Wednesday, January 25, 2012

ஜனவரி 25, 2012

புதன் மறைபோதகம்: கிறிஸ்துவைப் பின்பற்றுவோர்
அனைவரின் ஒன்றிப்புக்காக செபிப்போம் - திருத்தந்தை

   இத்தாலியின் உரோம் நகரில் வழக்கமான குளிர் இல்லையெனினும் வாடைக்காற்று வீசி, குளிரின் தாக்கத்தை தந்து கொண்டு இருப்பதன் காரணமாக, திருத்தந்தை ஆறாம் பவுல் மண்டபத்திலேயே திருப் பயணிகளைச் சந்தித்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட், கிறிஸ்தவ செபம் குறித்த தன் சிந்தனைகளை இன் றைய மறைபோதகத்தில் தொடர்ந்தார்.
   இறுதி இரவு உணவின் போது இயேசு வழங்கிய குருத்துவச் செபம் குறித்து இன்று நோக்குவோம். யோம் கிப்பூர் எனும் யூதர்களின் பரிகாரத் திருவிழாவின் பின்னணியில், குருவும் பலிப்பொருளுமான இயேசு, தான் ஒப்புரவுப் பலியாகும் வேளையில் தந்தை தன்னை மகிமைப்படுத்துவாராக எனச் செபிக்கிறார். தன் சீடர்களைத் தனியாக எடுத்து அவர்களை இவ்வுலகில் தன் பணியைத் தொடர்ந்து நடத்த அனுப்பும் வண்ணம், அவர்களைத் திருநிலைப்படுத்த தந்தையிடம் வேண்டுகிறார் இயேசு.
   திருத்தூதர்களின் போதனை வழி தன் மேல் விசுவாசம் கொள்ளும் அனைவருக்கும் ஒன்றிப்பு எனும் கொடை வழங்கப்பட வேண்டும் எனவும் விண்ணப்பிக்கிறார் இயேசு. ஆகவே, அவரின் குருத்துவ செபமானது, திருச்சபையையும், சீடர் சமூகத்தையும் நிறுவிய ஒன்றாக நோக்கப்படலாம். இந்தச் சீடர் சமூகம், இயேசுவில் கொள்ளும் விசுவாசத்தின் வழி ஒரே குடும்பமாக மாற்றப்பட்டு அவரின் மீட்புப் பணியில் பங்கு பெறுகிறது. 
   ஆண்டவராம் இயேசுவின் குருத்துவச் செபத்தை தியானிக்கும் வேளையில், நாம் நம் திருமுழுக்குத் திருநிலைப்பாட்டில் வளரவும், இந்த உலகிற்கும் நம் அயலா ருக்குமான தேவைகளுக்கென நம் செபங்களைத் திறக்கவும் உதவும் அருளைத் தந்தையாம் இறைவனிடம் வேண்டுவோம். கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தில் நாம் செய்தது போல், கிறிஸ்துவைப் பின்பற்றுவோர் அனைவரிடையேயான கண்ணால் காணக்கூடிய ஒன்றிப்பு எனும் கொடைக்காகச் செபிப்போம். இந்த ஒன்றிப்பைக் காணும் இவ்வுலகம் மானிடமகனிலும் அவரை அனுப்பிய தந்தையிலும் விசுவாசம் கொள்ளும்.
   இவ்வாறு தன் புதன் பொது மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, அனைவ ருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.