்வீக வாழ்வில் நமக்குப் பங்களித்தார். இந்த உன்னத மறையுண்மை, கடவுள் நம் மீது கொண்டிருக்கும் அன்பின் ஆழத்தையும் உண்மைத்தன்மையையும் வெளிப் படுத்தி நிற்கிறது.
   இறைவார்த்தையின் உண்மைகளை ஏற்று நம் அன்றாட வாழ்வை மேம்படுத்தும் விசுவாசத்தில் நாம் இறைவனுக்குப் பதிலுரைக்க இம்மறையுண்மை அழைப்பு விடுக்கிறது. இறைவன் மனுவுருவெடுத்த மறையுண்மை குறித்து நாம் ஆழமாக சிந்திக்கும்போது, கிறிஸ்துவில் நாம் புதிய ஆதாமைப் பார்க்கிறோம். இறைமகன், ஒரு முழுநிறைவான மனிதனாக புதுப்படைப்பைத் தொடங்கி வைக்கிறார். இறைச்சாயலை நமக்கு மீண்டும் பெற்றுத்தருவதோடு, நம் அழைப்பையும் மேன்மைமிகு மனித மாண்பையும் நமக்கு வெளிப்படுத்துகிறார். மனுவுரு எனும் மறையுண்மை குறித்து இந்த கிறிஸ்துமஸ் காலத்தின் இறுதி நாட்களில் ஆழமாக சிந்தித்து வரும் நாம், இறைவனின் மகிமை எனும் ஒளியில் முழுமையான மகிழ்வைக் கண்டு, மனிதனாக உருவெடுத்த இறைமகனின் திருவுருவுக்கு ஒத்த வகையில் மேலும் சிறப்பான விதத் தில் மாறுவோமாக!
   இவ்வாறு தன் புதன் பொதுமறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, அனைவருக் கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.