Sunday, November 18, 2012

நவம்பர் 18, 2012

இறைவனை நமது நம்பிக்கைக்கு அடித்தளமாகக் கொண்டு வாழ நாம் அழைக்கப்பட்டுள்ளோம் - திருத்தந்தை

   புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான விசுவாசிகளுக்கு மூவேளை செப உரையை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இந்த ஞாயிறு வழங்கப்பட்டுள்ள மாற்கு நற்செய்தியை மையப்படுத்தி தன் கருத்து களை எடுத்துரைத்தார்.
   விவிலிய வார்த்தைகளைப் பயன்படுத்தி, இறுதி காலத்தைக் குறித்து கூறப்படும் தவறான அர்த்தங் களை ஒதுக்கிவைத்து, இயேசுவின் கூற்றில் நாம் உண்மையான அர்த்தத்தைக் காணவேண்டும். இறுதி காலத்தைப் பற்றிய தேவையற்ற கணிப்புகளிலிருந்து விலகி, இன்றும், நாளையும், எப்போதும் நல்வழியைத் தேடவேண்டும் என்ற அறிவுரையை இயேசு இன்றைய நற்செய்தியில் வழங்குகிறார். பழைய ஏற்பாட்டிலிருந்து இயேசு பல்வேறு உருவகங் களைப் பயன்படுத்தினாலும், சாவிலிருந்து உயிர்ப்புக்குச் செல்வதற்கு, தன்னை ஒரு வழியாகக் காட்டினார்.  நம்மைச்சுற்றி முரண்பட்டப் பல நிகழ்ச்சிகள் நடந்தாலும், நமது செயல்பாடுகளுக்கு நாமே பொறுப்பு என்றும், இறுதிநாளில் இச்செயல்பாடுகளின் அடிப்படையிலேயே நாம் தீர்வு பெறுவோம். இன்றைய உலகில் நம்மைச் சுற்றி நிகழும் இயற்கைப் பேரிடர்கள், போர்கள் ஆகிய துயர நிகழ்வுகள் நம்மை வருத்தத்தில் ஆழ்த்தினாலும், இறைவனை நமது நம்பிக்கைக்கு அடித்தளமாகக் கொண்டு வாழ நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.
   இவ்வாறு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, இறுதியில் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார்.