Sunday, January 13, 2013

ஜனவரி 13, 2013

கடவுளின் குழந்தையாக வாழ்வதன் அழகை
மீண்டும் கண்டறிய வேண்டும் - திருத்தந்தை

   ஆண்டவரின் திருமுழுக்கு விழாவை சிறப்பிக்கும் இன்று, வத்திகானில் உள்ள சிஸ்டைன் சிற்றாலயத்தில் நிகழ்த்திய திருப்பலியில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் 20 குழந்தைகளுக்கு திருமுழுக்கு வழங்கினார். அதன் பிறகு, வத்திக்கான் சதுக்கத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு அவர் பின்வருமாறு மூவேளை செப உரை வழங்கினார்.
அன்பு சகோதர சகோதரிகளே,
   திருக்காட்சிக்கு பின் வரும் இஞ்ஞாயிறன்று கிறிஸ்து பிறப்பு காலம் முடிவடைகிறது: ஒளியின் காலம், மனிதகுலத்தின் மீது புதிய சூரியனாக தோன்றியிருக்கும் கிறிஸ்துவின் ஒளி, தீமை மற்றும் அறியாமையின் இருளை அகற்றுகிறது. இன்று நாம் இயேசுவின் திருமுழுக்கு விழாவைக் கொண்டாடுகிறோம்: பிறப்பின் மறைபொருளில் கன்னி மரியாவின் மகனாக, குழந்தையாக சிந்தித்தவரை, ஒரு வளர்ந்த இளைஞராக யோர்தான் நதியில் காண்கிறோம். கிழக்கத்திய மரபு சான்று பகர்வது போன்று, நீரும் பிரபஞ்சம் முழுவதுமே இவ்வாறு புனிதம் அடைந்தது.
   ஆனால் பாவ நிழல் இல்லாத இயேசு, ஏன் யோவானிடம் திருமுழுக்கு பெற வேண்டும்? மெசியாவின் வருகைக்காக தயாரிக்க விரும்பிய பெரும்பாலான மக்களோடு இணைந்து, தபம் மற்றும் மனமாற்றத்தின் அடையாளத்தை நிறைவேற்ற விரும்பினார். இந்த செயலே இயேசுவின் பொது வாழ்வைக் குறிக்கிறது, உன்னத கடவுளிடம் இருந்து இறங்கி வந்த மனுவுருவான நிகழ்வுடன் பொருந்துச் செல்கிறது.
   கடவுளின் இந்த கீழ்நோக்கிய இயக்கத்தை ஒரு வார்த்தையில் சுருக்கி கூறலாம்: அன்பு, அது கடவுளின் பெயர். திருத்தூதர் யோவான் இவ்வாறு எழுதுகிறார்: "நாம் வாழ்வு பெறும் பொருட்டுக் கடவுள் தம் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். இதனால் கடவுள் நம்மீது வைத்த அன்பு வெளிப்பட்டது. அவர் நம்மீது அன்புகொண்டு தம் மகனை நம் பாவங்களுக்குக் கழுவாயாக அனுப்பினார்" (1 யோவான் 4:9-10). எனவேதான், இயேசுவின் பொது வாழ்வில் முதல் செயலாக, "இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்" (யோவான் 1:29) என்ற யோவானிடம் திருமுழுக்கு பெற்ற நிகழ்வு உள்ளது.
   "இயேசு திருமுழுக்குப் பெற்று, இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தபோது வானம் திறந்தது. தூய ஆவி புறா வடிவில் தோன்றி அவர்மீது இறங்கியது. அப்பொழுது, 'என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகிறேன்' என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது" என்று நற்செய்தியாளர் லூக்கா (3:21-22) குறிப்பிடுகிறார்.
   கடவுளின் மகனான இந்த இயேசு தந்தையின் அன்பு திருவுளத்துக்கு முழுமையாக உட்படுத்தினார். இப்போது இறங்கி வந்து அருட்பொழிவு செய்த அதே தூய ஆவியின் வல்லமையால், இந்த இயேசு சிலுவையில் இறந்து உயிர்த்தெழுந்தார். இந்த இயேசு, கடவுளின் மகனாக அன்பில் வாழ விரும்பிய புதிய மனிதர்; உலகின் தீய முகத்தில் தாழ்ச்சி மற்றும் பொறுப்புணர்வின் வழியைத் தேர்ந்தெடுத்து, தனது சொந்த வாழ்வை உண்மைக்காகவும் நீதிக்காகவும் கையளித்தார்.
   இப்படி வாழ்வதுதான் கிறிஸ்தவ வாழ்வு, இத்தகைய வாழ்வு மறுபிறப்பை உள்ளடக்கியது: மேலிருந்து, கடவுளிடம் இருந்து, அருளால் பிறப்பது. இந்த மறுபிறப்பே திருமுழுக்கு, மனிதர் புதிய வாழ்வை உருவாக்குவதற்காக கிறிஸ்துவால் இது திருச்சபைக்கு வழங்கப்பட்டது. புனித ஹிப்போலிட்டசின் பழமை வாய்ந்த எழுத்துக்கள் இவ்வாறு கூறுகின்றன: "இந்த மறுபிறப்பின் முழுக்கில் விசுவாசத்தோடு நுழைபவர், அலகையை விடுத்து கிறிஸ்துவின் பக்கத்தில் இருக்கிறார், பகைவனை மறுத்து கிறிஸ்துவை கடவுளாக கண்டு கொள்கிறார், அடிமைத்தளையை களைந்து, தத்துப் பிள்ளைக்குரிய உடையை அணிந்து கொள்கிறார்."
   பாரம்பரிய முறைப்படி, இன்று காலை கடந்த மூன்று, நான்கு மாதங்களுக்குள் பிறந்த நிறைய குழந்தைகளுக்கு திருமுழுக்கு வழங்கிய மகிழ்ச்சியை அனுபவித்தேன். புதிதாக பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் இந்த நேரத்தில் எனது செபத்தையும் ஆசீரையும் உரித்தாக்குகிறேன். சிறப்பாக ஒவ்வொருவரும் அவரது சொந்த நிலை வாழ்வுக்கு வழியைத் திறக்கும் ஆன்மீக மறுபிறப்புக்கான திருமுழுக்கை நினைவுகூர ஊக்குவிக்கிறேன். ஒவ்வொரு கிறிஸ்தவரும், இந்த விசுவாச ஆண்டில் மேலிருந்தும், கடவுளின் அன்பில் இருந்தும் பிறப்பது மற்றும் கடவுளின் குழந்தையாக வாழ்வதன் அழகை மீண்டும் கண்டறிய வேண்டும்.