Sunday, February 26, 2012

பிப்ரவரி 26, 2012

தவக்காலம் கடவுளுடனான நமது உறவைப்
புதுப்பித்து பலப்படுத்தும் காலம் - திருத்தந்தை

   வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலய வளாகத்தில் இஞ்ஞாயிறு மதியம் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், பின் வரும் கருத்துக்களை எடுத்துரைத்தார்.
   தவக்காலத்தின் முதல் ஞாயிறான இன்று, திரு முழுக்கு யோவானிடமிருந்து யோர்தான் நதியில் திருமுழுக்கு பெற்ற பின்பு இயேசு பாலைநிலத்தில் சோதிக்கப்பட்டதை பார்க்கிறோம். மத்தேயு, லூக்கா நற்செய்திகளைப் போலன்றி, மாற்கு நற்செய்தியில் இது சுருக்கமாக காணப்படுகிறது. நாம் பேசும் பாலைநிலம் என்பது வெவ்வேறு அர்த்தங்களை கொண்டது. இது கைவிடப்பட்ட, தனிமையான நிலையை, சோதனை பலம் பெறுகின்ற எந்த ஆதரவும் நிச்சயமும் இல்லாத மனிதனின் பலவீனமான இடத்தைச்  சுட்டிக்காட்டுகிறது. இஸ்ரயேல் மக்கள் எகிப்தில் இருந்து தப்பிய பிறகு, அடைக்கலமாகவும் உறைவிடமாகவும் கொண்ட பாலைநிலத்தையும் இது குறிக்கிறது; அங்கே நாம் இறைவனின் பிரசன்னத்தை சிறப்பான வகையில் உணர்கிறோம். பாலை நிலத்தில் இயேசு நாற்பது நாள் இருந்தார்; அப்போது சாத்தானால் சோதிக்கப்பட்டார். புனித பெரிய லியோ பின்வருமாறு கூறுகிறார்: "ஆண்டவர் அவரது உதவியால் நம்மைப் பாதுகாக்கவும் தனது எடுத்துக்காட்டால் நமக்கு கற்பிக்கவும், சோதிப்பவனின் தாக்குதலை விருப்பத்துடன் ஏற்றுக்கொண்டார்."
   இந்த பகுதி நமக்கு கற்பிப்பது என்ன? 'கிறிஸ்து வழி வாழ்வு' புத்தகத்தில் நாம் வாசிப்பது போல, "அவன் வாழும் காலமெல்லாம், எப்பொழுதுமே மனிதன் சோத னையில் இருந்து முழுமையாக விடுபடுவது இல்லை... ஆனால் பொறுமை மற்றும் உண்மையான தாழ்ச்சியோடு இருக்கும்போது, எந்த எதிரியை விடவும் பலமானவர்க ளாக நாம் மாற முடியும், பொறுமையும் தாழ்ச்சியும் ஒவ்வொரு நாளும் ஆண்டவரைப் பின்பற்றவே. அவருக்கு வெளியிலோ அல்லது அவரது இல்லாமை யிலோ அல்ல, அவரில் அவரோடு நம் வாழ்வைக் கட்டியெழுப்ப கற்றுக்கொள்ள வேண்டும். ஏனெ னில் அவரே உண்மை வாழ்வின் ஆதாரம். கடவுளை விலக்கவும், நம் வாழ்வையும் உலகையும் கைவசப்படுத்தவும், முழுமையாக நம் சொந்த திறமைகளையே நம்பி இருக்கவும் மனித வரலாற்றில் சோதனை எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது.
   "காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது" என்று இயேசு அறிவித்தார். தன்னில் புதிதாக நிகழ்ந்த ஒன்றை அவர் அறிவிக்கிறார்; எதிர்பாராத வகையில் ஒரு தனிப்பட்ட நெருக்கத்துடனும், முழுமையான அன்புடனும் கடவுள் மனிதருடன் பேசுகிறார். பாவத்தை தன் மேல் ஏற்று, தீமையை வெற்றிகொள்ளவும், மனிதரை கடவுளின் உலகிற்கு திரும்பக் கொண்டு சேர்க்கவும் கடவுள் மனித உரு ஏற்று, மனிதரின் உலகில் நுழைகிறார். இந்த சிறந்த கொடைக்கான அறிவிப்புடன் ஒரு கோரிக்கையும் இணைந்திருந்தது. உண்மையில் இயேசு, "மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்" என்றார். இது கடவுளில் நம்பிக்கை கொள்வதற்கும், அவரது விருப்பத் தின்படி நமது வாழ்வை மாற்றி அமைப்பதற்கும், நம் அனைத்து செயல்களையும் சிந்தனைகளையும் நன்மையின் பக்கம் திருப்புவதற்குமான அழைப்பாகும். தவக் காலம் என்பது அன்றாட செபம், தவ முயற்சிகள், சகோதரத்துவ பிறரன்பு பணிகள் ஆகியவற்றால் கடவுளுடனான நமது உறவை புதுப்பித்து பலப்படுத்தும் காலம்.
   நமது தவக்காலப் பயணத்தில் நம்மோடு இருந்து பாதுகாக்குமாறு தூய கன்னி மரியாவை ஆர்வமுடன் வேண்டிக்கொள்வோம். இயேசு கிறிஸ்துவின் வார்த்தை களை நம் உள்ளங்களிலும் வாழ்விலும் பதியச்செய்து, நம்மை அவரிடம் திருப்ப மரியா நமக்கு உதவி செய்வாராக! இன்று மாலை நான் ரோமன் கியூரியாவில் உள்ள எனது உடன்பணியார்களோடு தொடங்கும் ஆன்மீகப் பயிற்சி வாரத்துக்காக உங்கள் செபங்களை வேண்டுகிறேன். தவக்காலத்தின் இந்த தொடக்க நாட்களில் செபம், நோன்பு, தர்மம் ஆகியவற்றின் மூலம் இப்புனித காலத்தின் ஆர்வத்தைப் பெற்றுக் கொள்ள உங்களை அழைக்கிறேன். இதன் வழியாக ஆண்டவரின் துணையோடு, இந்த தவக்காலத்தின் இறுதியில் சிலுவை மீதான அவரது வெற்றியை நாம் தகுதியுடன் கொண்டாட முடியும். கடவுள் உங்கள் அனைவரையும் நிறைவாக ஆசீர்வதிப்பாராக!