Wednesday, April 18, 2012

ஏப்ரல் 18, 2012

புதன் மறைபோதகம்: ஒரே கருத்துடனான ஒன்றிப்பின்
செபமே திருச்சபைக்கு அடிப்படை - திருத்தந்தை

   கடந்த திங்களன்று தனது 85வது பிறந்தநாளை கொண்டாடிய திருத்தந்தையை வாழ்த்த தூய பேதுரு சதுக்கத்தில் கூடியிருந்த 25 ஆயிரம் திருப்பயணி களின் வாழ்த்தொலிகளின் நிறைவில் இன்றைய புதன் மறைபோதகம் வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். ல வாரங்களாக, கிறிஸ்தவ செபம் குறித்தத் தொடரை வழங்கி வரும் திருத்தந்தை, முதல் கிறிஸ்தவர்களின் துன்பங்களுக்கு நடுவே திருத்தூதர்கள் கடவுளை நோக்கி மன்றாடிய 'சிறிய பெந்தகோஸ்து' நிகழ்வு குறித்து நம் பார்வையைத் திருப்புவோம் என்று தன் பொது மறைபோதகத்தைத் துவக்கினார்.
   புனிதர்களான பேதுருவும் யோவானும் கைதுசெய்யப்பட்டு விடுதலைபெற்ற பின்னர், கிறிஸ்தவ சமூகம் அவர்களுடன் செபத்தில் இணைந்து மன்றாடியவுடன், அவர்கள் கூடியிருந்த இடம் அதிர்ந்தது. அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டவர்களாய் கடவுளின் வார்த்தைகளைத் துணிவுடன் எடுத்துக் கூறினர் என திருத்தூதர் பணிகள் நூலின் நான்காம் அதிகாரம் வழியாக அறிய வருகின்றோம். இந்தச் செபம் நமக்கு முதல் கிறிஸ்தவ சமூகத்தின் ஒன்றிப்பைக் காட்டுகிறது. அபாயமும், அச்சுறுத்தலும், துன்பங்களும் சூழ்ந்த வேளையிலும், அவர்கள் தங்களை காத்துக்கொள்ளும் வழிவகைகளைத் தேடாமல் ஒன்றிணைந்து செபித்தனர். ஒரே கருத்துடனான ஓர் ஒன்றிப்பின் செபம். இத்தகைய செபம்தான் எப்பொழுதுமே திருச்சபைக்கு அடிப்படை. அந்த சமூகம் எதைப் பற்றியும் பயப் படவோ, பிரிந்துபோகவோ இல்லை. இதுவே நம்பிக்கை கொண்டோர் சோதிக்கப் பட்டபோது நிகழ்ந்த முதல் புதுமை.
   திருச்சபை துன்புறுத்தல்களின் மத்தியிலும் பாதுகாப்பைத் தேடாமல், இறை வார்த்தையை துணிவோடு எடுத்துரைக்கவே விரும்புகிறது. அது விசுவாசத்தைப் பறைசாற்றும் துணிவை இழக்காமல் இருக்க செபிப்பதுடன், முதலில் இயேசுவின் திருப்பாடுகளிலும், மரணத்திலும், உயிர்ப்பிலும் துன்புறுத்தல்களுக்கான வழியை விசுவாசத்தின் ஒளியில் கண்டுகொள்கிறது. முதல் கிறிஸ்தவர்களின் சமூகம் ஒரு சாதாரண அமைப்பாக இல்லாமல், கிறிஸ்துவில் வாழ்ந்த குழுமமாக இருந்தது. ந்த சமூகம் அனுபவித்த துன்புறுத்தல்கள் இறைவனின் திட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது. மறைநூலை கிறிஸ்துவின் மறைபொருளின் ஒளியில் தியானித்து செபிக்கும்போது, மீட்புத் திட்டத்தின் வழியாக உணரப்பட்ட இறைவனின் தனிப்பட்ட செயல்பாட்டை இன்றைய சூழலிலும் கண்டுணர முடியும்.
   முதல் கிறிஸ்தவ சமூகத்தின் செபம், தனிப்பட்ட மற்றும் கூட்டு வரலாற்றை முன்னோக்கி வாசிக்க, அதாவது கடவுளுக்கு உண்மையுள்ளவர்களாக இருக்க நமக்கு உதவுகிறது. நற்செய்தியை எடுத்துரைக்கும் பணியில் நமக்கு ஆற்றலைத் தந்து நம்முடன் துணை வருமாறு இறைவனை இறைஞ்சுகிறது. ஆண்டவர் நம் செபங்களை நமது சிந்தனைகளின் அடிப்படையில் இல்லாமல், அவரது அன்பு திருவுளத்தின்படி உணர்ந்து அங்கீகரிக்க, நமது இதயத்தை வெதுவெதுப்பாக்கி மனதிற்கு ஒளியூட்டும் தூய ஆவியாரின் கொடையைக் கேட்கும் வேண்டுதலை நாம் புதுப்பிக்க வேண்டும். இயேசு கிறிஸ்துவின் ஆவியாரால் வழிநடத்தப்படுகின்றபோது, வாழ்வின் அனைத்து சூழ்நிலைகளிலும் நாம் அமைதி, துணிவு மற்றும் மகிழ்ச்சியோடு வாழ முடியும். நமது வேதனைகளில் புனித பவுலோடு இணைந்து, துன்பம் பொறுமையைத் தரும் என்றும், பொறுமை சோதிக்கப்பட்ட நல்லொழுக்கத்தையும், நல்லொழுக்கம் நம்பிக்கையையும் தரும்; நம்பிக்கை ஏமாற்றம் தராது என்றும் அறிவோம். ஏனெனில், நமக்கு கொடை யாக அளிக்கப்பட்ட தூய ஆவியாரின் வழியாக இறைவனின் அன்பு நம் இதயங்களில் பொழியப்பட்டுள்ளது.
   இவ்வாறு தனது மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.