Wednesday, February 8, 2012

பிப்ரவரி 8, 2012

புதன் மறைபோதகம்: இயேசுவின் சிலுவை அறைகூவல்
நம்பிக்கை இழப்பின் வெளிப்பாடல்ல - திருத்தந்தை

   பலத்த பனிப்பொழிவுக்கு பின் மக்களின் இயல்பு வாழ்வு ஓரளவு திரும்பியுள்ள நிலையில், திருத் தந்தையின் புதன் பொது மறைபோதகத்தில் பங்கு கொள்ள வந்திருந்த திருப்பயணிகளின் கூட்டமும் வத்திக்கானின் பாப்பிறை ஆறாம் பவுல் மண்டபத் தினை நிறைத்திருந்தது. "என் இறைவா, என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்" என இயேசு சிலுவையில் தொங்கியபோது விடுத்த அறைகூவல் குறித்து இன்று தியானிப்போம் என இவ்வார புதன் பொது மறைபோத கத்தைத் துவக்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
    நண்பகலில் நாடெங்கும் இருள் உண்டாகி அது மூன்று மணி நேரம் நீடித்த பின் இவ்வார்த்தைகளை உச்சரிக்கிறார் இயேசு. இருள் என்பது விவிலியத்தில் இருவேறு அடையாளங்களாக காட்டப்பட்டுள்ளது. தீயோனின் சக்தியின் அடையாளமாக பல வேளைகளில் காட்டப்பட்டுள்ள இருள், இறைவனின் மறைபொருளான பிரசன்னத்தை வெளிப்படுத்தவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு உதாரணமாக,  இறைவன் மலை மீது மோசேக்கு தோன்றியபோது மோசே இருண்ட மேகத்தால் சூழப்பட்டதையும், கல்வாரியில் இயேசு இருளால் சூழப்பட்டதையும் குறிப்பிடலாம். தந்தை இறைவனின் இருப்பு அங்கு இல்லை என்பது போல் தோன்றினாலும், சிலுவையில் அன்பு காணிக் கையான மகனின் மீது அவரின் அன்புப் பார்வை மறைவடக்கமான வழியில் இருந்தது.
   சிலுவையில் தொங்கிய வேளையில் இயேசுவின் இந்த அறைகூவல் நம்பிக்கை இழப்பின் வெளிப்பாடல்ல என்பதை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். திருப் பாடல் 22ன் துவக்க வார்த்தைகளான இவை, அந்தத் திருப்பாடலின் முழுக் கருப்பொரு ளையும் வெளிப்படுத்துபவைகளாக உள்ளன. அதாவது, எத்தனை துன்பங்கள் மத்தி யிலும் இஸ்ரயேல் மக்கள் கொண்டிருக்கும் இறை நம்பிக்கையையும், அவர்களிடையே காணப்படும் இறைப் பிரசன்னத்தையும், அவர்களின் கூக்குரலுக்கு அவர் செவிமடுத்து பதிலளிப்பதையும் இந்த திருப்பாடல் உணர்த்துகிறது. இறக்கும் தறுவாயில் இயேசு செபித்த இந்த செபம், நாமும் துன்புறும் நம் சகோதர சகோதரிகளுக்காக நம்பிக்கை யுடன் செபிக்க வேண்டும் எனக் கற்றுத் தருகிறது. இந்தச் செபத்தின் வழி நம் சகோதர சகோதரிகளும், தங்களை எப்போதும் கைவிடாத இறைவனின் அன்பு குறித்து அறிந்து கொள்வார்களாக.
   இவ்வாறு தன் புதன் பொது மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, கடந்த வாரத் தில் ஐரோப்பாவில் இடம்பெற்ற பெரும் பனிப்பொழிவால் விளைந்த பெரும் இடர் பாடுகளையும் பொருட்சேதங்களையும் குறிப்பிட்டு, இதனால் பாதிக்கப்பட்டுள்ள மக்க ளுடன் தன் அருகாமையை வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்தார். இந்தக் கடும் குளிரினால் உயிரிழந்தவர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் செபிக்குமாறு அனைவருக்கும் அழைப்புவிடுத்த திருத்தந்தை, இந்தத் துன்ப காலத்தில், துயருறும் மக்களுக்கு மற்றவர்களின் ஒருமைப்பாட்டுணர்வு, தாராள மனப்பான்மை போன்றவை களின் அவசியம் குறித்தும் வலியுறுத்தினார். இறுதியில் அனைவருக்கும் தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை.