Sunday, January 1, 2012

ஜனவரி 1, 2012

இயேசுவின் வழியாக கடவுள் விடுக்கும் அமைதியின் அழைப்புக்கு செவிகொடுங்கள் - திருத்தந்தை

   இன்றைய நாள் தொடங்கிய வேளையில், உரோம் தூய பேதுரு பேராலயத்தில் புத்தாண்டின் முதல் திருப்பலியை நிகழ்த்திய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், மரியா இறைவனின் தாய் பெருவிழா பற்றியும் உலக அமைதி நாள் பற்றியும் மறையுரை வழங்கினார்.
   "மரியா திருச்சபையின் தாயாகவும் எடுத்துக் காட்டாகவும் இருக்கிறார். அவர் விசுவாசத்தினால் இறை வார்த்தையை பெற்று, தன்னை கடவுளுக்கு அர்ப்பணித்தார். மரியாவைப் போன்றே, அன்னை யாம் திருச்சபையும் கடவுளின் ஆசிகளுக்கு இடைநிலையாளராக விளங்குகிறாள்: அவள் இயேசுவைப் பெறுவதில் அதைப் பெற்று, இயேசுவைப் பெற்றெடுப்பதில் அதை வழங்குகிறாள். அவர் உலகினால் வழங்க முடியாத இரக்கமாகவும் அமைதியாகவும் இருக்கிறார்; அப்பத்தின் அளவிலாவது உலகிற்கு அது தேவைப்படுகிறது" என்று திருத்தந்தை கூறினார்.
   "இளையோரை நீதியிலும் அமைதியிலும் பயிற்றுவித்தல்" என்ற மையக்கருத்தில் உலக அமைதி நாளுக்கான செய்தியை வழங்கிய பாப்பிறை, "இந்த காலத்தில், தொழில் நுட்ப அறிவில் மிகவும் முன்னேற்றம் அடைந்துள்ளோம். நிழல்களின் முகத்தில் தெளிவற்றதாக உள்ள இன்றைய உலகின் அடிவானத்தில், நம்பிக்கை உள்ள எதிர் காலத்தை காண உண்மையின் அறிவிலும், அடிப்படை மதிப்பீடுகளிலும், புண்ணியத் திலும் இளையோரைப் பயிற்றுவிக்கும் பொறுப்பு உள்ளது. அனைத்தையும் உள் ளடக்கிய இந்த கல்வியில், நீதியிலும் அமைதியிலும் உருவாக்குதலும் இடம்பெற வேண்டும்" என்று உரைத்தார்.
   நீதியிலும் அமைதியிலும் இளைய தலைமுறையினரை வளர்க்கும் பொறுப்பு குடும்பங்களில் ஆரம்பமாகி, பின்னர் பள்ளிகளிலும், இளையோரை நெறிப்படுத்தும் பல்வேறு அமைப்புக்களிலும் இருக்க வேண்டும் என்ற திருத்தந்தை, அமைதியாக வாழ்வது என்பது இளையோர் சுயமாக விரும்பும் ஒரு நல்ல பண்பு; ஆயினும், உலகின் பல்வேறு எதிர்மறை சக்திகள் இளையோருக்கு அமைதிப் பாதையைக் காட்டத் தவறுவதால், அவர்கள் வன்முறைகளில் ஈடுபடவும் தூண்டுகின்றன என்று சுட்டிக்காட்டினார்.
   "பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்; நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும். மண்ணினின்று உண்மை முளைத்தெழும்; விண் ணினின்று நீதி கீழ்நோக்கும்" என்ற திருப்பாடல் 84ன் வரிகளை மேற்கோள்காட்டி தனது மறையுரையை நிறைவு செய்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட், "தன் மகன் இயேசு கிறிஸ்துவில் கடவுள் நம்மோடு பேசியிருக்கிறார்... அக்குரல் அமைதியைப் பற்றி பேசுகிறது... கடவுள் கூறுவதற்கு செவிகொடுங்கள்" என்று அழைப்பு விடுத்தார்.